உல்லாச வாழ்வு நிலைக்காது

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.   – (திருமந்திரம் –148)

விளக்கம்:
நல்ல ருசியாக உணவினை சமைத்து உண்டார். கொடி போன்ற அழகான பெண்களுடன் உறவு கொண்டார். இடப்பக்கம் வலிக்கிறது என்று சொல்லியவாரே படுத்தார். அப்படியே இறந்து விட்டார்.

சுகவாசியான அவர் நல்ல வகை வகையான சாப்பாடு, அழகான பெண்கள் என்று வாழ்க்கையை அதிலேயே செலவு செய்தார். திடீர்னு ஒருநாள் நெஞ்சு வலின்னு படுத்தார். படுத்தவர் படுத்தவர்தான், அப்படியே செத்து போனார். வாழ்வின் நிலையின்மையை புரிந்து கொண்டு இளமையிலேயே இறைவனை நாடுவோம்.


பிரிந்த உயிர் மீண்டும் உடலில் புக முடியாது

காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புக அறி யாதே.  – (திருமந்திரம் – 146)

விளக்கம்:
இரண்டு கால்களும், அதற்கு மேலே ஒரு முதுகுத்தண்டும், அதன் பக்கத்தில் பருங்குச்சி போன்ற முப்பத்திரண்டு விலா எலும்புகளையும் கொண்டது நம்முடைய உடல். நாம் இறந்த பின் நம் உடலின் கூரையாகிய தோல், எலும்புகளை விட்டு நீங்கிவிடும். அதன் பிறகு நம்முடைய உயிர் இந்த உடலுக்குள் திரும்பப் புக முடியாது.


அறியாப் பாவிகள்

வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி தீயின் முனிகின்ற வாறே. – (திருமந்திரம் – 2084)

விளக்கம்:
ஒவ்வொரு கணமும் தன் வாழ்நாள் கழிந்து கொண்டிருப்பதை அறியாத பாவிகள் வினையாகிய விதைகளை மூட்டை கட்டிக் கொள்வர். அந்த வினைகளை விதைத்து முளைக்கச் செய்து இன்னும் தீவினைகளை பெருக்கிக் கொள்வர். தீய வினைகளை பெருக்கிக் கொள்வதால் உண்டாகும் துன்பங்களை இப்போது அவர் அறிய மாட்டார். இவர்களின் செயல் கொழுந்து விட்டு எரிகின்ற தீயினில் அழிவதைப் போன்றதாகும்.

Those who bundle up bad karmas, plant them to multiply,
they don't aware of their life time being diminished.
They don't know the sorrows behind their bad karmas.
They perish in the blazing fire.