விந்துவை செலுத்தும் வாயு

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே.  – (திருமந்திரம் – 480)

விளக்கம்:
ஆண் பெண் கூடலின் போது, விந்துவை செலுத்தும் வாயுவானது குறைந்திருந்தால், பிறக்கும் குழந்தை உயரம் குறைந்ததாக இருக்கும். பாய்ச்சும் வாயு மெலிந்திருந்தால், பிறக்கும் குழந்தை முடமாக இருக்கும். விந்துவை செலுத்தும் வாயு தடைப்பட்டால், பிறக்கும் குழந்தை கூனாக இருக்கும். இதையெல்லாம் பார்க்கும் போது, ஆணின் விந்தைப் பாய்ச்சும் வாயு ஒன்று இருப்பது போல, பெண்களின் சுரோணிதத்தை பாய்ச்சும் வாயு என்று எதுவும் இல்லை என்பது புரியும்.


குழந்தையின் ஆயுள் சிறக்க …

பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே.  – (திருமந்திரம் – 479)

விளக்கம்:
கூடலின் போது, ஆணின் விந்து ஐந்து விரற்கடை அளவு பாய்ந்தால் பிறக்கும் குழந்தையின் ஆயுள் நூறு வருடங்களாகும். நான்கு விரற்கடை அளவு பாய்ந்தால் பிறக்கும் குழந்தையின் ஆயுள் எண்பது வருடங்களாகும். யோகிகளுக்கு இந்தக் கணக்கு தெரியும். கூடலின் போது மூச்சைக் கட்டுப்படுத்தி, விந்து அதிக தூரத்துக்கு பாயச் செய்யும் முறை அவர்களுக்குத் தெரியும். நாமும் யோக வழியில் நின்றால், இந்த மூச்சுக் கணக்கை அறியலாம்.


பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா?

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.  – (திருமந்திரம் – 478)

விளக்கம்:
கூடலின் போது, ஆணின் ஆளுமை அதிகமாக இருந்தால், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும். பெண்ணின் ஆளுமை அதிகமானால், பிறக்கும் குழந்தை பெண்ணாகும். ஆண், பெண் இருவரின் ஆளுமையும் சம அளவில் இருக்கும் போது, பிறக்கும் குழந்தை அலியாகும். கூடலின் போது ஆணின் விந்தில் உயிராற்றல் மிகுந்திருந்தால், பிறக்கும் குழந்தை இந்த உலகத்தை ஆளும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். பாய்கின்ற விந்து அழிக்கும் ஆற்றல் கொண்டதாக இருந்தால், உருவாகும் கரு பயனின்றி அழிந்து விடும்.


குழந்தை ஆணா பெண்ணா என்பது முக்கியம் இல்லை!

மாண்பது வாக வளர்கின்ற வன்னியுங்
காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே.  – (திருமந்திரம் – 477)

விளக்கம்:
தாயின் வயிற்றில் உண்டாகும் குழந்தை ஆணா, பெண்ணா, அலியா என்பதெல்லாம் முக்கியம் இல்லை. உடலோடு உயிராகத் தோன்றி வளர்வது பெருமையான விஷயம். எந்தக் குழந்தையாக இருந்தாலும், அது தாய் தந்தையின் தன்மையைக் கொண்டிருக்கும். நாம் எல்லாம் இந்த உடலைப் பெற்றிருப்பது சிவபெருமானின் வல்லமையினாலே!


சிவனும் சக்தியும் நம்முள்ளே நிறைந்திருக்கிறார்கள்!

வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே.  – (திருமந்திரம் – 476)

விளக்கம்:
நமது முற்பிறவியின் வினைகளுக்கு ஏற்ப நமக்கு புதிய பிறவியை வகுக்கிறாள் சக்தி. நமது நல்வினைகளுக்கு ஏற்ப துன்பம் என்னும் இருளை நீக்குகிறான் நற்சோதியான சிவபெருமான். இருவரும் சேர்ந்தே உலகின் படைப்பை முடிவு செய்கிறார்கள். சிவனும் சக்தியும் நமக்கெல்லாம் உயிரைக் கொடுத்து, உணர்வைக் கொடுத்து, நமக்குள்ளேயும் நிறைந்து நிற்கிறார்கள்.


சிவனும் சக்தியும் நமது வளர்ப்புத் தாயார்கள்!

அருளல்ல தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.  – (திருமந்திரம் – 475)

விளக்கம்:
சிவனும் அன்பும் வேறு வேறு இல்லை. அன்பு இல்லாமல் சிவன் இல்லை, சிவன் இல்லாமல் அன்பு இல்லை. அப்படி அன்பே வடிவான சிவன் நமக்கு இந்த உயிரைத் தந்திருக்கிறான். சிவனும் சக்தியும் நமக்கு வளர்ப்புத் தாயார்களாக இருந்து நம்மை அன்போடு வளர்க்கிறார்கள்.


இயல்பாகவே நமக்கு வேதங்களைப் பிடிக்கும்!

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடைப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாக வகுத்துவைத் தானே.  – (திருமந்திரம் – 474)

விளக்கம்:
நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமான், நம்முடைய உடலைப் படைக்கும் போது தானும் அதில் கலந்து விடுகிறான். நம்முடைய ஆன்மா தன்னுடைய தளையில் இருந்து விடுபட வேதங்களைப் படைத்தான். நம்முடைய ஐம்புலன்களும் வேதங்களை விரும்பிக் கற்கும்படியான ஒரு அமைப்பை, நம் உடல் உருவாகும் போதே படைத்திருக்கிறான் அவன். நாம் வேதங்களைக் கற்று உணர்ந்து, நம்முடைய தளைகளில் இருந்து விடுபடுவோம்.


நுண்ணுடலைக் கட்டுவதும் அவிழ்ப்பதும் அவனே!

எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பை
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.  – (திருமந்திரம் – 473)

விளக்கம்:
நம்முடைய பருவுடலின் கருவிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை செயல்பட, நுண்ணுடலின் கருவிகளான மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது. நுண்ணுடலின் துணை இல்லாமல் பருவுடல் இயங்காது. இந்த உலகத்தின் மீது உள்ள பற்றுதலால் பிறப்பெடுத்துள்ள நம் உடலில் நுண்ணுடம்புக் கருவிகளைக் கட்டுவதும், நம்முடைய வாழ்நாளின் முடிவில் அவற்றை அவிழ்ப்பதும் சிவபெருமானே! இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


கருவிலேயே சிவன் நம்முடன் கலந்து விடுகிறான்!

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.  – (திருமந்திரம் – 472)

விளக்கம்:
பூவைப் போன்ற யோனியுடன் மொட்டுப் போன்ற ஆண்குறி பொருந்தும் போது, அங்கே யோனி மலர்கின்றது. மலர்ந்த பின், அங்கே வயிற்றில் சுமக்கக்கூடிய கரு ஒன்று ஒளிமிகுந்த சிவ அணுக்களுடன் பிறக்கிறது. அந்தக் கருவின் பருவுடலோடு, நீரில் கலந்திருக்கும் குமிழியின் நிழல் போலே, நுண்ணுடலின் கருவிகள் எட்டும் பரவி நின்று அக்கருவைக் காத்திடும்.


கருவுக்கு உரு கொடுத்தவன்!

கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு
நீட்டுநின் றாகத்து நேர்ப்பட்ட வாறே.  – (திருமந்திரம் – 471)

விளக்கம்:
அனைத்து வேதங்களிலும் இருந்து நான் கேட்டுத் தெரிந்து கொண்டது என்னவென்றால், இந்த உலகத்தைப் படைத்தவன் நம் சிவபெருமான் என்பதையே! அழிவில்லாத பெரும் சுடராகிய அவன், இந்த உலகின் முதல் படைப்பாளி ஆவான். ஆண் பெண் கூட்டுறவின் போது சேரும் விந்து மற்றும் சுரோணிதத்திலிருந்து கருவை உருவாக்குபவன் அவனே! உருவான கருவுக்கு உருவம் கொடுத்து நல்லதொரு உடலை உருவாக்குபவனும் அவனே!