நியமத்தரின் கடமைகள்

தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.  –  (திருமந்திரம் – 557)

விளக்கம்:
தவம், செபம், மகிழ்ச்சி, தெய்வ நம்பிக்கை,  தானம், விரதம்,  கல்வி, யாகம், சிவபூசை, பேரொளி தரிசனம் ஆகிய பத்து கடமைகளை நாம் செய்து வந்தால் நியமத்தில் நிற்கிறோம் என்று அர்த்தம்.

சந்தோடம் – மகிழ்ச்சி,  சித்தாந்தம் – சிவாகமம்,   கேள்வி – கல்வி,   மகம் – யாகம்


நியமத்தில் நியமனம் பெறுவோம்

ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை ஆங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசக்தி யோடுடன்
நீதி  யுணர்ந்து நியமத்த னாமே.  –  (திருமந்திரம் – 555)

விளக்கம்:
நியமத்தை மேற்கொள்பவர்கள் இந்த உலகின் முதல்வன் சிவபெருமான் என்பதை உணர்வார்கள். நியமத்தில் நின்றால் வேதத்தின் பொருள் சிவன் என்பதையும், அருள் சோதியும் அவனே, அந்த சோதியில் விளங்கும் அக்கினியும் அவனே என்பதையும் உணரலாம். சிவபெருமான் தன்னுடைய பாதியாய் விளங்கும் பராசக்தியுடன் நிலைபெற்றிருக்கும் தன்மையையும் புரிந்து கொள்ளலாம்.

தீயவற்றை விலக்கும் இயமத்தின் அடுத்த நிலை நியமம். நியமம் என்பது நல்லவற்றைச் செய்யும் ஆன்மிகக் கடமை.


மழை பெய்தாலும் நியமங்கள் தவறக்கூடாது

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.  –  (திருமந்திரம் – 553)

விளக்கம்:
எட்டுத் திசைகளிலும் மழை சூழ்ந்து பெய்தாலும், மனதிற்கு குளிர்ச்சி தரும் நியமங்களைத் தவறாமல் செய்வோம். நியமங்களில் உறுதியாக இருந்த சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர்க்கும், பவளம் போன்ற குளிர்ந்த சடை கொண்ட சிவபெருமான் அருள் புரிந்தான்.

 


அட்டாங்க யோகம் தீய வழிக்குச் செல்லாமல் காக்கும்

அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்
புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே.  –  (திருமந்திரம் – 551)

விளக்கம்:
ஞானம் பெறுவதற்கு அந்த வழியா இந்த வழியா என பல வழிகளைப் பற்றி ஆராயாமல், அட்டாங்க யோக வழியில் செல்வோம். அப்படி நன்னெறியில் சென்று சமாதி நிலையில் நிலை பெறலாம். சமாதி நிலையில் அடையும் ஞானம் நம்மை தீய வழிக்குச் செல்ல விடாமல் காக்கும்.