ஒன்றே செய் அதை நன்றே செய்

இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி
எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே. – (திருமந்திரம் – 1568)

விளக்கம்:
இந்தத் தவம் செய்தால் இந்த பலன் பெறலாம், அந்தத் தவம் செய்தால் அந்த பலன் பெறலாம் என்று நிறைய யோக முறைகளைக் கற்று சிலர் குழப்பிக் கொள்வார்கள். எந்த ஒரு யோகத்தையும் முழுமையாக செய்யாத அவர்களைப் பார்த்து எங்கள் நந்தித் தேவன் எள்ளிச் சிரிப்பான்.

செய்வது எந்த தவமாக இருந்தால் என்ன? அந்த தவம் பிறந்த இடம் எதுவாக இருந்தால் என்ன? செய்யும் தவத்தை மன ஒருமைப்பாடுடன் செய்பவர்கள் விரைவாக முத்தியான ஊரை அடைவார்கள்.

(நகும் – எள்ளிச் சிரிப்பான்,    ஒத்து – ஒருமைப்பட்டு,   ஒல்லை – விரைவாக)

Mad men classify meditation methods into many,
Our Lord Nandi laughs at them in pity.
What though the method? what though its birth place?
Those who practice in harmony will attain God quickly.

பிதற்றுவதை விட மாட்டேன்

பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே. – (திருமந்திரம் – 38)

விளக்கம்:
பெரியவன், அரியவனான சிவபெருமானைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.

பிறப்பில்லாத உருவம் கொண்ட அவனைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.

புகழ் பெற்ற எங்கள் நந்தியைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.

என்னைப் பெருமை செய்தவனான அவனைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.

(பேர் – புகழ்).

I won't stop speaking of Him, the Great, the Rare
I won't stop speaking of Him, the form of unborn
I won't stop speaking of Him, the renowned Nandi
I won't stop speaking of Him, he gave reputation for me.

தாமரை முகத்தான்

சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. – (திருமந்திரம் – 27)

விளக்கம்:
‘என்னை நேராகப் பார்’ என்று ஈர்க்கும்படியான தாமரை போன்ற முகம் கொண்டவன் ஈசன். முடிவில்லாத ஈசன் அருள் நமக்கே என்று நாள்தோறும் நந்தியை வணங்குகிறோம். அப்படி வணங்கப்படும் அவன் நம் மனத்தினில் புகுந்து நின்றானே.

(சந்தி – நேருக்கு நேராக பார்த்தல்,  அந்தம் – முடிவு,   புந்தி – மனம், அறிவு).

The Lotus like face of Siva, urge us to face it
For getting His endless Grace
We pray Nandi Daily, into our heart
the Lord Siva comes and stands there.

பிரதோஷ நாயகன்!

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.  – (திருமந்திரம் –68)

விளக்கம்:
நந்தி பெருமானின் அருளாலே ஆசிரியன் எனப் பேர் பெற்றோம். நந்தியின் அருளாலே மூலனாகிய சிவபெருமானை நாடினோம். இந்த உலகினில் நந்தியின் அருளினால் செய்ய முடியாத காரியம் என்ன உள்ளது? அந்த பெருமானின் வழிகாட்டுதலின்படி நான் இருக்கின்றேன்.

(நாதன் – குரு, ஆசிரியர்)

By Nandi's Grace, we got named as Guru,
By Nandi's Grace, We seek the Eternal Lord,
By Nandi's Grace, everything is possible in this world,
I remain by the guidance of Nandi.