அன்பே சிவம்

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. – (திருமந்திரம்-270)

விளக்கம்:
அன்பும் சிவமும் வேறானவை என்று ஒருவர் சொன்னால், அவர் ஒன்றும் அறியாதவர் ஆவார். அன்புதான் சிவம் என்பதை அவர்கள் தெரிந்துகொள்வதில்லை. அன்புதான் சிவனை அறியும் வழி என்பதை ஒருவர் அறிந்தபின், அவர் அன்பானவராய் இருப்பார், சிவத்தன்மை அடைவார்.


அற்பர்களைப் போற்ற வேண்டாம்

செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே. – (திருமந்திரம் – 269)

விளக்கம்:
ஒரு வில் வீரனுடைய குறி இலக்கை நோக்கியே இருப்பது போல, நமது நோக்கம் வீடுபேறு அடைவதாக இருக்க வேண்டும். வீடுபேறு அடைவதற்காக நாம் இறைவனைத் துதிப்போம். தர்ம சிந்தனை இல்லாத செல்வந்தர்கள் அற்பர்கள். பணத்துக்காக அவர்களைப் போற்றிப் புகழ்ந்து, பிறகு வருத்தத்தில் வாட வேண்டாம்.


நேர்மை இல்லாதவர்க்கு இன்பம் கிடையாது

கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்
நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யின் பசுவது வாமே. – (திருமந்திரம் – 268)

விளக்கம்:
நேர்மை இல்லாத செயல்களைச் செய்து நம்மால் இன்பம் அடைய முடியாது. அழிவில்லாத புகழை உடைய நம் இறைவன் நேர்மை இல்லாதவர்க்கு இன்பத்தை அனுமதிக்க மாட்டான். நாம் நல்ல நிலையை அடைவதும், நிலைபெற முடியாமல் கெடுவதும் நம் வினைகளினாலே! அதனால் இல்லாதவர்க்கு அன்னம் இடுவது பற்றியும், உதவி செய்வது பற்றியும் எண்ணுவோம். அவ்வாறு இல்லாமல் பிறருக்கு கெடுதல் செய்ய நினைப்பது விலங்குத்தன்மை ஆகும்.


அன்பிலார் அறம் அறியார்

இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறமறி யாரே. – (திருமந்திரம் – 267)

விளக்கம்:
இன்பமும் துன்பமும் நம் வாழ்க்கையில் கலந்திருக்கின்றன. அவை எல்லாம் நாம் நமது முற்பிறவிகளில் செய்த செயல்களுக்கு ஏற்ப அமைகின்றன. ஆனால்  அறச்செயல்கள் செய்வதால் இந்தப் பிறவியிலேயே இன்பம் கிடைப்பதைப் பார்க்கிறோம். அதையெல்லாம் பார்த்தும் தொடர்ந்து அறத்தைப் பற்றிய எண்ணம் கொள்ளாத அன்பில்லாதவர்களாய் இருக்கிறோம்.


மெலிந்த சினம்!

கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர்
மலிந்தவர் மாளும் துணையும்ஒன் றின்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே. – (திருமந்திரம் – 266)

விளக்கம்:
மனம் பக்குவம் அடைந்தவர்கள் ஈசனின் திருவடியைக் காண்பார்கள். துணிவுடன் உலகப் பற்றை விட்டு தவம் செய்பவர்கள் ஈசனின் சொர்க்கத்தை ஆள்வார்கள். மலிவான வாழ்க்கை வாழ்பவர்கள் இறைவனின் துணை கிடைக்காமல் அழிவார்கள். அவர்கள் தளர்ச்சி தரும் மனப் போராட்டத்திற்கு ஆளாகி நரகத்தில் வீழ்வார்கள்.

(துறக்கம் – சொர்க்கம்,  மெலிந்த – தளர்ந்த,  சினம் – போர்).


கர்ம வினைகளைக் கடக்கலாம்

வழிநடப் பாரின்றி வானோர் உலகம்
கழிநடப் பார்நடந் தார்கரும் பாரும்
மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு
வழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே.  – (திருமந்திரம் – 265)

விளக்கம்:
அறவழியில் நடப்பவர்கள் தம் வாழ்நாள் முடிந்ததும், தேவர்கள் வாழும் உலகத்தை அடைவார்கள். தீய வழியில் நடப்பவர்கள் நரகத்தை அடைவார்கள். நாம் தீய செயல்களை அறவே நீக்கி விட்டு, அவற்றை இனியும் செய்யாமல் தவிர்த்து நல்ல வழியில் நடந்தால், கர்ம வினைகளைக் கடந்து வாழலாம்.


நல்ல மனம் கொண்டவர்களே!

பரவப் படுவான் பரமனை ஏத்தார்
இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயார்
கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சி னீரே. – (திருமந்திரம் – 264)

விளக்கம்:
நல்ல மனம் கொண்டவர்களே! மிகுந்த புகழை உடைய சிவபெருமானை நீங்கள் வணங்குவதில்லை. உங்களிடம் உதவி தேடி வருபவர்களுக்கு உதவுவதில்லை. குடம் சுமந்து நீர் உற்றி மரங்கள் கொண்ட சோலைகளை வளர்க்கவும் மாட்டீர்கள். நீங்கள் எல்லாம் நரகத்தில் நிலை கொண்டு நிற்க விரும்புகிறீர்களா?

(பரவப்படுவான் – புகழப்படுவான்,    கரகம் – குடம்,   கா – சோலை)


நோயின்றி வாழலாம்

இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்
உருமிடி நாகம் உரோணி கழலை
தருமம்செய் வார்பக்கல் தாழகி லாவே. – (திருமந்திரம் – 263)

விளக்கம்:
தருமம் செய்யாதவரை இருமல், சோகை, ஆஸ்துமா, தொழு நோய் ஆகியவை உரிமை கொண்டாடும். அச்சம் தரும் இடி, பாம்பு, தொண்டைப் புண், வயிற்றுக் கட்டி ஆகியவை தருமம் செய்பவர் பக்கம் நெருங்காது.

(தருமம் – நற்செயல்,   ஈளை – ஆஸ்துமா,  வெப்பு – தொழு நோய், உரோணி – தொண்டைப் புண்,  கழலை – வயிற்றுப் புண்)


தமக்குத் தாமே பகைவர் ஆகிறார்கள்

அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே. – (திருமந்திரம் –262)

விளக்கம்:
இந்த உலகில் பலர் அறம் அறியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அண்ணல் சிவபெருமானின் திருவடியைப் பற்றி நினைப்பதில்லை. சிவலோக நகர்க்குச் செல்லும் திசையை அறிந்து கொள்வதில்லை. பொய்யான வார்த்தைகளை மட்டுமே நம்பும் அவர்கள் பாவத்தை மட்டுமே அறிவார்கள். அவர்கள் தமக்குத் தாமே பகைவர் ஆகிறார்கள்.


சாறு பிழிந்த சக்கை ஆனோம்!

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே. – (திருமந்திரம் –261)

விளக்கம்:
காலங்கள் பல கழிந்தன. பல யுகங்களும் போயின. நம்முடைய கற்பனைகள் எல்லாம் வெறும் கற்பனைகளாகவே போனது. நம் வாழ்நாளும் குறுகிக்கொண்டே போகிறது. சாறு பிழியப்பட்ட சக்கை போல ஆனது நம்முடைய உடல். அதுவும் அழியத்தான் போகிறது. இத்தனை பார்த்தும் இன்னும் நாம் அறத்தின் பயனை அறிந்து கொள்ளவில்லையே!