நந்தியம் பெருமான் சொன்ன ஒன்பது ஆகமங்கள்

பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்
துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே. – (திருமந்திரம் – 63)

இருபத்தெட்டு ஆகமங்களுள் ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவைகாக நந்தியம் பெருமானால் உரைக்கப்பட்டவை. அவை 1. காரணம்,  2. காமிகம்,  3. வீரம்,  4. சிந்தியம்,  5. வாதுளம்,  6. யாமளம்,  7. காலோத்தரம்,  8. சுப்பிரம்,  9 மகுடம்.


ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவை

சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே. – (திருமந்திரம் – 62)

இருபத்தெட்டு ஆகமங்களுள் ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவை. அவற்றை சிவமான பரம்பொருளிடம் இருந்து சத்தியும் சதாசிவமும், உள்ளத்துக்கு உகந்த மகேசர், உருத்திரர், தவம் செய்த திருமால், நான்முகன் ஆகியோர் பெற்றார்கள். இவர்களோடு நந்தியம்பெருமானும், அந்த ஒன்பது ஆகமங்களைத் தான் பெற்று நமக்கு உரைத்தான்.


ஆகமங்களில் அறிவாய் விளங்குபவன்

பரனாய் பராபரம் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. – (திருமந்திரம் – 61)

சிவபெருமான் ஆகமங்களின் மூலமாக பரம்பொருளை காட்டி அருளினான். அவனே இந்த உலகைத் தாங்கி நின்று சிவதர்மத்தை போதிக்கிறான். தேவர்கள் வணங்கி வழிபடும் அந்த நந்திபெருமான் ஆகமங்களில் அறிவாய் விளங்குகிறான்.


அனுபவம் அவசியம்!

அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே. – (திருமந்திரம் – 60)

சிவபெருமான் அருளிய தெய்விக ஆகமங்கள் விண்ணில் வாழும் தேவர்களும் புரிந்து கொள்ள அரிதான பொருள்கள் உடையவை. அவற்றை எண்ணிப் பார்த்தால் எழுபது கோடி நூறாயிரம் வரும். அப்பொருள்களை அறிந்து கொண்டாலும் அவை அனுபவத்தில் வரா விட்டால், அவையெல்லாம் நீர் மேல் எழுதப்பட்ட எழுத்து போல் பயன்படாமல் போகும்.


பதினெட்டு மொழிகள் அறிந்த பண்டிதர்

பண்டிதர் ஆவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. – (திருமந்திரம் – 59)

பண்டிதர் என்பவர் பதினெட்டு மொழிகளிலும் கூறப்பட்டுள்ள ஆகமங்களின் பொருள் தெரிந்தவராக இருக்க வேண்டும். பதினெட்டு மொழிகளிலும் பண்டிதர்கள் எழுதிய பொருள், அண்டங்களுக்கு முதல்வனான சிவபெருமானால் என்ன பொருளில் உபதேசிக்கப் பட்டதோ அவ்வாறே இருக்க வேண்டும்.


அண்ணல் அருளிய சிவாகமங்கள்

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே. – (திருமந்திரம் – 58)

சிவபெருமான் அருளிய ஆகமங்கள் எண்ணிக்கையில் இருபத்தெட்டு ஆகும். ஆனால் அதில் உள்ள பொருள்கள் இருபத்தெண் கோடி நூறாயிரம், அதாவது அந்த ஆகமங்கள் அளவில்லாத பொருள் உடையவையாகும். தேவர்களால் பெருமையாக சொல்லப்பட்ட அந்த ஆகமங்களின் பொருள் உணர்ந்து நம் சிவபெருமானை வணங்குவோம்.


ஆகமங்கள் இருபத்தெட்டு

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே. – (திருமந்திரம் – 57)

விளக்கம்
கருமை நிறம் கொண்ட உமையம்மையை தன்னுடைய ஒரு பாகமாகக் கொண்டவன் சிவபெருமான். அந்த சிவபெருமான் அருள் செய்த ஆகமங்கள் மொத்தம் இருபத்து எட்டு. ஈசனுக்கு மொத்தம் ஐந்து முகங்கள் உண்டு. ஐந்தாவது முகம், ஈசான முகம் என்று சொல்லப்படும். இருபத்து எட்டு ஆகமங்களையும் அருள் செய்தது, உச்சி நோக்கி இருக்கும் அந்த ஐந்தாவது முகம் ஆகும். அந்த ஆகமங்களை நேரடியாகக் கேட்கப் பெற்றவர்கள் அறுபத்து ஆறு பேர்.

இருபத்தெட்டு ஆகமங்கள் – காமிகம், யோகசம், சிந்தியம், காரணம்,அசிதம், தீத்தம், சூக்குமம், சகத்திரம், அஞ்சுமான், சுப்பிர பேதம், விசயம், நிசுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற் கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பாரமேசுவரம், கிரணம், வாதுளம்.


சிந்தையெல்லாம் நீயே!

சிந்தையின் உள்ளே எந்தை திருவடி
சிந்தையும் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை அறியகி லான்ஆகில்
எந்தையை யானும் அறியகி லேனே. – (திருமந்திரம் – 2428)


வேதத்தின் ஆறு அங்கங்கள்

ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. – (திருமந்திரம் – 55)

விளக்கம்:
ஆறு அங்கங்கள் உடைய வேதத்தை அருளியவன் சிவபெருமான். அப்பெருமானை நம்முள் ஒரு அங்கமாக உணர்ந்து நாம் வழிபடவில்லை. அவனை நம்மில் வேறாகவே நினைத்து இந்தப் பிறவிப் பயனை அடைய மறுக்கிறோம், வரும் பிறவிகளின் எண்ணிக்கையை பெருக்குகிறோம்.

வேதத்தின் ஆறு அங்கங்கள் இவை:

  1.  சிட்சை –  வேதத்தின் எழுத்து மற்றும் ஒலி முதலியவற்றைப் பற்றிச் சொல்வது.
  2. வியாகரணம் – சொற்களின் இலக்கணத்தை ஆராய்வது.
  3. சந்தம் – செய்யுள் இலக்கணம் பற்றிச் சொல்வது.
  4. சோதிடம் – கோள் நிலைகளை வைத்து காலத்தை ஆராய்வது.
  5. நிருக்தம் – வேதச் சொற்களுக்கு பொருள் கூறுவது.
  6. கல்பம் – செயல் முறைகளை உரைக்கும் நூல்.
Lord Siva grant us the Vedas, which has six organs.
We don't see the Lord as part of us.
We are seeing Him separate from us,
Thus we are wasting this life-time.

திருநெறி என்பது சிவனை மட்டுமே நினைத்திருப்பது!

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. – (திருமந்திரம் – 54)

விளக்கம்:
திருநெறி என்று சொல்லப்படும் தெய்விக நெறி என்பது அறிவு, அறியாமை ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது. அப் பெருநெறியில் செல்ல சிவபெருமான் ஒருவனை மட்டும் நினைத்திருந்தால் போதுமானது. குருவினால் உணர்த்தப்படுவதும், சிவனோடு பொருந்தியிருக்கும் அந்நிலை பற்றியதே ஆகும். வேதம் சொல்லும் வழியும் அதுவே!

The path towards the Lord is beyond intelligence and ignorance.
The way to that great path is simple - just think of Siva always.
The  Masters are teaching about this only.
This is the only path described by Vedanta.