தியானத்தில் மனம் உள்நோக்கி இருக்க வேண்டும்

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை
உண்ணாடிக் குள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.  –  (திருமந்திரம் – 603)

விளக்கம்:
மனத்தை வெளியே செல்ல விடாமல், உள் நோக்கு முகமாக வைத்துத் தியானித்திருந்தால், நம் உள்ளத்தில் ஒளி கலந்திருப்பதை கண்ணாடி பிரதிபலிப்பது போல் பார்க்கலாம். மனம் உள் திரும்பாமல் எண்ணாயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்தாலும், கண்ணுள் மணியும், அம்மணியுணர் அமிழ்தும் போன்ற சிவனைக் கண்டு அறிய முடியாது.

உண்ணாடி – உள் நாடி


தியானத்தில் வான்கங்கையைக் காணலாம்

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.   –  (திருமந்திரம் – 600)

விளக்கம்:
ஞானக்கண் கொண்டு உணரப்படும் அந்த சோதியில்  இரண்டு கண்களும் பொருந்தியிருக்குமாறு செய்து, புருவங்களுக்கு மத்தியில் சலனமில்லாமல் தியானம் செய்வோம். அவ்வாறு தியானித்திருந்தால் வான்கங்கை பாயும் அருள்வெளியைக் காணலாம். அவ்வெளியிலே மனம் ஓடினால் சுயம்புவான மூர்த்தியைக் காணலாம்.

புருவ மத்தியில் தியானம் செய்து அதிலே கலந்து விட்டால், அருட்பெருவெளி ஒன்றைக் காணலாம், அங்கே சிவபெருமானை தரிசிக்கலாம்.

ஒண்ணா நயனம் – ஒன்றான ஞானக்கண்,   விண்ணாறு – வான கங்கை,  பண்ணாமல் நின்றது – செய்யப்படாத சுயம்பு மூர்த்தி


தியானத்தில் குண்டலினியின் ஒளியை உணரலாம்

கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்(டு)
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.    –  (திருமந்திரம் – 599)

விளக்கம்:
மெய், கண், நாக்கு, செவி, மூக்கு ஆகிய ஞானக் கூட்டத்தினுள் இசைந்து நிற்கும் பழம்பொருள் ஒன்று நம்முள்ளே உண்டு. அது பரம்பொருளாகிய நம் சிவபெருமான் ஆகும். அண்ணாக்கின் உள்ளே மூச்சுக்காற்றில் மனம் செலுத்தி தியானம் செய்தால், பிளந்த நாக்கை உடைய பாம்பினைப் போன்ற குண்டலினியின் அகண்ட ஒளியை உணரலாம்.  நீண்ட காலம் உயிர்ப்புடன் வாழலாம்.

பண் – இசை,   அண்ணாக்கு – உள்நாக்கின் மேல் உள்ள துளை,   பிண்ணாக்கு – (பிள் + நாக்கு) பிளவு உடைய நாக்கு


வந்தவர் யாரும் தங்கியதில்லை

முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னூறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே.    –  (திருமந்திரம் – 596)

விளக்கம்:
இந்த உலகில் இதுவரை வந்தவர் யாரும் இங்கே தங்கியதில்லை, எல்லாரும் முடிந்து விட்டனர். அப்படி இருக்கும் போது புதிதாய் வருபவர் யாரும் நிரந்தரமாய் இருப்பார் என்று எப்படி உறுதிமொழி கொடுக்க முடியும்? இதுவரை வந்து போனவர்களைப் பற்றிப் பேசினால் அது அளவில்லாதவையாகும். இதில் மாயம் என்னவென்றால் ஆற்றின் கரை மெதுவாக நீரில் கரைவது போல, நாளும் நமக்குத் தெரியாமலேயே நமது உடல் அழிந்து கொண்டிருக்கிறது.


தியானத்தினால் உடல் கோயிலாகும்

வாழலு மாம்பல காலும் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில்
எழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி பெரியதோர் பள்ளி அறையே.    – (திருமந்திரம் – 594)

விளக்கம்:
மனத்தை ஊடுருவிச் செல்கின்ற மூச்சுக்காற்றை வீணாக்காமல் நடுநாடியின் வழியாக செலுத்தி தியானம் செய்திருந்தால், ஏழு சாளரங்களையும் இரண்டு பெரிய வாசல்களையும் கொண்ட கோயிலின் பள்ளியறையிலே பல காலம் வாழலாம்.

தியானம் பயில்பவர்க்கு இந்த உடலே கோயிலாகும். அதிலே நமது ஆன்மா வெகு காலத்திற்கு சுகமாக வாழும்.

போழ்கின்ற – ஊடுருவுகின்ற,  சாலேகம் – சாளரம்,   பாழி – கோயில்,   பள்ளி அறை – ஓய்வு பெறும் இடம்


கொக்குப் போல் தியானம் செய்வோம்

கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே.    – (திருமந்திரம் – 591)

விளக்கம்:
மூலாதாரத்தை அடைத்து பிராண வாயுவை மேலே எழுப்பி, இடையில் உள்ள புருவ மத்தியில் மனத்தை நிறுத்தி, நீர் ஓடும் கால்வாயில் மீனுக்காக காத்திருக்கும் கொக்குப் போல ஒரே குறிக்கோளுடன் தியானம் செய்ய வல்லவர்க்கு உடல் பல ஆண்டுகள் சிதையாமல் இருக்கும்.

கடைவாசல் – மூலாதாரம்,    இடைவாசல் – சுழுமுனை,   ஊழி – நெடுங்காலம்


குண்டலினிப் பயிற்சியால் பாலன் ஆகலாம்

மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பார்நந்தி ஆணையே.    – (திருமந்திரம் – 590)

விளக்கம்:
மூலாதாரத்தில் வசிக்கும் குண்டலினியினை பயிற்சியினால் மேலே எழுப்பி நம் தலைக்கு மேல் இருக்கும் சக்தியுடன் சந்திக்கச் செய்தால், நாம் குழந்தை உள்ளம் கொண்டவராக மாறி விடலாம். இது நந்தியம் பெருமானின் ஆணையாகும்.

மூலாதாரத்தில் வசிக்கும் மூர்த்திக்கு தலைக்கு மேல் வசிக்கும் சக்தியினை நோக்கி  ஈர்ப்பு இருப்பதால், தகுந்த பயிற்சி செய்தால் குண்டலினியினை சிரசிற்கு கொண்டு செல்வது எளிதானதே என்பதை புரிந்து கொள்ளலாம்.

வேதகப் பெண்பிள்ளை – மாற்றங்களைச் செய்யும் சிற்சக்தி,  ஏல – மிக


ஆனந்த சோதியைக் காணலாம்

மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடே
சிலையார் பொதுவில் திருநட மாடுந்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.    – (திருமந்திரம் – 589)

விளக்கம்:
ஆழ்ந்த தியானத்தின் போது, மலை போன்ற தலையில் வான கங்கை நீர் பாய்வதையும் சுழுமுனை நாடி வழியாக ஓடுவதையும் உணரலாம். இனிய இசை ஒலிக்கும் சபையான நம் மனத்தில் அந்த ஒளி வடிவான சிவபெருமானின் ஆனந்தத் திருக்கூத்தை தொடர்ச்சியாக உணரலாம்.

மலையார் – மலை போன்ற,  வானீர் – வான் கங்கை,   நெடுநாடி – சுழுமுனை,   சிலை – நாதம்,   பொது – சபை


தியானத்தில் மனத்தை நிறுத்துவோம்

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வௌiயுறத் தானோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே.    – (திருமந்திரம் – 588)

விளக்கம்:
கோணாத மனத்தைக் குறிக்கோளாய்க் கொண்டு, நம் மனம் கீழ் நோக்காதவாறு பார்த்துக் கொள்வோம். நடு நாடியின் வழியாகச் செல்லும் மூச்சுக்காற்றில் நம் மனம் பொருந்துமாறு செய்து கண்களைத் திறந்து வைத்து தியானம் செய்வோம். காணும் காட்சிகளிலும், காதில் விழும் ஒசைகளிலும் மனம் செல்லாமல் தியானம் செய்ய வல்லவர்க்கு வாழ்நாளைப் பற்றிய கவலை இராது.

குறிக்கொண்டு – குறிக்கோளாய்க் கொண்டு,   வீணாத்தண்டு – நடு நாடி,   வாணாள் – வாழ்நாள்


திருமூலரின் குறிப்பினுள் குவலயம் தோன்றும்

குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரனு மாமே.  .    – (திருமந்திரம் – 587)

விளக்கம்:
திருமூலர் அருளியுள்ள அட்டாங்க யோகம் பற்றிய குறிப்புகளை நன்கு ஆராய்ந்து உணர்ந்தால், அவற்றின் உள்ளே  ஒரு பெரிய உலகமே தோன்றுவதைக் காணலாம். அவருடைய உபதேசத்தின் படி, மனத்தில் உள்ள வெறுப்பு இருளை அகற்றி, முறையான யோகப் பயிற்சி செய்து அந்த சிவபெருமானை நாடி இருப்போம். நம் சிந்தை சிறப்புறும், அந்த இறைவனைக் காட்சியாய் உணரலாம்.

திருமூலரின் குறிப்புகள் சுருக்கமாகத் தோன்றினாலும், அவற்றைத் தெளிவாக படித்து உணர்ந்தால், அவற்றில் உள்ள செய்திகள் விஸ்தாரமானவை என்பது புரியும்.