இயமத்தில் நிற்பவரின் குணங்கள்

கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையில்நின் றானே.  –  (திருமந்திரம் – 554)

விளக்கம்:
இயமம் என்பது தீயவற்றைச் செய்யாமல் விடுதல் ஆகும். இது யோக வழியின் முதல் நிலை. இயமத்தை மேற்கொள்பவர் ஓர் உயிரையும் கொல்ல மாட்டார். பொய் சொல்ல மாட்டார். திருட மாட்டார். பிறரை மதிக்கும் நல்ல குணம் உள்ளவர், நல்லவர், அடக்கமுடையவர். நடுவு நிலையில் நிற்க வல்லவர். தன் பொருளை பிறர்க்குப் பகிர்ந்துது தருபவர். குற்றம் இல்லாதவர், கள் காமம் தவிர்த்தவர்.

எண் – மதிப்பு,   மாசிலான் – குற்றம் இல்லாதவன்,  கட்காமம் – கள், காமம்


மழை பெய்தாலும் நியமங்கள் தவறக்கூடாது

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.  –  (திருமந்திரம் – 553)

விளக்கம்:
எட்டுத் திசைகளிலும் மழை சூழ்ந்து பெய்தாலும், மனதிற்கு குளிர்ச்சி தரும் நியமங்களைத் தவறாமல் செய்வோம். நியமங்களில் உறுதியாக இருந்த சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர்க்கும், பவளம் போன்ற குளிர்ந்த சடை கொண்ட சிவபெருமான் அருள் புரிந்தான்.

 


பராசக்தியின் துணையைப் பெறலாம்

செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசக்தி உத்தர பூருவ
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே.  –  (திருமந்திரம் – 550)

விளக்கம்:
சமாதி நிலை ஈடேற இயம நியம ஒழுக்கங்கள் அவசியம். இயம நியமங்களைச் சரியாகக் கடைபிடிக்கும் நிலையில் பராசக்தி நம் முன்னே தோன்றுவாள். மேலும் கவசமாகிய நியாசங்கள் (நெஞ்சு, தலை, கண், கை முதலிய உறுப்புக்களைச் சிவனது உடைமையாக நினைத்துத் தொடுதல்) செய்யும் முறையையும், முத்திரைகளையும் அறிந்து யோகத்தைச் செய்யலாம்.

அட்டாங்க யோகத்திற்கு இயமமும், நியமமும் அவசியம். அதாவது தீய பழக்கங்களை விட்டு விட்டு ஒழுக்க நெறியில் நிற்க வேண்டும்.

இயமம் – தீது அகற்றல், நியமம் – ஒழுக்க நெறியில் நிற்பது,  உத்தரம் – பின் நிகழ்வது,  பூருவம் – முன்பு