சிவமுனி!

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே. – (திருமந்திரம் – 83)

சிவமுனியாகிய நான் யோகவழியில் செல்கின்ற போது பார்த்த காட்சி இது –  மிகுதியான எண்ணிக்கையில்  தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் எல்லாம் காமனை வென்ற ஞானம் மிக்க முனிவர்களாக மாறினார்கள். அவர்களை எல்லாம் வானுலகம் நெருங்கி வருவதைப் பார்த்து வந்தேன். அதாவது அந்த யோகநிலையில் இருந்து மீண்டு வந்தேன்.

இவ்வாறு திருமூலர் சொல்கிறார்.


ஞானத் தலைவி

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே. – (திருமந்திரம் – 82)

ஞானத் தலைவியாம் சக்தியுடன் சிவபெருமான் வசிக்கும் ஊருக்குச் சென்றேன். அங்கே ஒன்பது கோடி யுகங்கள் தீமை எதுவும் ஏற்படாத நிலையில் இருந்தேன். ஞானப் பாலூட்டும் அந்த சிவபெருமானை வணங்கி அந்த அறிவு நிழலில் நான் தங்கி இருந்தேன்.

இவ்வாறாக திருமூலர் தன்னைப் பற்றிச் சொல்கிறார்.


என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே. . – (திருமந்திரம் – 81)

திருமூலர் நம்மைக் கேட்கிறார் “முந்தைய பிறவிகளில் நன்றாக முயன்று தவம் செய்திருந்தால் இப்படி பிறவிகள் எடுத்திருக்க வேண்டியதில்லையே?” தன்னுடைய பிறவி பற்றிச் சொல்கிறார் “என்னை நன்றாக இறைவன் படைத்திருக்கிறான், தான் அருளிய ஆகமங்களை தமிழில் திருமந்திரமாகத் தரும் அளவில். என் பிறவி வீண் போகவில்லை”.


நந்தியின் திருவடி நிழல்

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. – (திருமந்திரம் – 80)

காயம் என்பதற்கு ஒரே நிலையில் இருத்தல் என்றும் ஒரு பொருள் உண்டு, அது இங்கே பொருத்தமாக அமைகிறது.

திருமூலர் சொல்கிறார் “நான் இந்த யோக  நிலையில் எண்ணில்லாத கோடி வருடங்கள் இருக்கிறேன். இரவும் பகலும் இல்லாத பிரகாச வெளியிலே இருக்கிறேன். தேவர்கள் எல்லாம் துதிக்கும் இடத்தில் இருக்கிறேன். என் நந்தியம்பெருமானின் திருவடி நிழலில் எப்போதும் இருக்கிறேன்.”


திருவாவடுதுறை

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்துறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. – (திருமந்திரம் – 79)

சக்தியை தனதொரு பாகமாகக் கொண்டுள்ள சிவபெருமானைச் சேர்ந்து வழிபட்டிருந்தேன். சிவபெருமானை நான் சேர்ந்த இடம் திருவாவடுதுறை. அங்கே சிவ அறிவு எனும் நிழலில் தங்கியிருந்தேன், சிவ நாமங்கள் ஓதியபடியே!


திருமூலர் தென்னகத்துக்குக் வந்த காரணம்

மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. – (திருமந்திரம் – 77)

திருமூலர் தன் மாணவர்களில் ஒருவரான மாலங்கனைப் பார்த்து சொல்கிறார் – “மாலாங்கனே! நான் இந்த தென்திசைக்கு வந்த காரணம், நீல நிற மேனியும் சிறந்த அணிகளையும் உடைய உமையம்மைக்கு சிவபெருமான் முதன்முதலாக சொன்ன ஒழுக்கத்தை போதிக்கும் சிவாகமத்தை எடுத்து சொல்ல வந்தேன்”.


கற்கும் காலத்தில் அளவான உணவு நல்லது

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுடனே உணர்ந் தோமால். – (திருமந்திரம் – 76)

சதாசிவம் அருளிய தத்துவம், முத்தமிழ் மொழிகள், வேதங்கள் ஆகியவற்றை கற்கும் காலத்தில் அளவுடன் உணவு கொண்டிருந்தேன். சுகாசனத்தில் இருந்து மனம் தெளிவு பெற்றேன். அதனால் என் மனம் அந்த தத்துவங்களைப் புறக்கணிக்கவில்லை, அவற்றைக் கற்று நான் பொருள் உணர்ந்தேன்.


அருந்தவச் செல்வி

இருந்தவக் காரணம் கேளிந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே. – (திருமந்திரம் – 75)

ஏழு ஆதாரங்களிலும் நான் பொருந்தியிருந்து தவம் செய்யக் காரணமாக இருந்தது என்ன தெரியுமா இந்திரனே? எல்லா உலகங்களுக்கும் தலைவியான அருந்தவச் செல்வியை அன்புடன் சேவித்து வந்தேன் பக்தியினாலே!


தனிக்கூத்து கண்ட திருமூலர்

செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே. – (திருமந்திரம் – 74)

திருமூலர் சொல்கிறார் – ”நான் சொல்லும் இந்த திருமந்திரம் சிவாகமம் என்னும் பேர் பெற்றது, அந்த ஆகமத்தை எனக்கு அருளிய நந்தி பெருமானின் திருவடியை நான் பெற்றதாலேயே! தில்லையம்பலத்தில் அந்த சிவபெருமானின் ஒப்பற்ற நடனத்தை கண்டபின் ஒப்பளவில் ஏழு கோடி யுகம் இருந்தேன்”.


திருமந்திரம் என்னும் ஆகமம்

நந்தி திருவடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்
தந்தி மதிபுனை அரனடி நாள்தொறும்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே. – (திருமந்திரம் – 73)

என் குருநாதரான நந்தி பெருமானின் திருவடிகளை என் தலை மேற்கொண்டு புத்தியில் நிறுத்தி வணங்குகிறேன். மாலைச் சந்திரனை தன் தலையில் சூடியுள்ள சிவபெருமானின் திருவடிகளை நாள்தோறும் நினைத்து தியானம் செய்து இந்த திருமந்திரம் என்னும் ஆகமத்தை சொல்லத் தொடங்குகிறேன் என திருமூலர் சொல்கிறார்.