அவனன்றி எதுவுமில்லை!

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே.  –  (திருமந்திரம் – 6)

விளக்கம்:
சிவனை விட மேன்மையான தேவர் யாரும் இல்லை. சிவனை நோக்கிச் செய்யப்படும் தவத்தை விட சிறந்த தவம் வேறு இல்லை. சிவனருள் இல்லாமல் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்கள் இல்லை. சிவன் இல்லாமல் முக்தி அடையும் வழியை நான் அறியேனே!

No celestial is supreme than Lord Siva.
Without Him, there will be no real Penance.
Without Him, there will be no creation, protection and destruction.
Without Him, I couldn't find the way to Heaven.

இன்னுயிர் மன்னும் புனிதன்

போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.  –  (திருமந்திரம் – 2)

விளக்கம்:
நம் உயிரில் இனிமையாய் நிலைத்து நிற்கும் புனிதனை, நான்கு திசைகளுக்கும் தலைவனை, பராசக்தியின் நாதனை, தென் திசையில் உள்ள இயமனை உதைத்தவனும் ஆன சிவபெருமானைப் போற்றிப் புகழ்ந்து நான் பாடுகின்றேனே!

The Holy Lord Siva, who remains in our soul,
He is the Lord of all four directions, Lord of Sakthi.
He kicked yama, who rules the south direction.
I praise and sing of my Lord Siva's Glory.

திருமந்திரம் – கடவுள் வாழ்த்து

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே.  –  (திருமந்திரம் – 1)

ஒன்று அவன் தானே
இரண்டு அவன் இன்னருள்
மூன்றினுள் நின்றான்
நான்கு உணர்ந்தான்
ஐந்து வென்றான்
ஆறில் விரிந்தான்
ஏழு உம்பர்ச் சென்றான்
எட்டில் உணர்ந்திருந்தான்.

விளக்கம்:
இந்த உலகம் முழுவதையும் ஒரு மொத்த பொருளாகப் பார்த்தால் அது சிவபெருமானே! அவன் சிவன், சக்தி என இருவராய் நின்று அருள் புரிகிறான். நாம் அவன், அவள், அது என எவையெல்லாம் குறிப்பிடுகிறோமோ அவை அனைத்திலும் உயிராய் நிற்பவன். அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கையும் உணர்ந்தவன், நமக்கு உணர்த்துபவன். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் வெல்ல உதவுபவன். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களிலும் விரிந்திருப்பவன். எழாவது இடமான சகசிரதளத்தில் விளங்குபவன். நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களிலும் கலந்திருப்பவன். அந்த சிவபெருமானை நான் வணங்குகிறேன்.

He is the whole! Two is His sweet Grace.
He stands in three, witness of all the four.
He conquers the five senses. He fill in the six Aadharas and stand in the
Seventh place, Sahasrara. He pervades in all the eight elements.

திருமந்திரத்தில் பிராணாயாமம் – ஒரு தொகுப்பு

திருமந்திரத்தில் உள்ள பிராணாயாமம் பற்றிய பாடல்களின் விளக்க உரைகள் ஒரே தொகுப்பாக இங்கே:

  • பறவையை விட விரைவாக ஓடக்கூடிய நம் மூச்சுக்காற்றாகிய குதிரையை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம். அப்படி கட்டுப்படுத்தினால் கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். இக்கருத்து பிராணாயாமப் பயிற்சி செய்வோர்க்கு சொல்லப்பட்டது.
  • நம்முடைய உயிர், ஐம்பொறிகளுக்கும் இந்த உடலெனும் ஊருக்கும் தலைவன் ஆகும். அந்த உயிர் உய்வு பெற பிராணன் என்ற குதிரை ஒன்று உண்டு. அக்குதிரையை வசப்படுத்தக் கற்று ஏறிக் கொள்வோம். அது மெஞ்ஞானம் கொண்ட பயிற்சி உடையவர்க்கு வசப்படும். பயிற்சி இல்லாத பொய்யர்க்கு வசப்படாது தள்ளிவிட்டு தன் இஷ்டப்படி ஓடும். நம் மூச்சுக்காற்றை வசப்படுத்துதலே உய்வு பெறும் வழி ஆகும். பிராணாயாமம் செய்ய முறையான பயிற்சியும், மெஞ்ஞானமும் தேவை.
  • பதினாறு மாத்திரை அளவு இடது பக்க மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பது பூரகம் ஆகும். இழுத்த மூச்சுக் காற்றை அறுபத்தி நான்கு மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி வைப்பது கும்பகம். வலது பக்க மூக்கு வழியாக முப்பத்தியிரண்டு மாத்திரை அளவில் மூச்சை வெளியே விடுவது ரேசகம் ஆகும். அடுத்த முறை வலப்பக்கம் மூச்சை இழுத்து, உள்ளே நிறுத்தி இடப்பக்கம் மூச்சை வெளியே விடுவது தந்திரமாகும். இவ்வாறு முடிந்த வரை மாறி மாறி பயிற்சி செய்து வர வேண்டும். இந்த பிராணாயாமப் பயிற்சியை ஒரு ஆசிரியர் மூலம் முறையாக கற்றுக் கொள்வது அவசியம்.
  • பிராணாயாமப் பயிற்சியின் போது மனம் மூச்சின் பாதையிலேயே இருக்க வேண்டும். மனமும் மூச்சும் லயித்திருந்தால் பிறப்பும் இறப்பும் இல்லை. மூச்சை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் மாற்றி மாற்றி பயிற்சி செய்வோம். பயிற்சியின் போது மூச்சின் சம்பாஷணைகளை உணர்ந்து, அவ்வுணர்வு நம்முள் பரவுவதை அனுபவிப்போம். பிராண வாயுவால் அடையக்கூடிய சிறந்த பலனை அடைவோம். பிராணாயாமப் பயிற்சியின் போது மனமும் மூச்சும் லயித்திருப்பது அவசியம்.
  • நம்முடைய உடலில் பிராணன், அபானன் என இரண்டு குதிரைகள் ஓடுகின்றன. அறிவுடைய நம் மனம் நல்லவனாக இருந்தாலும், அக்குதிரைகளை இழுத்துப் பிடிக்கும் வழிமுறைஅறிந்தோம் இல்லை. அன்பு கொண்ட குருநாதரின் அருள் பெற்றால் அக்குதிரைகளை நம் வசப்படுத்தலாம். குருவருள் பெற்றால் பிராணாயாமப் பயிற்சியின் சூட்சுமம் வசப்படும்.
  • பிராணாயாமப் பயிற்சி செய்பவர், மூச்சுக் காற்றை உள்வாங்கித் தன் வசப்படுத்தி அடக்குவதில் வெற்றி பெற்று விட்டால், அவர் உடல் பளிங்கு போல் மாசு இல்லாது தூய்மையுடையதாய் மாறும். வயதினால் முதுமை அடைந்தாலும், இளமையாய்த் தோற்றம் அளிப்பர். இதனைத் தெளிந்து குருவின் திருவருளும் பெற்று விட்டால், அவர் உடல் காற்றை விட மென்மையாய் மாறும். எல்லோராலும் விரும்பப்படுவர். பிராணாயாமம் தொடர்ந்து செய்வோம், என்றும் இளமையாக இருப்போம்.
  • நாம் எந்த இடத்தில் இருந்தாலும் இடது பக்க மூக்கு வழியாக மூச்சை இழுத்து நிறைவு பெறுவோம். அவ்வாறு பூரகம் செய்தால் இந்த உடலுக்கு அழிவு உண்டாகாது. அங்கே இழுத்த மூச்சை நிறுத்தி கும்பகம் செய்து, வலது பக்க மூக்கு வழியாக மூச்சை வெளியேறச் செய்தால் சங்க நாதம் உண்டாகி மேன்மை ஏற்படும். பூரகம் செய்து பூரிப்பு பெறுவோம்.
  • இடைகலை, பிங்கலை வழியாக மூச்சுக் காற்றை ஏற்றி இறக்கி பூரிப்பு பெறுவோம். இடையே காற்றைப் பிடித்து நிறுத்தி கும்பகம் செய்யும் முறையை அறிந்தோம் இல்லை. கும்பகம் செய்யும் முறையை அறிந்து கொண்டால் யமனை வெல்லும் குறிக்கோளை அடையலாம். இடைகலை என்பது இடது பக்க மூச்சு, பிங்கலை என்பது வலது பக்க மூச்சாகும். கும்பகம் செய்யும் முறையை நன்றாக கற்றவர் நோயில்லாமல் அதிக நாள் வாழலாம்.
  • நம் உடலின் எல்லா பாகங்களிலும் காற்று நிரம்பும் வண்ணம், மிகுதியாகக் காற்றை உள்வாங்கிப் பூரகம் செய்வோம். பூரகத்தின் மறுபகுதியான இரேசகத்தினை, காற்று உடல் உள்ளே பதியும்படி மெலிதாக வெளியேறச் செய்ய வேண்டும். இரண்டுக்கும் இடையே விருப்பத்துடன் வயிற்றில் கும்பகம் செய்தால் திருநீலகண்டப் பெருமானின் அருளைப் பெறலாம். பிராணாயாமத்தை விருப்பத்துடன் முறையாகச் செய்தால் சிவபெருமானின் அருளைப் பெறலாம்.
  • இடைகலை வழியாக பதினாறு மாத்திரை கால அளவு பூரகம் செய்வோம். பிறகு  முப்பத்திரண்டு மாத்திரை கால அளவு பிங்கலை வழியாக இரேசகம் செய்வோம். இவ்விரண்டு வேள்வியோடு அறுபத்தி நான்கு மாத்திரை கால அளவு கும்பகம் செய்து வந்தால் ஆன்மிக உண்மை புலப்படும். உபதேசிக்கப்பட்டுள்ள கால அளவுகளின்படி பிராணாயாமத்தை விருப்பத்துடன்  செய்து வந்தால் ஆன்மிக உண்மை விளங்கிடும்.
  • பிராணாயாமம் தொடர்ந்து செய்து வந்தால் இந்த உடல் தளர்ச்சி அடையாது. இரேசகம் செய்து, பத்து நாடிகளும் விம்முமாறு பூரகம் செய்வோம். பிறகு உள்ளே இருக்கும் பிராணன், அபானன் ஆகிய காற்றை நிறுத்தி கும்பகம் செய்வோம். இந்தப் பயிற்சியை உடல் வளையாமல் நேராக அமர்ந்து செய்து வந்தால் யமனுக்கு அங்கே வேலை இல்லை. பத்து நாடிகள் எனப்படுபவை – சுத்தி, அலம்புடை, இடை, காந்தாரி, குரு, சங்கினி, சிங்குவை, சுழுமுனை, பிங்கலை, புருடன்.
  • தன் விருப்பப்படி அலைந்து திரிகின்ற மூச்சுக்காற்றை நெறிப்படுத்துதலே பிராணாயாமம் ஆகும். அவ்வாறு செய்யும் போது பிராணவாயு தூய்மைப்படும், உடலில் இரத்தம் நன்கு பாய்ந்து சிவந்த நிறம் கொடுக்கும், தலைமுடி கறுக்கும். நம் உள்ளத்தில் வசிக்கும் சிவபெருமான் நம்மை விட்டு நீங்க மாட்டான். பிராணாயாமம் செய்து மூச்சை நெறிப்படுத்தினால், இரத்த ஓட்டம் மேம்படும்.
  • சிறு வயதில், நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரண்டு அங்குல நீளம் உள்ளே புகுவதும், ஓடுவதுமாய் உள்ளது. கொஞ்சம் வயதான பிறகு எட்டு அங்குல அளவே முச்சை இழுக்கிறோம், நாலு அங்குல நீளத்தை துண்டிக்கிறோம். பிராணாயாமப் பயிற்சி செய்து விடுபட்ட நான்கு அங்குலமும் சேர்த்து சுவாசித்து வந்தால் திருவைந்தெழுத்தைப் போல அழகு பெறலாம். பிராணாயாமப் பயிற்சி மூலம் மூச்சு விடும் அளவை பன்னிரண்டு அங்குல அளவுக்கு நீளச்செய்தால் தெய்வீக அழகு பெறலாம்.
  • பன்னிரண்டு அங்குல நீளத்தில் ஓடும் முச்சு, இரவும் பகலும் தன் விருப்பப்படி செயல்படுகிறது. அந்த பிராணனை கட்டுப்படுத்தும் முறையை பாகனாகிய நாம் அறிந்து கொள்ளவில்லை. பிராணனை கட்டுப்படுத்தும் பிராணாயாமப் பயிற்சியை நாம் அறிந்து கொண்டால் பகலும் இரவும் வீணாகக் கழியாது. நம் வாழ்நாள் பொழுது பயனுள்ளதாய் இருக்கும். இப்பாடலில் நம் மூச்சுக்காற்று யானையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.  யானையை பாகன் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல் நாம் நம் மூச்சுக்காற்றை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம்.