சூரியகலை மற்றும் சந்திரகலை

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே.  – (திருமந்திரம் – 93)

விளக்கம்:
வேதத்தில் எண்ணில்லாத மந்திரங்கள் உள்ளன.  சூரியகலை மற்றும் சந்திரகலை ஆகியவற்றை சரியான முறையில் கட்டுப்படுத்தி பயிற்சி செய்யும் போது, மூலாதாரத்தில் உள்ள குண்டலினி என்னும் அரிய நெருப்பு மூண்டு வளரும். அப்போது வேதத்தில் உள்ள அந்த எண்ணில்லாத மந்திரங்கள் வெளிப்படும். அந்நிலையில் உச்சியில் பொன்னொளி போன்ற கிரணங்கள் ஒளி வீசுவதை உணரலாம்.

(இருக்கு – வேதம்,  அருக்கின்ற – சுருங்கி இருக்கின்ற,  அருக்கன் – சூரியன்,  சோமன் – சந்திரன்)


எல்லாம் நந்தி அருளாலே!

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்
நந்தி அருளால் மெய்ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நானிருந் தேனே.  – (திருமந்திரம் – 92)

விளக்கம்:
நந்தி அருளாலே மூலனின் உடலைப் பற்றி நின்றேன். நந்தி அருளாலே ஆகமத்தை பாடும் நிலையை அடைந்தேன். நந்தி அருளாலே மெய்ஞ்ஞானம் கிடைக்கப் பெற்றேன். நந்தி அருளாலே மெஞ்ஞானத்தில் நிலையாக இருந்தேனே.


திருமந்திரம் – சிவபெருமானின் உபதேசம்

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பில் கயிலை வழியில்வந் தேனே.   – (திருமந்திரம் – 91)

விளக்கம்:
இதற்கு முந்தைய பாடலில் திருமூலர், திருமந்திரத்தில் விளக்கப்பட்ட பொருட்களைப் பற்றிச் சொல்லியிருந்தார். இந்தப் பாடலில் அவர் சொல்வது “இந்தத் திருமந்திர நூலில் உள்ள பொருளெல்லாம் மேலான மெய்ஞ்ஞானச் சோதியாகிய சிவபெருமானின் உபதேசங்களாகும். அந்த ஆனந்த நந்தி பெருமான் அளவில்லாத பெருமைகளை உடையவன். தன் நிலையில் அசையாதிருக்கும் அந்த ஆனந்தக் கூத்தனின் ஆணையின்படி, அந்த சிறந்த திருக்கயிலாய மலையில் இருந்து நான் இங்கு வந்தேன்”.

(பரம் – மேலான,  அளப்பில் – அளவற்ற, துளக்கறும் – அசைவு இல்லாத)


திருமந்திரத்தில் விளக்கப்படும் பொருட்கள்

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.  – (திருமந்திரம் – 90)

விளக்கம்:
திருமந்திரம் என்னும் இந்நூலில் விளக்கப்படுபவை – அறியப்படும் பொருள் (பரம்பொருள்), அறிந்து கொள்ள உதவும் ஞானம், அறிந்து கொள்பவனின் தன்மை (ஜீவாத்மா), மாயை, மாயையில் விளங்கும் சக்திகளின் கூட்டம், அந்த சக்திகளில் விளங்கும் சிவன், வாக்கு மனம் ஆகியவற்றிற்கு எட்டாத அந்த சிவபெருமானே அனைத்துக்கும் வித்தாக இருக்கும் தன்மை ஆகியவையாகும்.

(ஞேயம் – அறியப்படும் பொருள், ஞாதுருவம் – அறிபவன்,  பரை ஆயம் – சக்திகளின் கூட்டம்,  அகோசர வீயம் – புலன்களுக்கு எட்டாத விதை)


தற்பரனின் கற்பனை இந்த உலகம்

பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத முமளித் தானெங்கள் நந்தியே.  – (திருமந்திரம் – 89)

காளை, மான், மழு ஆகியவற்றை தன்னுடன் எப்போதும் கொண்டிருக்கும் சிவபெருமானின் கற்பனையாக அமைந்தது இந்த உலகம். அந்த சிவபெருமான் எனக்கு இந்த கற்பனையான உலகத்தின் மீதுள்ள பற்றினை நீக்கி, என் தலையின் மீது தன் திருவடியை வைத்து அருளினான்.

(பெற்றம் – காளை,  மழு – சிவனின் கையில் உள்ள ஆயுதம், தற்பரன் – பரம்பொருள், சராசரம் – பிரபஞ்சம், அற்றம் – நீக்கம்)

கையில் மானும் மழுவும் கொண்டுள்ள சிவன்.

மான்_மழு


பொய் சொன்ன பிரமன்

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே.  – (திருமந்திரம் – 88)

பிரமனும் திருமாலும் சிவபெருமானின் திருவடியையும் திருமுடியையும் காண முயன்றனர். சிவனின் தன்மையை அவர்களால் அறிய முடியவில்லை. வானுலகில் இருவரும் மீண்டும் சந்தித்தனர், திருமால் ‘என்னால் சிவபெருமானின் திருவடியைக் காண முடியவில்லை’ என்று சொன்னார்.  பிரமன் ‘நான் சிவபெருமானின் திருமுடியைக் கண்டேன்’ என்று பொய் சொன்னார்.

(படி – தன்மை,   பார் – பூமி,   மிசை – வானம்)


தமிழ்ச் சாத்திரம்

அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான்
எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும்
தங்கிமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே. – (திருமந்திரம் – 87)

இறைவன் இந்த உடலில் அக்னியை அளவோடு வைத்தான். கடலினுள் அக்னியை வைத்து, கடல் நீர் பொங்கி உலகை அழித்து விடாமல் காத்தான். மூவாயிரம் பாடல்களுக்குள் இந்த திருமந்திரம் என்னும் தமிழ்ச் சாத்திரத்தை வைத்தான். எல்லா பொருளும் இந்த சாத்திரத்தில் அடங்கும்படிச் செய்தான்.


மந்திரமாலை!

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே. – (திருமந்திரம் – 86

இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பிறப்பு என்று உண்டு, பிறந்து விட்டால் இறப்பு என்பதும் ஒரு நாள் உறுதி. சிவபெருமான் இந்த பிறப்பு, இறப்புக்கெல்லாம் அப்பாற்பட்டவன்.  நந்தி என்ற திருப்பெயர் கொண்ட அந்த சிவபெருமானை வானுலகில் உள்ள தேவர்களெல்லாம் வணங்கி, இந்த மந்திரமாலையை மனப்பாடமாகச் சொல்வார்கள். நீங்களும் கூடியிருந்து திருமந்திரம் என்று அழைக்கப்படும் இந்த மந்திரமாலையை அதன் சுவையறிந்து படித்துப் பயன் பெறுங்கள்.


யான் பெற்ற இன்பம்!

யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. – (திருமந்திரம் – 85)

திருமூலர் சொல்கிறார் “ஆன்மிக அனுபவத்தில் நான் பெற்ற இன்பமெல்லாம் இந்த உலகத்தில் உள்ள எல்லா மக்களும் பெறட்டும். விண்ணைத் தாங்கி நிற்கிற வேதப்பொருளான சிவபெருமானைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். அந்த சிவபெருமான் நம் உடலைத் தாங்கி நிற்கிறார், உணர்வுமிக்க மந்திர வடிவில். நாம் அதை உணர முயலும் போது அவர் வெளிப்பட்டு அருள்வார் ”.

விண்ணைத் தாங்கி நிற்பதும் சிவன்தான், இந்த உடலைத் தாங்கி நிற்பதும்சிவன் தான்.


வேதத்தின் சொல்லும் பொருளும்

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே. – (திருமந்திரம் – 84)

திருமூலர் சொல்கிறார் “நம் உள்ளத்தில் சிறந்து விளங்கும் நூல்களில் மிகச் சிறந்தது சிவபெருமான் அருளிய வேதமாகும். அந்த சிவபெருமான், வேதத்தின் உடலாக இருக்கும் சொற்களையும், அந்த சொற்களுக்குள் உற்பத்தியாகும் பொருளையும் எனக்கு உணர்த்தி அருள் செய்தான்”.