நாமும் குபேரன் ஆகலாம்!

அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்
இதுபதி கொள்என்ற எம்பெரு மானே. – (திருமந்திரம்)

விளக்கம்:
அளகாபுரி வேந்தனான குபேரன் வட திசைக்குத் தலைவனாகவும், செல்வத்துக்கு அதிபதியாகவும் காரணம், அவன் சிவபெருமானை நோக்கிச் செய்த நிறைந்த தவம். அந்த தவத்தை நாமும் வடதிசை நோக்கி செய்வோம். அப்படிச் செய்வோரை ‘குபேரன் போல் நீயும் தலைவன் ஆவாய்’ என்ற சொன்ன என் சிவபெருமானை வணங்குகிறேன்.


உருக்கும் உணர்வு அவனே

இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்
கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.  – (திருமந்திரம்)

விளக்கம்:
கம்பீர ஒலியுடன் வேதியர் சொல்லும் அழகிய வேதத்தில் மந்திர வடிவமாகவும், மனதை உருக்கும் உணர்வாகவும், அந்த வேதத்தின் நுண்ணிய கருப்பொருளாகவும் உடையவன் முக்கண்களை உடைய சிவனே ஆம்.