யாரால் என்ன செய்ய முடியும்?

மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம் தேறிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே.  – (திருமந்திரம் –155)

விளக்கம்:
தேன் நிறைந்த பூக்களை தலையில் சூடிக்கொள்ளும் மனைவி, பாடுபட்டு சம்பாதித்த செல்வங்கள், வெகு நாட்களாக வசித்து வரும் வீடு, இவை அனைத்தையும்  விட்டு ஒரு நாள் நீங்க வேண்டியிருக்கும். நம் உயிர் பிரியும் நாள் தான் அது. உயிர் நம் உடலை விட்டு பிரிந்தவுடன், இந்த உடலை ஊருக்குப் பொதுவாக உள்ள சுடுகாட்டுக்குப் பாடையில் வைத்து எடுத்துப் போவார்கள். அங்கே உறவினர் எல்லாம் தம் உள்ளத்தில் அன்பு பெருக, உடலை மயானத்தில் வைத்து விட்டுச் செல்வார்கள்.


உடல் என்னும் கோயில்

முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிலுடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.  – (திருமந்திரம் –154)

விளக்கம்:
நம்முடைய இந்த உடல் செம்மையான கோட்டைச் சுவர் கொண்ட கோயிலாகும். இந்த கோயிலுக்குள் தொண்ணூற்றாறு தத்துவங்கள் வாழ்கின்றன. இந்தக் கோயில் சிதைவடையும் போது, அதாவது நம் உயிர் உடலை விட்டு நீங்கும் போது, அந்த தொண்ணூற்றாறு தத்துவங்களும் ஓட்டம் எடுத்து விடும்.


நாடாண்ட நம்பியும் ஒரு நாள் காட்டுப் பல்லக்கில் ஏற வேண்டும்!

நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.  – (திருமந்திரம் –153)

விளக்கம்:
நாடாளும் மன்னன் அவன், நம் ஊருக்கும் அவன் தான் தலைவனாக இருக்கிறான். அவன் தன் விதி முடிந்து இறந்த போது, அவன் ஏறும் பல்லக்கு என்பது, சுடுகாட்டுக்குக் கொண்டு போகும் பாடையாகும். அவன் இறுதி ஊர்வலத்தில் நாட்டு மக்களெல்லாம் பின்னே இறுதி அஞ்சலிக்காக தொடர்ந்து வர, முன்னால் பறை கொட்டிப் போனார்கள். எந்த நாடாண்ட நம்பிக்கும், அவன் வாழ்நாள் இறுதியில் இப்படித்தான் நடக்கும்.

நாட்டுக்குத் தலைவன் ஆனாலும் கடைசியில் ஒரு நாள் சுடுகாட்டுக்குச் செல்லும் பல்லக்கில் ஏறித்தான் ஆக வேண்டும்.


இந்த உடல் வெறும் பந்தல் தான்!

பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலந் துரிசுவர மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே.  – (திருமந்திரம் –152)

விளக்கம்:
நம் உயிர் தங்கியிருக்கும் இந்த உடல் ஒன்றும் உறுதியான கட்டடம் அல்ல, இது ஒரு தற்காலிகப் பந்தல், அவ்வளவு தான் என்கிறார் திருமூலர்.

இந்த உடல் என்னும் பந்தல் பிரிந்தது. உள்ளிருந்த உயிர் தன் கட்டு நீங்கப் பெற்றது. இந்த உடலின் ஒன்பது வாசல்களும் ஒரே நேரத்தில் அடைக்கப் பெற்றன. காலனும் அங்கே விரைந்து வந்தான். அந்த துன்பமான நேரத்தில் அன்பு கொண்டவர்கள் எல்லாம் வந்து அழுது விட்டுச் சென்றார்கள். அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?


விடைபெறும் நேரம் விடை பெறுவான்

கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.  – (திருமந்திரம் –151)

விளக்கம்:
நாடி பிடித்துப் பார்க்கும் மருத்துவரும், இனிமேல் இவரைக் காப்பாற்ற முடியாது எனக் கைவிட்டார்கள். எதையும் யோசித்துப் பார்க்கும் திறன் அழிந்தது, உயிர் அறுந்தது. நெய்விட்டு சுவையாக சோறு உண்ட உடல் என்னும் ஐம்பூதக் கூறுகளும் அழிந்தன. மை தீட்டிய கண்கள் கொண்ட தன் மனைவியும், தான் வாழ்நாளில் சம்பாதித்த செல்வங்களும் இங்கேயே இருக்க, அவன் உயிர் உடலை விட்டு விடைபெற்றது.


சுடுகாட்டில் பாசத்தையும் சேர்த்து எரிப்பார்கள்

வாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதி
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப்
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.  – (திருமந்திரம் –150)

விளக்கம்:
ஒரு தலைவனும் தலைவியும், மாதவிக் கொடி என்று அழைக்கப்படும் குருக்கத்திக் கொடியின் கீழ் அமர்ந்து பேசிப் பழகினார்கள். பிறகு ஒருநாள் திருமணம் செய்து கொண்டார்கள். வருடங்கள் செல்லச் செல்ல, அவர்களுக்கு இடையே இருந்த உறவு தெவிட்ட ஆரம்பித்தது. வயதான காலத்தில் ஒருநாள் அந்தத் தலைவன் இறந்து போனான். அவனை பாடையில் வைக்கும் போது அவன் மனைவியும் உறவுகளும் அழுது புலம்பினார்கள். ஆனால் சுடுகாட்டில் வைத்து அவனை எரிக்கும் போது, அவன் மேல் இருந்த பாசத்தையும் சேர்த்து எரித்து விட்டார்கள். பிறகு அவனை தெய்வமாக நினைத்து படையல் இட்டார்கள்.


செல்வாக்கெல்லாம் செல்லுபடி ஆகாது

மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே.   – (திருமந்திரம் –149)

விளக்கம்:
ஒரு சிறந்த ஆண்மகனை நம்பி என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட நம்பி ஒருவன் ஊரில் நல்ல வசதியான மாளிகை கட்டி வாழ்ந்து வந்தான். அவன் ஊரே பார்த்து வியக்கும்படி பல்லக்கில் ஏறிச் சென்றான். ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் புத்தாடைகளைத் தானமாக வழங்கினான். அவ்வளவு செல்வாக்காக இருந்த அந்த நம்பி ஒருநாள் திடீரென இறந்து போனான். அவனுடைய பிள்ளைகளெல்லாம் அப்பா எனக் கூவி அழைத்தனர், ஆனால் அவன் திரும்பி வரவில்லை.


உல்லாச வாழ்வு நிலைக்காது

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.   – (திருமந்திரம் –148)

விளக்கம்:
நல்ல ருசியாக உணவினை சமைத்து உண்டார். கொடி போன்ற அழகான பெண்களுடன் உறவு கொண்டார். இடப்பக்கம் வலிக்கிறது என்று சொல்லியவாரே படுத்தார். அப்படியே இறந்து விட்டார்.

சுகவாசியான அவர் நல்ல வகை வகையான சாப்பாடு, அழகான பெண்கள் என்று வாழ்க்கையை அதிலேயே செலவு செய்தார். திடீர்னு ஒருநாள் நெஞ்சு வலின்னு படுத்தார். படுத்தவர் படுத்தவர்தான், அப்படியே செத்து போனார். வாழ்வின் நிலையின்மையை புரிந்து கொண்டு இளமையிலேயே இறைவனை நாடுவோம்.


இறுதிக் கடனில் காக்கைக்கு உணவு

சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக் குப்பலி காட்டிய வாறே.  – (திருமந்திரம் – 147)

விளக்கம்:
நம்முடைய வினைகளுக்குக் காரணமான இந்த உடல், கபம் முதலான நோய்களைக் கொண்டது.  இந்த உடல் நம் உயிரை விட்டுப் பிரிந்த பின், எலும்புகள் எல்லாம் வலுவிழந்து அழியும் தன்மை பெற்றுவிடும். இறந்தவரின் மூக்கில் கை வைத்துப் பார்த்து  இறப்பை உறுதி செய்வார்கள். பிறகு உடலை துணியால் மூடி சுடுகாட்டுக்குக் கொண்டு போய், காக்கைக்கு உணவு வைத்து விட்டு,  இறுதிக்கடன் செய்வார்கள்.

 


பிரிந்த உயிர் மீண்டும் உடலில் புக முடியாது

காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புக அறி யாதே.  – (திருமந்திரம் – 146)

விளக்கம்:
இரண்டு கால்களும், அதற்கு மேலே ஒரு முதுகுத்தண்டும், அதன் பக்கத்தில் பருங்குச்சி போன்ற முப்பத்திரண்டு விலா எலும்புகளையும் கொண்டது நம்முடைய உடல். நாம் இறந்த பின் நம் உடலின் கூரையாகிய தோல், எலும்புகளை விட்டு நீங்கிவிடும். அதன் பிறகு நம்முடைய உயிர் இந்த உடலுக்குள் திரும்பப் புக முடியாது.