மூச்சை வசப்படுத்தினால் மனம் வசப்படும்

புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்
திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றதவ் வுள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.    – (திருமந்திரம் – 586)

விளக்கம்:
வெளியே விடும் மூச்சை சிறிது நேரம் உள்ளே நிறுத்தி, திறமையுடன் மனத்தை மூச்சுடன் பொருந்தி நிற்கச் செய்தால், மனத்தின் எண்ண ஓட்டம் நின்று மனம் வசப்படும். நம்முள்ளே குடியிருக்கும் நம் சிவபெருமான் நம்மை விட்டு நீங்க மாட்டான்.

திறமையுடன் கும்பகம் செய்தால் மனம் நம் வசப்படும்.


பிரத்தியாகாரத்தின் பெருமை

ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.    – (திருமந்திரம் – 585)

விளக்கம்:
புருவ மத்தியில் தியானம் செய்யும் போது எற்படும் மாயையான உணர்வுகளைப் பிரித்துணர்ந்து, அம்மாயைகளில் சிக்காமல் கடந்து சென்று மேலும் உள்நோக்கு சிந்தையில் மனம் கரைந்து போக வேண்டும். அப்படி பயிற்சி செய்தால் உண்மையான பேரொளியை உணரலாம். பிரத்தியாகாரத்தின் பெருமை இதுவே!

தியானப் பயிற்சியின் போது மாயமான பல காட்சிகள் தோன்றும். அவற்றில் மனம் மயங்கினால் உண்மையான மெய்ப்பொருளை அடைய முடியாது. தோன்றும் காட்சிகளில் உள்ள மாயத்தன்மையை உணர்ந்து, உண்மையான பேரொளியைத் தேடி மேலும் உள்நோக்கு முகமாய்த் தியானம் செய்வோம்.

உபாதி – மாயையினால் உண்டாகும் தோற்றம்


மூலாதாரத்தில் மனத்தைச் செலுத்துவோம்

எருவிடும் வாசற் கிருவிரல் மேலே
கருவிடும் வாசற் கிருவிரல் கீழே
உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.    – (திருமந்திரம் – 584)

விளக்கம்:
நம் உடலில் மலம் கழிக்கும் வாசலுக்கு இரு விரல் அளவு மேலேயும், கருவினை உண்டாக்கக் கூடிய குறிக்கு இரு விரல் அளவு கீழேயும் உருப்பெற்றுள்ளது சோதி வடிவிலான குண்டலினி. அதில் மனம் செலுத்தி தியானம் செய்ய வல்லவர்களிடம், நம் பிறப்புக்குக் காரணமான அந்த பேரொளியாகிய சிவபெருமான்  கலந்து விளங்குவான்.


காலத்தை வெல்லும் வழி

மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே.    – (திருமந்திரம் – 583)

விளக்கம்:
மூலாதாரத்தை நோக்கி மனம் செல்ல விடாமல் தடுத்து, மனத்தை புருவ மத்தியில் வைத்திருப்போம். வேல் போன்ற கூர்மையான கண்களை மூடாமல் விழித்திருந்து மனம் புருவ மத்தியிலேயே நிலைத்திருக்கும்படி தியானம் செய்வோம். காலத்தை வெல்லும் வழி இதுவே ஆகும்.

முக்காரம் – தாழ்ப்பாள்


அநாகதத்தில் மனத்தை செலுத்துவோம்

நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்துந்
தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே.    – (திருமந்திரம் – 581)

விளக்கம்:
நாசிக்கு பன்னிரண்டு அங்குலம் கீழேயுள்ள இதயத்தில் மனத்தை செலுத்தி, மனம் வேறு எங்கும் செல்ல விடாமல் நிறுத்துவதில் வல்லமை பெறுவோம். அப்படி மனம் அங்கே நிலை பெற்று நின்றால் பெருஞ்சித்திகளும், அரச யோகமும் வந்து சேரும். நம் உடலுக்கு என்றும் கேடு உண்டாகாது.

நாசிக்கு பன்னிரண்டு அங்குல கீழே உள்ள இடம் அநாகதம் எனப்படும் நான்காவது ஆதார நிலையாகும். மனத்தை அங்கு நிலை நிறுத்தப் பயின்று பயன் பெறுவோம்.


செஞ்சுடராகிய குண்டலினி

மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளேழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே.    – (திருமந்திரம் – 580)

விளக்கம்:
மூலாதாரத்திற்கு இரண்டு விரல் அளவு மேலேயும், முன்பக்கம் உள்ள பிறப்பைத் தரும் குறிக்கு இரு விரல் அளவு கீழேயும் உள்ள இடத்தில் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது குண்டலினி. அக்குண்டலினியில் இருந்து எழும் செஞ்சுடர் கொப்பூழுக்கு நாலு விரல் அளவு கீழே உள்ளது.

மூலம் – மூலாதாரம்,   பாலித்த – பிறப்பைத் தருகின்ற,  கோலித்த – வட்டமிடும்,  நாபி – கொப்பூழ்


குண்டலினி இருக்கும் இடத்தில் மனத்தை செலுத்துவோம்

நாபிக்குக் கீழே  பன்னிரெண் டங்குலந்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே.    – (திருமந்திரம் – 579)

விளக்கம்:
கொப்பூழுக்குக் கீழே பன்னிரண்டு அங்குலத்தில் மனத்தை நிலை நிறுத்தும் மந்திரத்தை நாம் அறிந்து கொள்ளவில்லை. அந்த மந்திரத்தை நாம் அறிந்தபின் அந்த ஈசன் மகிழ்வோடு வந்து நம்மிடம் குடிபுகுவான்.

குண்டலினி இருக்கும் மூலாதாரத்தில் மனத்தை செலுத்தி நிலை நிறுத்தினால், அந்த ஈசன் நம் உள்ளத்தில் வந்து தங்குவான். அவனுடைய இனிய கீதத்தை நாம் உள்ளே உணரலாம்.

நாபி – கொப்பூழ்,   தாபி – நிலைநிறுத்து


மனத்தை உள்நோக்கித் திருப்புவோம்

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.    – (திருமந்திரம் – 578)

விளக்கம்:
மனத்தை வெளியே செல்ல விடாமல் தடுத்து, உள்நோக்கிப் பார்த்தால் உள்ளே நமது இயல்பான ஒளி மிகுந்த குணங்களைக் காணலாம். பழங்காலத்திலிருந்து எங்கெங்கோ விரும்பித் தேடப்படும் பரம்பொருளை நாம் இன்றே இங்கே நமக்குள் காணலாம்.

பரம்பொருளான சிவபெருமானை வெளியுலகிலும், வேதங்களிலும் தேடுவதை விட்டு, மனத்தை உள்நோக்கு முகமாக திருப்பி நமக்குள்ளேயே அந்த பரம்பொருளைக் காணலாம்.

பண்டு – பழங்காலம்,  உகந்து – விரும்பி


எந்தச் சூழ்நிலையையும் எளிதாகக் கடக்கலாம்

பன்னிரண் டானைக்குப் பகலஇர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே.   – (திருமந்திரம் – 577)

விளக்கம்:
பன்னிரண்டு அங்குல நீளத்தில் ஓடும் நம்முடைய மூச்சுக்காற்று, இரவும் பகலுமாக மாறும் நமது வாழ்க்கையின் சூழல்களில் சிக்கித் தவிக்கிறது. அந்தப் பிராணனை கட்டுப்படுத்தும் முறையை பாகனாகிய நாம் அறிந்து கொள்ளவில்லை. பிராணனை கட்டுப்படுத்தும் பிராணாயாமப் பயிற்சியை நாம் அறிந்து கொண்டால், நமது மூச்சுக்காற்றின் நீளம் சூழல்களில் சிக்கிக் குறையாது. எந்தச் சூழ்நிலையையும் நாம் எளிதாகக் கடக்கலாம்.

இப்பாடலில் நம் மூச்சுக்காற்று யானையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.  யானையை பாகன் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல் நாம் நம் மூச்சுக்காற்றை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம்.


பிராணாயாமத்தால் அழகு பெறலாம்

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோல அஞ்செழுத் தாமே.   – (திருமந்திரம் – 576)

விளக்கம்:
சிறு வயதில், நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரண்டு அங்குல நீளம் உள்ளே புகுவதும், ஓடுவதுமாய் உள்ளது. கொஞ்சம் வயதான பிறகு எட்டு அங்குல அளவே முச்சை இழுக்கிறோம், நாலு அங்குல நீளத்தை துண்டிக்கிறோம். பிராணாயாமப் பயிற்சி செய்து விடுபட்ட நான்கு அங்குலமும் சேர்த்து சுவாசித்து வந்தால் திருவைந்தெழுத்தைப் போல அழகு பெறலாம்.

பிராணாயாமப் பயிற்சியின் மூலம் மூச்சு விடும் அளவை பன்னிரண்டு அங்குல அளவுக்கு நீளச்செய்தால் தெய்வீக அழகு பெறலாம்.

கூடம் – உடல்,   மங்கையர் – பிராண சக்தி,   கோலம் – அழகு