பகைவனிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது மன்னனின் கடமை

வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
பேர்ந்திவ் வுலகைப் பிறர்க்கொள்ளத் தாங்கொள்ளப்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே. – (திருமந்திரம் – 245)

விளக்கம்:
மன்னனால் நல்லமுறையில் காக்கப்படும் நாட்டின் மக்கள் அறவழியிலே நிற்பார்கள். பகை நாட்டு மன்னன் தன் நாட்டைக் கைப்பற்ற வந்தால், தன் மக்களை அவர்களிடம் இருந்து காக்க வேண்டியது அந்நாட்டு மன்னனின் கடமையாகும். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னை மட்டும் காத்துக்கொள்ள நினைக்கும் மன்னன், தன் பசிக்காக பிற உயிர்களைக் கொல்லும் புலியைப் போல தீங்கு நிறைந்தவன் ஆவான்.


மன்னனுக்குச் சேர வேண்டிய வரியின் அளவு

திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுககு ஆறில் ஒன் றாமே. – (திருமந்திரம் – 244)

விளக்கம்:
ஒரு நாட்டின் மன்னன் முத்தியும் செல்வமும் பெற வேண்டினால், மறந்தும் அறநெறியை விட்டு விலகாது தனது கடமைகளைச் செய்ய வேண்டும். சிறந்த கடலால் சூழப்பட்ட அவனுடைய நாட்டில் உள்ள செய்தொழில் அனைத்திலும் அரசனுக்கு சேர வேன்டிய வரியின் அளவு, வருவாயில் ஆறில் ஒரு பங்கு ஆகும்.


ஆவையும் பாவையும் மன்னன் காக்க வேண்டும்

ஆவையும் பாவையும் மற்றுஅற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. – (திருமந்திரம் – 243)

விளக்கம்:
ஒரு மன்னன் தன் நாட்டில் உள்ள பசுக்கள், பெண்கள், அற வழியில் நிற்கும் நல்லவர்கள், தேவர்களாலும் போற்றப்படும் உண்மையான துறவிகள் ஆகியவர்களைக் காக்க வேண்டும். காக்கவில்லை என்றால் அந்த மன்னன் மறுமையில் மீள முடியாத நரகத்தை அடைவான்.


நரபதியின் கடமை

ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர் தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே. – (திருமந்திரம் – 242)

விளக்கம்:
ஞானமில்லாதவர்கள் சடை, குடுமி, பூணூல் போன்ற அலங்காரங்களைச் செய்து கொண்டு ஞானிகளைப் போல நடிக்கிறார்கள். அப்படி நடிப்பவர்களை அந்நாட்டின் மன்னன் உண்மையான ஞானிகளைக் கொண்டு சோதித்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாட்டில் உண்மையான ஞானம் விளங்கும்.

நரபதி – மன்னன்


பேர்த்துணர்!

மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடுஒன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்து
ஆடம் பரநூல் சிகையறுத் தால்நன்றே. – (திருமந்திரம் – 241)

விளக்கம்:
தன்னுடைய அறியாமை நீங்கப் பெறாமல் குடுமி, பூணூல் முதலியவற்றைக் கொண்டவர்கள் வாழும் நாட்டில் வளமெல்லாம் குறைந்து போகும். பெருவாழ்வு கொண்ட மன்னனும் ஒன்றும் இல்லாமல் போவான். அதனால் பூணூலையும் குடுமியையும் வெறும் ஆடம்பரத்துக்காக அணிபவர்கள் அந்தக் கோலத்தை நீக்குவது நல்லது.


மன்னனின் கடமை

வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாமே. – (திருமந்திரம் – 240)

விளக்கம்:
இந்த உலகில் நம் அனைவருக்குமே ஆளுக்கொரு வேடம் அளிக்கப்பட்டிருக்கிறது. கொண்ட வேடத்திற்கு என்று சில கடமைகள் உண்டு. கடமையைச் செய்யாமல் வெறும் வேடம் மட்டும் போட்டுக்கொள்வதால் என்ன பயன்? தமது கடமைகளைச் செய்யாதவர்களை, அந்நாட்டின் வலிமை மிகுந்த மன்னன் நெறிப்படுத்த வேண்டும். அது மன்னனின் கடமை. மன்னன் தனது இந்தக் கடமையைச் சரிவரச் செய்தால், அவனுக்கு வீடுபேறு கிடைக்கும்.


ஆட்சி செய்யும் முறை

நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தோறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாள்தோறும் நாடு கெடுமூட நண்ணுமால்
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே. – (திருமந்திரம் – 239)

விளக்கம்:
ஒரு நாட்டின் மன்னன் தினமும் தன்னுடைய ஆட்சி நன்னெறிப்படி நடக்கிறதா என்பதை ஆராய்ந்து, தினமும் நீதிமுறைகளின் படி தவறுகளைச் சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாள்தோறும் நாட்டின் வளம் குன்றும், மக்களிடையே அறியாமை வளரும். மன்னனின் செல்வம் நாள்தோறும் குறைந்து அவன் புகழும் மங்கி விடும்.


கல்லாத அரசனை விட காலன் நல்லவன்

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகநில் லானே. – (திருமந்திரம் – 238)

விளக்கம்:
கல்வி இல்லாத அரசனும், உயிரைப் பறிக்கும் யமனும் ஒப்பிட்டு பார்த்தால் ஒன்றே ஆவர். சொல்லப்போனால் கல்லாத அரசனை விட அந்த யமன் மிகவும் நல்லவன். கல்வி இல்லாத அரசன் இவர் நல்லவர், இவர் கெட்டவர் என்று ஆராய்ந்து பார்க்க மாட்டான். அறவழி விசாரணை ஏதும் இன்றி கொல் என்று ஆனையிடுவான். ஆனால் அற வழியில் நிற்கும் நல்லவர்களை, யமன் அவ்வளவு லேசில் அணுக மாட்டான்.

(ஓரான் – ஆராய மாட்டான்)


புண்ணிய போகன்

தானே விடும்பற்று இரண்டும் தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓர்ஆ குதிஅவி உண்ணவே. – (திருமந்திரம் – 237)

விளக்கம்:
அந்தணர்களின் சிவ சிந்தனையால் அவர்களின் அகப்பற்று, புறப்பற்று இரண்டும் அகலும். அகங்காரம் நீங்கும். சிவனைத் தவிர வேறு எதையும் அவர்கள் சிந்தை நாடாது. பிரணவத்தில் ஓர்ந்து அவர்கள் செய்யும் ஆகுதியை உண்ண தாமரை மலரில் வீற்றிருக்கும் அந்த புண்ணிய போகன் பிரமன் வருவான்.


சிறப்புடைய அந்தணர்கள்

ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
சென்று வணங்குந் திருவுடை யோரே. – (திருமந்திரம் – 236)

விளக்கம்:
நம்முடைய பிராணன் உள்மூச்சு, வெளிமூச்சு ஆகியவற்றுடன் ஒருங்கே இயங்கும் காலத்தில் நாம் நலமுடன் இருப்போம். மகிழ்ச்சியாக நல்லதையே பேசுவோம். அப்படி நலமுடன் இருக்கும் காலத்திலேயே அந்தணர்கள் வெற்றி தரும் சிவபெருமானை நாடி இருப்பார்கள். அவனைத் தேடிச்சென்று வணங்குவார்கள்.