இறந்த பின் எடுத்துச் செல்லக்கூடிய பரிசு

உடம்போடு உயிரிடை விட்டோ டும் போது
அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர்
சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.  – (திருமந்திரம் – 176)

விளக்கம்:
நம்முடைய உடலை விட்டு உயிர் பிரியும் நேரம்தான் நமக்கு ஒரு விஷயம் புரியும்.  இந்த வாழ்க்கையில் நாம் எந்தப் பரிசையும் வென்றிருக்கவில்லை என்பது தான் அது. நாம் சம்பாதித்திருப்பது  எல்லாம் உண்மையான பரிசு இல்லை. நம் உயிர் இந்த உடலை விட்டு பிரியும் போது நாம் எடுத்துச் செல்லக் கூடிய செல்வம் தான் உண்மையான பரிசு. அண்ணல் சிவபெருமானை நினைத்திருக்கும் மனநிலை தான் உண்மையில் நாம் எடுத்துச் செல்லக்கூடிய பரிசாகும். சுடுகாட்டில் எரியும் நெருப்பு கூட நம் உடலைத் தான் எரிக்கும், நம் சிவநினைவை அந்த நெருப்பு எரிக்காது.


உயிர் வெளியேற ஒன்பது வழி

வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.  – (திருமந்திரம் – 175)

விளக்கம்:
அர்த்தம் இல்லாத இந்த உலக வாழ்க்கையின் மீது நமக்கு ஆசை பெருகி விட்டது. இந்த வாழ்க்கை நிலையானது இல்லை என்னும் உண்மையை நாம் உணர்வது இல்லை. நமது உடலையும் உயிரையும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கும் தறி ஒன்று உள்ளது. அந்தத் தறியின் கட்டு அவிழும்போது உயிர் வெளியேற ஒன்பது வழியிருக்கிறது. நாம் இறந்த பிறகு நம்மை இந்த பூமிக்குக் கொண்டு வந்த தாய் மற்றும் உறவினர்கள் எல்லாம் வணங்கிச் சுடுகாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். அதற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.


போதாது போதாது என்பார்

வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள்
மேவு மதனை விரிவுசெய் வார்கட்குக்
கூவுந் துணையொன்று கூடலு மாமே.   – (திருமந்திரம் – 174)

விளக்கம்:
இல்லற வாழ்வில் மனைவி, பிள்ளைகள், உடன் பிறந்தோர் ஆகியவர்க்கு தேவையான பொருளுக்கு அளவு என்பதே கிடையாது. அவர்களுக்காக மிகுதியான பொருள் சேர்த்து அதை பெருக்கிக் கொள்வதிலேயே வாழ்நாளை செலவிடுபவர் இந்த உலகை விட்டு போகும் போது யாரையும் துணைக்கு கூப்பிட முடியாது.


அவிழ்கின்ற ஆக்கை இது!

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே. – (திருமந்திரம் – 173)

விளக்கம்:
அளவில்லாத பொன்னையும், செல்வத்தையும் கண்டால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் அவையெல்லாம் வெள்ளம் வந்தால் கவிழ்கின்ற படகைப் போல அழியக்கூடியவை. நம் உடலையும், உயிரையும் பிணைத்துள்ள கட்டு ஒருநாள் அவிழ்ந்து விடும்.  மனத்தில் தெளிவில்லாதவர்கள், அழியப்போகிற இந்த உடலுக்கு செல்வம் சேர்த்து வைப்பதையே வீடு பேறாக நினைக்கிறார்கள்.

கலம் – படகு,    ஆக்கை – உடல்


தெளியுங்கள்! தெளிந்த பின் கலங்காதீர்கள்!

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே. – (திருமந்திரம் – 172)

விளக்கம்:
செல்வம் நிலையானதில்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். தெளிந்த பின் மீண்டும் மனக்குழப்பம் அடையாதீர்கள். ஆற்று வெள்ளம் போல செல்வம் வந்து சேர்ந்தாலும் மனம் மயங்கி விடாதீர்கள். பணத்தினால் ஏற்படக் கூடிய மனமாற்றத்தை மறுத்தால் மனம் தெளியும். மேலும் நம் வாழ்நாளின் இறுதியில், எமன் வந்து கூப்பிடும் போது செல்வத்தின் மேல் உள்ள பற்றை கடந்து செல்ல முடியும்.

பணத்து மேல ரொம்ப ஆசை வச்சுட்டா, கடைசியில சாவு ரொம்ப துன்பமானதா இருக்கும்.

கலங்கன்மின் – மனக்குழப்பம் அடையாதீர். கலக்கி மலக்காதே – குழம்பி மயங்காதே. குதித்தல் – கடந்து விடுதல்.


அதிக செல்வம் ஆபத்தானது

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட்டு அதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. – (திருமந்திரம் – 171)

விளக்கம்:
தேன் இருக்கும் மலரை அதன் வாசனையைக் கொண்டு அறிந்து கொள்ளும் வண்டு. அப்படி வாசனை பிடித்து மலர்களில் உள்ள தேனைக் கொண்டு வந்து மரக்கிளையில் சேர்த்து வைக்கும். அந்தத் தேனின் அளவு மிகும்போது அது வலிமையுடைய வேடர்களின் கவனத்தை ஈர்க்கும். அவர்கள் தேனை எடுத்துச் செல்ல முயலும் போது, வண்டுகள் வேறு வழியில்லாமல் விட்டுக்கொடுத்து தான் ஆக வேண்டியுள்ளது. நாம் தேடி வைக்கும் செல்வத்தின் நிலையும் அதுதான். ஒருவனிடம் அதிகமான செல்வம் இருந்தால், பகைவர்கள் தங்கள் சூழ்ச்சியாலும், வலிமையாலும் அதை அபகரிக்க நினைப்பார்கள்.

இரதம் – இரசம், தேன்         கொம்பு – மரக்கிளை


நம்முடைய நிழல் கூட நமக்கு உதவாது

தன்னது சாயை தனக்குத வாதுகண்டு
என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே. – (திருமந்திரம் – 170)

விளக்கம்:
நம்முடைய நிழல் கூட நமக்கு உதவாது என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அப்படி இருக்கும் போது, நம்மிடம் இருக்கும் செல்வமெல்லாம் நமக்குச் சொந்தமானது என்று நினைப்பது அறியாமை ஆகும். உடலும் உயிரும் ஒன்றாகப்  பிறந்தாலும் உயிர் போகும் போது உடல் அழிந்து விடும். அதனால் உயிர் உள்ள போதே அகக்கண்ணில் உள்ள பேரொளியை கண்டு உணர்வோம்.

சாயை – நிழல்,   மாடு – செல்வம்,   ஏழை – அறியாமையில் இருப்பவர்கள்


செல்வ மழையில் நனையலாம்!

இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே. – (திருமந்திரம் – 169)

விளக்கம்:
வானத்தில் அவ்வளவு பிரகாசமாக உலவும் நிலவு கூட மாதத்தில் ஒரு நாள் தன் ஒளி இழந்து இருளாகிறது. அப்படி இருக்கும் போது துக்கத்தையே தரும் செல்வத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இன்றிருக்கும் செல்வம் நாளை இல்லாமல் போகலாம்.  நாம் நம் மனமயக்கம் நீங்கி வானவர் தலைவனான சிவபெருமானை நாடி நிற்போம். அவன் திருவருளாகிய செல்வமழையில் நனையலாம்.

சிவபெருமானின் அருளே பெருஞ்செல்வமாகும்.


செல்வம் வேண்டாம், செல்வன் போதும்.

அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவ மன்றே.  – (திருமந்திரம் – 168)

விளக்கம்:
மக்களுக்குத் தேவையானதை அருளக்கூடிய அரசபதவி, யானைப்படை, தேர்ப்படை மற்றும் அளவில்லாத பொன் பொருள், இவை யாவுமே நிலையானவை கிடையாது. இவை எல்லாவற்றையும் ஒருநாள் பகைவன் வந்து அபகரித்துக் கொள்ளும் அபாயம் உண்டு. நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே, நிலையான செல்வத்தை உடைய ஈசன் அடியைச் சேர்ந்து இருந்தால் தெளிவான அறிவைப் பெறலாம். நம் துன்பமெல்லாம் மறைந்து போகும். ஈசன் திருவடியைச் சேர்ந்திருப்பதே சிறந்த தவமாகும்.

பொருட்செல்வத்தை விட அருட்செல்வமே நிலையானது. அச்செல்வத்தை நமக்கு அருளும் செல்வன் ஈசன் ஆவான்.

தெருள் – தெளிவான அறிவு


நம் செல்வமெல்லாம் சிவனடிக்கே!

போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி
தேற்றுமின் என்றும் சிவனடிக் கேசெல்வம்
ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.  – (திருமந்திரம் –24)

விளக்கம்:
புனிதனான அந்த சிவபெருமானின் திருவடியை புகழ்ந்து போற்றிப் பாடுவோம். மயங்கிக் கிடக்கும் நம் சிந்தையை மாற்றி நம்முடைய செல்வமெல்லாம் சிவனடிக்கே உரியதாகும் என தெளிவு பெறுவோம். அப்படி தெளிவு பெற்றவரிடத்தில் சிவன் நிலையாய் விளங்குவான்.

(மயலுற்ற – மயக்கம் அடைந்த, தேற்றுமின் – தெளியுங்கள்)

We praise and sing of his Holy Feet,
We dedicate all our treasures to his Holy Feet.
Thus who get cleared from their disturbed mind,
the Lord being with them firmly.