காமமும் சிவநிந்தனையே!

போகமும் மாதர் புலவி அதுநினைந்து
ஆகமும் உள்கலந்து அங்குஉள ராதலில்
வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே.  –  (திருமந்திரம் – 529)

விளக்கம்:
எல்லாம் ஈசனே நினைத்து ஒழுக்க நெறியில் நில்லாமல், பெண் சுகத்தையே நினைத்து அதிலேயே மூழ்கியவாறு உள்ளோம். வேதம் உரைக்கும் வேதியர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். பெண் சுகத்தை நினைத்து ஈசனை மறப்பதும் சிவநிந்தனையே ஆகும்.


பகை கொண்ட மனம்!

அப்பகை யாலே அசுரரும் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.  –  (திருமந்திரம் – 528)

விளக்கம்:
அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் ஏற்பட்ட பகையாலே இரு தரப்பும் தங்களது சண்டையில் இறைவனை மறந்து விட்டார்கள். மனத்தில் பகை கொண்டவர்களால் இறைவனை அடைய முடியாது. இறைவனிடம் பொய்யாகக் கூட பகை கொள்ளக்கூடாது. சிவனிடம் கொள்ளும் பொய்ப்பகை மற்ற பகையை விட பத்து மடங்கு தீமை விளைவிக்கக் கூடியது. அப்படியானால் நிஜமாகவே சிவனை பகைத்தாலோ, நிந்தனை செய்தாலோ, அதனால் ஏற்படும் தீமையின் அளவை எண்ணிப் பாருங்கள்.


குளிர்ந்த மனம் வேண்டும்!

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமுது ஊறிய ஆதிப் பிரானைத்
தளிந்தவர்ககு அல்லது தாங்கஒண் ணாதே.  –  (திருமந்திரம் – 527)

விளக்கம்:
அமுதினில் ஊறிய கனிந்த மனம் கொண்டவன் நம் ஆதிப்பிரானான சிவபெருமான். உலர்ந்த மனம் உடையவர்களால் அவனை அடைய முடியாது. வானவரே ஆனாலும் கோபம் கொண்டவர்கள் மனம் உலர்ந்தவர் ஆவார்கள். அவர்களால் உண்மையான ஞானத்தை உணர முடியாது. குளிர்ந்த மனமே உண்மையான ஞானத்தை ஏற்றுக்கொள்ளும்.

முளிந்தவர் – உலர்ந்தவர், தளிந்தவர் – குளிர்ந்தவர், விளிந்தவர் – கோபம் கொண்டவர், அளிந்து – கனிந்து.