உள்ளூறும் தீர்த்தத்தின் மகிமை!

கலந்தது நீரது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீரது உடம்பில் சிவக்கும்
கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர்அனல் காற்றது வாமே.  –  (திருமந்திரம் – 514)

விளக்கம்:
தியானத்தினால் உள்ளே உறும் தீர்த்தம் உடலினில் கலக்கும் போது உடல் சிவக்கும்,  முடி கறுக்கும், உடல் முழுவதும் தூய்மையாகும். மேலும் நம்மைச் சுற்றி உள்ள நிலத்திலும் காற்றிலும் அந்த தீர்த்தத்தின் புனிதம் கலந்து நிற்கும்.


கடலில் தொலைத்ததைக் குளத்தினில் தேடலாமா?

கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்
உடலுற்றுத் தேடுவார் தம்மைஒப் பாரிலர்
திடமுற்ற நந்தி திருவரு ளால்சென்று
உடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.  –  (திருமந்திரம் – 513)

விளக்கம்:
புனிதமான தீர்த்தத்தை வெளி உலகில் தேடாமல், தியானத்தினால் தம்முள்ளே தேடுபவர்களுக்கு ஒப்பானவர் யாருமில்லை. நந்தியம்பெருமான் நம் உடலில் புகுந்து திடமாக அமர்ந்திருக்கிறான் என்பதை அவர்கள் அறிவார்கள். மற்றவர்கள் அந்த உண்மையை உணராமல் புனித தீர்த்தத்தை வெளி உலகில் தேடுகிறார்கள். அவர்களது செயல் கடலில் தொலைத்தப் பொருளை குளத்தினில் போய்த் தேடுவதைப் போல் உள்ளது.


உள்ளூறும் கங்கை!

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதம் சென்று வலங்கொள்
மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப்
பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே.  –  (திருமந்திரம் – 512)

விளக்கம்:
ஆதிப்பிரானான சிவபெருமானை அறிந்தவர்கள், பிறப்பு இறப்பு இல்லாத அமரர் ஆவார்கள். எங்கும் எதிலும் செறிந்திருக்கும் அப்பெருமானின் திருவடியைத் தேடிச்சென்று வெற்றி பெறுவோம். சிவனடியை தியானித்து இருந்தால் நம்முள்ளே கங்கை வெள்ளம் தோன்றுவதை உணரலாம். அவ்வெள்ளத்தை மறிக்காமல், நமது ஐம்பொறிகளும் அவ்வெள்ளத்தில் மூழ்குமாறு செய்வோம். நம்முள்ளே ஊறும் அத்தீர்த்தத்தில் மூழ்கினால் நாம் புண்ணியம் பெறலாம்.


நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதோர் பந்தருள்ளானே.  –  (திருமந்திரம் – 511)

விளக்கம்:
தீவினைகள் நிரம்பிய பள்ளம் போன்றது நமது உடல். இந்த உடலின் உள்ளே நம் சிவபெருமான் பந்தல் அமைத்து தெளிந்த தீர்த்தமாக இருக்கிறான். கள்ள மனம் கொண்டவரால் அதை உணர முடியாது, அந்த சிவனுடன் மனம் கலக்க முடியாது. அன்புள்ளம் கொண்டவர்கள் தம்முள்ளே உள்ள தெளிந்த தீர்த்தமான சிவபெருமானை உணர்ந்து அவனோடு கலந்து இருப்பார்கள். அன்பில்லாத மற்றவர்கள் புறவுலகில் உள்ள தீர்த்தங்களில் கடவுளைத் தேடி அலைவார்கள்.


பக்தி, யோகம், ஞானம்

தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறி வாளர்தம் சிந்தையு ளானே.  –  (திருமந்திரம் – 510)

விளக்கம்:
கண்ணீர் மல்க பக்தியுடன் சிவனை வழிபடுபவர்க்கு, அவன் குளிர்ச்சியுடைய பொருளாகத் தோன்றுவான். பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு சிவனைக் காணும் வாய்ப்பு அதிகம். தெளிந்த ஞானம் உள்ளவர்களின் சிந்தையில் சிவன் எப்போதும் இருக்கிறான். ஞானம், அன்பு, யோகம் எதுவும் இல்லாமல் புற உலகில் உள்ள தீர்த்தங்களில் நீராடுவதால் எந்தப் பயனும் கிடையாது. அவர்களால் சிவனடியை அடைய முடியாது.


உள்ளே ஊறும் தீர்த்தம்

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.  –  (திருமந்திரம் – 509)

விளக்கம்:
மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரை உள்ள ஆதாரங்களில் எல்லாம் தீர்த்தங்கள் உள்ளன. தியானத்தில் நின்று ஆதாரங்களில் கவனம் செலுத்தினால், அங்கே உள்ள தீர்த்தங்களில் புனித நீராடலாம். அத்தீர்த்தங்கள் நம்முடைய தீயவினைகளை அழிக்கும். நம்முள்ளே உள்ள இந்தத் தீர்த்தங்களைப் பற்றி அறியாத கள்ள மனமுடையவர்கள் தீர்த்தங்களைத் தேடிப் பள்ளமும் மேடும் நடந்து அலைகின்றனர்.

நம்முடைய பாவங்களைக் கழுவும் தீர்த்தங்கள் நம் உள்ளேயே இருக்கின்றன. தியானத்தினால் அவற்றைக் கண்டு அடையலாம். புற உலகில் தீர்த்தங்களைத் தேட வேண்டியதில்லை.