நஞ்சு உண்ட சிவபெருமான்

சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.   – (திருமந்திரம் – 41)

விளக்கம்:
திருப்பாற்கடலில் சீறி எழுந்த நஞ்சினை உண்டு தேவர்களை காத்தவன் சிவபெருமான். நாம் நம் மனதை திருத்தி பண்படுத்தி அக்கடவுளை  வணங்குவோம்.  ஒளியான நெற்றியுடைய உமையாளை தன்னுடைய ஒரு பாகமாய் கொண்டு பெருமை செய்த சிவபெருமான், நம்மிடம் பெண் மானைக் கண்ட ஆண் மானைப் போல கூடி நின்றானே!

(புனம் – திருத்தப்பட்ட நிலம்,  கனம் – பெருமை,   வாள் – ஒளி,  நுதல் – நெற்றி)

Our Lord consumed deathly poison to save Devas.
We worship Him in our reformed heart.
The Lord who possess Uma as a part of Him,
conjoint with us like pairing deer.

ஆயிர நாமங்கள் வாழ்க

சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. – (திருமந்திரம் – 34)

விளக்கம்:
வேந்தனான சிவபெருமான் தேவர்களுக்கு அருளிய மெய்நெறி, கலவையான மணம் கொண்ட கத்தூரியைப் போன்றது. நிறைந்த சுடர் போன்ற ஆயிரம் சிவ நாமங்களை நாம் ஓர் இடத்தில் இருக்கும் போதும் புகழுவோம்.  நடக்கும் போதும் புகழ்ந்து கொண்டே நடப்போம்.

(சாந்து – கலவை,  கவரியின் கந்தம் – கத்தூரி,  ஆர்ந்த – நிறைந்த,   போந்து – நடந்து).

வாசனைப் பொருளான கத்தூரி பற்றி தெரிந்து கொள்ள – http://en.wikipedia.org/wiki/Musk_deer

It is like the fragrance of the musk of the musk deer,
the true path given to Devas given by the Lord.
Like a full Glow remain His thousand names
We chant them while sitting and while walking too.