நம்முடைய நிழல் கூட நமக்கு உதவாது

தன்னது சாயை தனக்குத வாதுகண்டு
என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே. – (திருமந்திரம் – 170)

விளக்கம்:
நம்முடைய நிழல் கூட நமக்கு உதவாது என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அப்படி இருக்கும் போது, நம்மிடம் இருக்கும் செல்வமெல்லாம் நமக்குச் சொந்தமானது என்று நினைப்பது அறியாமை ஆகும். உடலும் உயிரும் ஒன்றாகப்  பிறந்தாலும் உயிர் போகும் போது உடல் அழிந்து விடும். அதனால் உயிர் உள்ள போதே அகக்கண்ணில் உள்ள பேரொளியை கண்டு உணர்வோம்.

சாயை – நிழல்,   மாடு – செல்வம்,   ஏழை – அறியாமையில் இருப்பவர்கள்


செல்வ மழையில் நனையலாம்!

இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே. – (திருமந்திரம் – 169)

விளக்கம்:
வானத்தில் அவ்வளவு பிரகாசமாக உலவும் நிலவு கூட மாதத்தில் ஒரு நாள் தன் ஒளி இழந்து இருளாகிறது. அப்படி இருக்கும் போது துக்கத்தையே தரும் செல்வத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இன்றிருக்கும் செல்வம் நாளை இல்லாமல் போகலாம்.  நாம் நம் மனமயக்கம் நீங்கி வானவர் தலைவனான சிவபெருமானை நாடி நிற்போம். அவன் திருவருளாகிய செல்வமழையில் நனையலாம்.

சிவபெருமானின் அருளே பெருஞ்செல்வமாகும்.


அட்டாங்க யோகத்தின் குரு நந்திதேவருக்கு வணக்கம்

உரைத்தன வற்கரி ஒன்று முடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டும் முன்பேசிய நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.  – (திருமந்திரம் – 549)

விளக்கம்:
கடிவாளம் இடப்பட்ட நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரெண்டு அங்குல நீளத்திற்கு இயங்கும் வழியை, நம் குருநாதரான நந்திதேவர் நமக்கு உரைத்தார். அட்டாங்க யோகத்தின் அடிப்படையான இயமங்களையும், நியமங்களையும் நாம் கடைபிடிக்கும்படி அருள் செய்தார்.

சிறு வயதில் நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரெண்டு அங்குல நீள அளவில் இயங்கும். வயது ஏற ஏற சுவாசிப்பின் நீளம் குறைகிறது. யோகப்பயிற்சியின் நோக்கம் சுவாசிப்பின் நீளத்தை மறுபடியும் பன்னிரெண்டு அங்குல நீளத்திற்கு கொண்டு வருவதாகும். இயமம் என்பது தீமையான செயல்களை நீக்குதல். நியமம் என்பது நல்ல பழக்க வழக்கங்களை அனுசரித்து, அதைத் தொடர்ந்து கடைபிடிப்பது.


செல்வம் வேண்டாம், செல்வன் போதும்.

அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவ மன்றே.  – (திருமந்திரம் – 168)

விளக்கம்:
மக்களுக்குத் தேவையானதை அருளக்கூடிய அரசபதவி, யானைப்படை, தேர்ப்படை மற்றும் அளவில்லாத பொன் பொருள், இவை யாவுமே நிலையானவை கிடையாது. இவை எல்லாவற்றையும் ஒருநாள் பகைவன் வந்து அபகரித்துக் கொள்ளும் அபாயம் உண்டு. நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே, நிலையான செல்வத்தை உடைய ஈசன் அடியைச் சேர்ந்து இருந்தால் தெளிவான அறிவைப் பெறலாம். நம் துன்பமெல்லாம் மறைந்து போகும். ஈசன் திருவடியைச் சேர்ந்திருப்பதே சிறந்த தவமாகும்.

பொருட்செல்வத்தை விட அருட்செல்வமே நிலையானது. அச்செல்வத்தை நமக்கு அருளும் செல்வன் ஈசன் ஆவான்.

தெருள் – தெளிவான அறிவு


இறந்த பிறகு உடலைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை!

காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே.  – (திருமந்திரம் – 167)

விளக்கம்:
உயிர் இல்லாத நிலையில், நம்முடைய இந்த உடல் வெறும் தோல்பை ஆகும். இந்த உடலினுள்  நின்று உயிர் கொடுத்து உடல் இயக்கத்திற்கு காரணமாய் இருப்பவன் கூத்தன் என்று அழைக்கப்படும் ஈசன். அவன் இந்த உடலை விட்டு நீங்கிய பிறகு, அதாவது நாம் செத்துப் போன பிறகு, இந்த உடலை காக்கை வந்து கொத்தி தின்றால் என்ன? பார்ப்பவர் இகழ்ந்தால் என்ன? தகனம் செய்து பால் ஊற்றினால் என்ன? பலரும் பழித்துப் பேசினால் என்ன? உயிர் இல்லாத இந்த வெறும் கூட்டைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

தொழில் அறச் செய்து – இந்த உடல் நம்முடைய முயற்சி எதுவும் இல்லாமல் தானாக இயங்குகிறது.


சுற்றி எத்தனை படை இருந்தாலும், போகும் உயிரை தடுக்க முடியாது

குடையும் குதிரையும் கொற்றவா ளுங்கொண்டு
இடையும்அக் காலம் இருந்தது நடுவே
புடையு மனிதனார் போக்கும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே.  – (திருமந்திரம் –166)

விளக்கம்:
நாடாளும் மன்னர்கள் வெண்கொற்றக் குடையும், வெற்றி தரும் வாளும் கொண்டு குதிரையில் வலம் வரும் காலஅளவு மிகச் சொற்பமானதாகும். அவரைச் சுற்றி அவருடைய படைகளும், மக்களும் சூழ்ந்து இருந்தாலும், அந்த மன்னரின் பிராணன் இட வலம்  மாறி உயிர் பிரிந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது.


ஏழு நரகங்கள்!

மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவந் தொழாமல்
இடர்ப்படந்து ஏழா நரகிற் கிடப்பர்
குடர்ப்பட வெந்தமர் கூப்பிடு மாறே.  – (திருமந்திரம் –165)

விளக்கம்:
மடல் விரிந்த கொன்றை மலரை அணிந்த சிவபெருமான், தன்னை வெளிப்படுத்தாமல் நம்மிடம் ஒளிந்து விளையாடுகிறான். நம்முடைய உடலும், உயிரும் ஒன்றாக இருக்கும் காலத்தில், அதாவது நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே அந்த சிவபெருமானை வணங்கி இருப்போம். பிற உலக விஷயங்களிலேயே தனது வாழ்நாளைச் செலவிடுபவர்கள், யமதூதர் வரும் நேரம், குடல் நடுங்குவார்கள், ஏழு வகையான நரகங்களையும் அனுபவித்து வருந்துவார்கள்.

அள்ளல், ரௌரவம், கும்பீபாகம், கூடசாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி ஆகியவை ஏழு வகையான நரகங்கள் ஆகும்.


விளக்கு இங்கே! ஒளி எங்கே?

இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.  – (திருமந்திரம் –164)

விளக்கம்:
விளக்கில் எண்ணெய் விடும் பகுதி இடிஞ்சில் எனப்படும். இந்த உடல் என்னும் விளக்கை இங்கேயே விட்டு விட்டு உயிர் என்னும் தீபஒளியை அந்த இயமன் எடுத்துச் செல்கிறான். விளக்கின் எண்ணெய் தீர்ந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளாதவர்கள் அழுது புலம்புகிறார்கள். காலையில் விடியும் ஒரு நாள் பொழுதில் மாலை இருள் வந்தே தீரும். நம் வாழ்நாளும் அப்படித்தான் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. நாம் நம் உடலை நிலையானதாக நினைத்து அதையே பற்றிக் கொள்கிறோம். ஒருநாள் உயிர் உடலை விட்டுப் பிரியும் நிலை வரும்போது பதறுகிறோம்.


உலக வாசனை தெரியும் வயது!

முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண்டி ஆண்டினில்
கெட்டது எழுபதில் கேடறி யீரே.  – (திருமந்திரம் –163)

விளக்கம்:
நாம் நமது தாயின் வயிற்றில் கருவாக இருந்து, முந்நூறு நாட்களுக்குப் பிறகு பிறக்கிறோம். இதை நம் வாழ்வின் தொடக்கம் என்று நினைக்கிறீர்களா? அது அறியாமை ஆகும். பன்னிரெண்டு வயதில் நமக்கு உலக விஷயங்களின் வாசனை தோன்றுகிறது. பிறகு எழுபது வயதில் நாம் சாகும் வரை அழிவை நோக்கித் தான் சென்று கொண்டிருக்கிறோம். இதைத் தெரிந்து கொள்ளுங்கள்.


தேடிய தீயினில் தீய வைத்தார்கள்

கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலையமும் அற்றது அறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்க்களே.  – (திருமந்திரம் –162)

விளக்கம்:
விதி முடிந்து இறந்து போனவனுடைய உடல், பொலிவை இழந்த கூடம் போலக் கிடந்தது.  அவன் இருதயத்தின் சீரான லயம் நின்று துடிப்பும் அடங்கியது. அங்கே சிவனடியார்கள் திருமுறைகளைப் பாடுகிறார்கள். உறவினர்கள் ஒப்பாரி வைத்து அழுகிறார்கள். பிறகு அந்த உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று தகனத்துக்குத் தேவையான பொருட்களைத் தேடிக் கொண்டு வந்து தீய வைத்தார்கள்.