பூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்!

காமரு தத்துவ மானது வந்தபின்
பூமரு கந்தம் புவனம தாயிடும்
மாமரு வுன்னிடை மெய்த்திடு மானனாய்
நாமரு வுமஒளி நாயக மானதே. – (திருமந்திரம் – 691)

விளக்கம்:
பூ மலரும் போது அதில் வாசனை தோன்றுகிறது. அந்தப் பூ வாடும் போது வாசனை மறைந்து விடும். அது போலத்தான் நாம் பிறக்கும் போது இந்த உலகம் நமக்குள் தோன்றுகிறது, நாம் மறையும் போது இந்த உலகம் நமக்குள்ளேயே மறைந்து விடும். வசித்துவம் பெற்று, தீமைகளில் இருந்து நம்மைக் காக்கும் தத்துவம் கைகூடும் போது இந்த உண்மையை உணர முடியும். இந்த உண்மையை நமக்கு உணர்த்துபவன் நம் தலைவனான சிவபெருமான். வசித்துவம் பெற்று உலகம் இயங்கும் விதத்தைப் புரிந்து கொள்ளும் போது, நாம் அறிவொளி மிகுந்தவராக இருப்போம்.


பொன்னான தருணங்களைக் காணலாம்

நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டு
பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே. – (திருமந்திரம் – 690)

விளக்கம்:
இத்தனை காலம் கல்லில் செய்த கொடி போல காமுகனாக இருந்திருக்கிறோம். அட்டாங்கயோகப் பயிற்சி நம்மை நல்லவிதமாக மாற்றுகிறது. நற்கொடியாகிய சக்தியைக் கண்டு ஓராண்டு குண்டலினிப் பயிற்சியாகிய யாகத்தைத் தொடர்ந்து செய்து வந்தால், இவ்வாழ்க்கையின் பொன்னான தருணங்களைக் காணலாம். அதுவே வசித்துவம் ஆகும்.


வசித்துவம் தரும் சிறப்புகள்

தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
புன்மைய தாகப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே. – (திருமந்திரம் – 689)

விளக்கம்:
மென்மையான மெய்ப்பொருளைக் கண்டு வசித்துவம் எனும் சித்தி பெறும்போது, நாம் சூரியனைப் போல் பிரகாசமாக இருந்து அனைவருக்கும் நன்மை செய்யும் தன்மை பெறுவோம. அசுத்தமான ஐம்புலன் ஆசைகள் நம்மை விட்டு அகன்று விடும். நன்மை தரும் நற்கொடியாகிய சிவசக்தியைக் காணலாம்.


அட்டாங்கயோகம் நூலுக்கான முன்னுரை

உங்களால் தலை உச்சியின் மேல் கவனம் வைத்து தியானம் செய்து, அதில் கிடைக்கும் மகிழ்வை உணர முடிகிறதா? அந்த மகிழ்வை உணர்ந்தால் நீங்கள் வானுலகில் உள்ள தேவர்களை விட மேலானவர்கள் என்று திருமூலர் சொல்கிறார்.  வானுலகத் தேவர்கள்  பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதை விட நமது உச்சியில் ஊறும் அமுது மேலானது. அவர்களால் அகத்தில் ஊறும் அமுதைக் கடைந்து எடுக்கும் வழி தெரியவில்லை, அதனால் புற உலகின் அமுதத்தை நாடினார்கள். தேவர்களுக்கும் தெரியாத அந்த வழியை, அகத்தியானம் செய்யும் முறையை, திருமூலர் நமக்குச் சொல்லித் தருகிறார்.

அட்டாங்கம் என்றால் எட்டு உறுப்புக்கள் என்று அர்த்தம். அட்டாங்க யோகத்தின் எட்டு உறுப்புக்கள் – இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவை ஆகும். இயமம் என்பது தீய எண்ணங்கள், தீய செயல்கள் ஆகியவற்றை விலக்குவது. ஒழுக்க நெறியை நாடி அதில் தொடர்ந்து நிற்பது நியமம். அடுத்து பயல வேண்டியது பல வகைப்பட்ட ஆசனங்கள். ஆசனங்கள் கற்ற பிறகு பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி. அடுத்த பாடம் பிரத்தியாகரம் என்னும் மனத்தை உள்நோக்கித் திருப்பும் பயிற்சி. உள் நோக்கித் திரும்பும் மனத்தை அங்கேயே நிலை நிறுத்தும் பயிற்சி தாரணை ஆகும். மனம் அகத்திலே நிலை பெற்றால் தியானப் பயிற்சி சாத்தியமாகும். தியானத்திலே நிலைபெறப் பயின்றால் சமாதி நிலை அடையலாம். சமாதி என்பது பூரண நிலை. நமது மூலாதாரத்தில் (குறிக்கு இரு விரல் அளவு கீழே) இருக்கும் குண்டலினி வடிவிலான சக்தி, நமது தலையின் உச்சியில் இருக்கும் சிவனைச் சென்று சேர்வது சமாதி நிலையாகும்.

இயமமும் நியமமும் இல்லாமல் மற்ற பயிற்சிகள் சாத்தியமில்லை.

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.  –  (திருமந்திரம் – 618)

இயமம், நியமம் முதலியவற்றைக் கடைப்பிடிப்பவர்களால் சமாதி வரை செல்ல இயலும். இயமம், நியமத்தில் ஆரம்பித்து சமாதி வரை சென்றவர்கள் அட்டமாசித்திகளை அடைவார்கள். இயமம் முதல் சமாதி வரையிலான அட்டாங்க யோகத்தில் நிலைத்து நிற்பவர்களே யோகத்தின் பூரண நிலையை அடைய முடியும்.

பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு திருமூலரின் அட்டாங்கயோகம், இன்னும் சிறந்த அனுபவத்தை நோக்கி நகர உதவும். சிறு வயதில் நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரெண்டு அங்குல நீள அளவில் இயங்கும். வயது ஏற ஏற சுவாசிப்பின் நீளம் குறைகிறது. யோகப்பயிற்சியின் நோக்கம் சுவாசிப்பின் நீளத்தை மறுபடியும் பன்னிரெண்டு அங்குல நீளத்திற்கு கொண்டு வருவதாகும். முறைப்படி தொடர்ந்து பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் என்று திருமூலர் சொல்கிறார். அரைகுறையாக பயிற்சி செய்யும் நானே இதை அனுபவ உண்மையாக உணர்கிறேன்.

யோகம் பயில்பவர்களுக்கு திருமூலர் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறார். திருமூலரின் அட்டாங்கயோகத்தை வெறுமனே படிப்பதால் உபயோகம் இல்லை, பயிற்சியும் அவசியம். தொடர்ந்த பயிற்சியும், நமது குருநாதரான திருமூலரின் வழிகாட்டுதலும், நம் மனத்தையும் புத்தியையும் செம்மைப் படுத்தும். ஆன்மிகம் தவிர்த்துப் பார்த்தாலும் அட்டாங்கயோகப் பயிற்சி நம்மை இன்னும் சிறந்த மனிதனாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.


தியானித்தினால் நெடுங்காலம் வாழலாம்

கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டல மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே.  –  (திருமந்திரம் – 612)

விளக்கம்:
யோகியர் தாங்கள் எடுத்துக் கொண்ட விரதம் குறையாமல் தியானத்தில் ஒன்றியபடி, முதுகுத்தண்டு வழியாக குண்டலினியை மேலே ஏற்றுவர். அவர்கள் சந்திரன், சூரியன், அக்கினி ஆகிய மூன்று மண்டலங்களிலும் ஒரு சேர வளர்வார்கள். அவர்களின் உடல் உயிரை விட்டு  பிரியாது நெடுங்காலம் நிலைத்து இருக்கும்.

ஒக்க – ஒரு சேர,  பிண்டம் – உடல்,   ஊழி – நெடுங்காலம்


அட்டாங்க யோகம் தீய வழிக்குச் செல்லாமல் காக்கும்

அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்
புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே.  –  (திருமந்திரம் – 551)

விளக்கம்:
ஞானம் பெறுவதற்கு அந்த வழியா இந்த வழியா என பல வழிகளைப் பற்றி ஆராயாமல், அட்டாங்க யோக வழியில் செல்வோம். அப்படி நன்னெறியில் சென்று சமாதி நிலையில் நிலை பெறலாம். சமாதி நிலையில் அடையும் ஞானம் நம்மை தீய வழிக்குச் செல்ல விடாமல் காக்கும்.


பராசக்தியின் துணையைப் பெறலாம்

செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசக்தி உத்தர பூருவ
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே.  –  (திருமந்திரம் – 550)

விளக்கம்:
சமாதி நிலை ஈடேற இயம நியம ஒழுக்கங்கள் அவசியம். இயம நியமங்களைச் சரியாகக் கடைபிடிக்கும் நிலையில் பராசக்தி நம் முன்னே தோன்றுவாள். மேலும் கவசமாகிய நியாசங்கள் (நெஞ்சு, தலை, கண், கை முதலிய உறுப்புக்களைச் சிவனது உடைமையாக நினைத்துத் தொடுதல்) செய்யும் முறையையும், முத்திரைகளையும் அறிந்து யோகத்தைச் செய்யலாம்.

அட்டாங்க யோகத்திற்கு இயமமும், நியமமும் அவசியம். அதாவது தீய பழக்கங்களை விட்டு விட்டு ஒழுக்க நெறியில் நிற்க வேண்டும்.

இயமம் – தீது அகற்றல், நியமம் – ஒழுக்க நெறியில் நிற்பது,  உத்தரம் – பின் நிகழ்வது,  பூருவம் – முன்பு


அட்டாங்க யோகத்தின் குரு நந்திதேவருக்கு வணக்கம்

உரைத்தன வற்கரி ஒன்று முடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டும் முன்பேசிய நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.  – (திருமந்திரம் – 549)

விளக்கம்:
கடிவாளம் இடப்பட்ட நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரெண்டு அங்குல நீளத்திற்கு இயங்கும் வழியை, நம் குருநாதரான நந்திதேவர் நமக்கு உரைத்தார். அட்டாங்க யோகத்தின் அடிப்படையான இயமங்களையும், நியமங்களையும் நாம் கடைபிடிக்கும்படி அருள் செய்தார்.

சிறு வயதில் நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரெண்டு அங்குல நீள அளவில் இயங்கும். வயது ஏற ஏற சுவாசிப்பின் நீளம் குறைகிறது. யோகப்பயிற்சியின் நோக்கம் சுவாசிப்பின் நீளத்தை மறுபடியும் பன்னிரெண்டு அங்குல நீளத்திற்கு கொண்டு வருவதாகும். இயமம் என்பது தீமையான செயல்களை நீக்குதல். நியமம் என்பது நல்ல பழக்க வழக்கங்களை அனுசரித்து, அதைத் தொடர்ந்து கடைபிடிப்பது.