தேவர்களும் அறியாத இன்ப உலகம்

அளித்தான் உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே.  – (திருமந்திரம் – 123)

விளக்கம்:
சிவபெருமான் இந்த உலகம் முழுவதும் தானே நிறைந்துள்ள உண்மையை நமக்கு உணர்த்தி அருளினான். தேவர்களும் அறியாத இன்ப உலகை நமக்குத் தந்தான். சிதம்பரம் கனக சபையில் நடனம் செய்யும் தன்  திருவடியை நாம் வணங்க அளித்தான். எல்லாவற்றிற்கும் மேலாக இன்பமயமான அருள்வெளி ஒன்று நமக்கெல்லாம் தந்தானே!


சிவயோகம்!

சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாராது அவன்பதி போக
நவயோகம் நந்தி நமக்களித் தானே. – (திருமந்திரம் – 122)

விளக்கம்:
சிவயோகத்தை விரும்புவோர் இறைவன் அறிவுப் பொருள் என்பதையும், இந்த உலகம் அறிவற்ற பொருள் என்பதையும் விவேகத்தால் புரிந்து கொள்ள வேண்டும்.  தீமை அளிக்கும் யோக வழிகளில் செல்லாமல், தவயோகம் செய்து வந்தால் சிவ ஒளியை உள்ளே உணரலாம். அந்த நந்தி பெருமான், தன்னுடைய வீட்டை நாம் அடையும்படியாக, புதுமையான யோகத்தை நமக்கு அளித்தான். அந்த யோக வழியில் சென்று நாம் வீடு பேறு அடையலாம்.

(சித்து – அறிவுப் பொருள் (இறைவன்),  அசித்து – அறிவற்ற பொருள் (உலகம்), பதி – வீடு, நவ யோகம் – புதுமையான யோகம்)


சிவயோகியர்!

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே. – (திருமந்திரம் – 121)

விளக்கம்:
முந்தைய பாடலில் சொல்லப்பட்டது போல, பிறவிகளுக்குக் காரணமான தீவினைகள் அழியப் பெற்றவர்கள் மேலான நிலை அடைந்து சுத்தமான ஆன்மா ஆவார்கள். அந்த சிவயோகியர்கள், புலன்களும் உயிரும் ஒன்றாக உள்ள உடல் கொண்டிருந்தாலும், புலன்களின் வழியில் மனம் செல்லாது இருப்பார்கள். அதாவது உடலுடன் இருக்கும் போதே செத்தவரைப் போல இருப்பார்கள்.


வறுக்கப்படும் தீவினைகள்

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே. – (திருமந்திரம் – 120)

விளக்கம்:
நம்முடைய செயல்களில் தீவினைகள் நிறைய கலந்துள்ளன. பசும்பாலில் கலந்துள்ள நீரைப் பிரிக்கும் அன்னப் பறவையைப் போல, நம் சிவபெருமான் சிதம்பரத்தில் உள்ள கனகசபையில் தன்னுடைய ஒப்பில்லாத நடனத்தினால் நம்முடைய தீய வினைகளைப் பிரித்து விடுகிறான். நம்முடைய பிறப்புகளுக்கு காரணமான தீய வினைகள், தீயில் வறுக்கப்பட்ட வித்துக்களாகி விடுகின்றன. வறுக்கப்பட்ட வித்துக்கள் முளைக்காது, அது போல நமக்கு மறுபிறவி என்பது இராது.


குருபரன் நல்வழி காட்டுவான்!

அறிவுஐம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபர னாமே.  – (திருமந்திரம் – 119)

விளக்கம்:
ஒருவன் ஆழம் தெரியாமல் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதைப் போல, நம்முடைய அறிவு ஐம்புலன்களில் மாட்டிக் கொண்டு மயங்கி நிற்கிறது. நம்முடைய குருநாதனான சிவபெருமான் நமக்கு தெளிவான வழி காட்டுவான். அப்போது நம்முடைய சிற்றறிவு பேரறிவுடன் சென்று கலந்தது போல் ஆகும்.


நம் பக்குவம் அறிந்து அருள்வான்

மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித்
தலங்கள்ஐந் தானற் சதாசிவ மான
புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே.  – (திருமந்திரம் – 118)

விளக்கம்:
ஐந்து தலங்களைக் கொண்ட நம் சதாசிவன், நம்முடைய ஐந்து விதமான அழுக்குகளையும் நீக்கி அருள்கிறான். சிற்றம்பலத்தில் ஆடும் அந்த நந்தி பெருமான், நம் மனம் வெளியே வேண்டாவதற்றை நோக்கிச் செல்லாதவாறு காக்கிறான். நம் உள்ளே உயிரின் உயிராய் எழுந்தருளி, நம் பக்குவம் அறிந்து அருள் செய்கிறான்.

ஐந்து மலங்கள் – ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி.  ஐந்து தலங்கள் – சிவசாதாக்கியம், அமூர்த்தி சாதாக்கியம், மூர்த்தி சாதாக்கியம், கருத்துரு சாதாக்கியம், கன்ம சாதாக்கியம்.


சிவன் பார்வை பட்டால் போதும்

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.   – (திருமந்திரம் – 117)

விளக்கம்:
நம்முடைய சீவனும், அதைச் சூழ்ந்துள்ள மும்மலமாகிய பற்றும், சூரிய காந்தக் கல்லும், அதைச் சுற்றியுள்ள பஞ்சும் போன்றவை ஆகும். சூரிய காந்தக் கல் தன்னை சூழ்ந்துள்ள பஞ்சைச் சுடாது. ஆனால் சூரிய ஒளி அந்தக் கல்லின் மேல் படும் போது, அந்தக் கல் தன்னைச் சூழ்ந்துள்ள பஞ்சைச் சுட்டு எரித்து விடும். அது போல சிவபெருமான் நம்முடைய குருவாகக்  காட்சி போது, நம்முடைய பற்று நம்மை விட்டு நீங்கி விடும்.


கடலில் இருந்து எழும் சூரியன்

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய் எழுஞ் சூரிய னாமே.   – (திருமந்திரம் – 116)

விளக்கம்:
மூங்கிலில் மறைந்திருக்கும் தீயைப் போன்று,  தலைவனான நந்தி பெருமான் நம் உடல் எனும் கோயிலில் குடி கொண்டுள்ளான். ஒரு தாய் தன்னுடைய குழந்தையின் அழுக்கு தீர குளிக்க வைப்பதைப் போல, அந்த சிவபெருமான்  நம்முடைய மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை நீக்கி அருளுகிறான்.  அவன் கடலில் இருந்து உதித்து எழும் சூரியன் போன்றவன் ஆவான்.

(வேய் – மூங்கில்,   தயா – அருள்,   தோயமதாய் – கடலிடமாய்)


பதி, பசு, பாசம்

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
பதியணு கிற்பசு பாசம் நில் லாவே. – (திருமந்திரம் – 115)

விளக்கம்:
சிவன், சீவன், தளை எனக் கூறப்படும் மூன்றில் சிவனைப் போலவே சீவனாகிய உயிரும், தளையாகிய பற்றும் மிகவும் தொன்மையானவை. சீவனும் தளையும் சிவனை அணுகாது. சிவன் நம் சீவனை அணுகி வரும் போது, பற்று எனப்படும் தளை நம்மை விட்டு நீங்கி விடும்.

(பதி – சிவன்,  பசு – சீவன், உயிர்,   பாசம் – தளை, பற்று,   அனாதி – தொன்மையானது)


சிவபெருமான் நம் குற்றங்களை நீக்குகிறார்

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. – (திருமந்திரம் – 113)

விளக்கம்:
சிவபெருமான் தன்னுடைய மேலான நிலையில் இருந்து இறங்கி வந்து, நம்முடைய வினைகளை எல்லாம் தீர்க்கும் விதமாக குளிர்ச்சியான தன் திருவடிகளை நமக்குச் சிறந்த பாதுகாவலாகத் தருகிறான். அவன் நம் உடலின் உள்ளேயும், உயிரின் உள்ளேயும் நின்று ஒப்பற்ற ஆனந்தத்தை நமக்குக் காட்டி, நம் குற்றங்களை எல்லாம் நீக்கி அருள் செய்தான்.

(விண்ணின்று – மேலான நிலையில்,  இழிந்து – இறங்கி வந்து,  தலைக்காவல் – சிறந்த காவல்,  உண்ணின்று – உள்+நின்று,  களிம்பு – மாசு)