உலகின் மிகப்பெரிய மலர்

அதோமுகம் மாமல ராயது கேளும்
அதோமுகத் தால் ஒரு நூறாய் விரிந்து
அதோமுகம் ஆகிய அந்தமில் சத்தி
அதோமுகம் ஆகி அமர்ந்திருந் தானே.   – (திருமந்திரம் – 525)

விளக்கம்:
மிகப்பெரிய மலராக மலர்ந்து நிற்கும் சிவபெருமானின் அதோமுகத்தின் அழகைப் பற்றிக் கேளுங்கள். அம்முகம் நூறு இதழ்களைக் கொண்ட பெரிய மலராக விரிந்து நிற்கிறது. பார்க்க மலரைப் போல இருந்தாலும் அதோமுகத்தின் சக்தி முடிவில்லாதது. அளவில்லாத அந்த சக்திக்குக் காரணம் அம்முகம் நம் சிவபெருமானுடையது ஆகும்.


அதோமுகன்!

அதோமுகம் கீழண்ட மான புராணன்
அதோமுகம் தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத் து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும்
அதோமுகன் ஊழித் தலைவனு மாமே.   – (திருமந்திரம் – 524)

விளக்கம்:
மிகப் பழமையானவன் நம் சிவபெருமான். அவன் தனது அதோமுகத்தின் கீழே இந்த உலகத்தைப் படைத்திருக்கிறான். அவனே இந்த உலகமாக இருக்கிறான். இவ்வுலகின் அனைத்து உயிர்களிலும் கலந்திருந்து அவற்றை இயக்குகிறான். அதோமுகமாக இயங்கும் அதே சிவபெருமான்தான் தாமரை மலரை மாலையாக அணிந்துள்ள நான்முகன் பிரமனாகவும் விளங்குகிறான். பிரளயத்தால் இந்த உலகம் அழியும் காலத்தில் ஊழித்தலைவனாக நிற்பதும் நம் சிவபெருமானே!


உந்து சக்தியாக நிற்கும் அதோமுகம்!

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்தீக் கலந்துள் சிவனென நிற்கும்
உந்திக் கலந்தங்கு உலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுகம் ஆமே.   – (திருமந்திரம் – 523)

விளக்கம்:
மூலாதாரத்தில் எழுந்து சுழுமுனை வழியாக ஓங்கி வளரும் நந்தியம்பெருமான் சகஸ்ரதளத்தில் செந்தீயாகச் சுடர் விடும் போது சிவனென நிற்பார். அங்கே சிவபெருமானின் அதோமுகம் வெளிப்படும். அந்தி நேரத்தின் நிறம் கொண்ட சிவபெருமானின் அதோமுகம் இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களிலும் உந்து சக்தியாகக் கலந்திருந்து வலம் வருகிறது.


தத்துவங்கள் புரிந்து உண்மையாக வழிபட வேண்டும்!

செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச்செய்வன்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.   – (திருமந்திரம் – 522)

விளக்கம்:
உண்மையான தத்துவங்களைப் புரிந்து கொள்ளாமல், பொய்யான புகழுரைகளால் போற்றி வணங்குபவர்களைப் பற்றி அவனுக்குத் தெரியாதா? செழுமையான கடலையும் அவற்றால் சூழப்பட்டுள்ள இந்த நிலத்தையும் படைத்தவன் நம் சிவபெருமான் அல்லவா? உண்மையான தத்துவங்களைப் புரிந்து உணர்வோடு வழிபடுவர்களை விண்ணில் உள்ள தேவர்களும் வணங்குவார்கள். கறுத்த கழுத்தினைக் கொண்ட சிவபெருமான் இவ்வாறு நமக்கு அருள்வான்.


கண்டம் கறுத்த கருத்து அறிவாரில்லை!

அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே.   – (திருமந்திரம் – 521)

விளக்கம்:
சிவபெருமானின் ஆறாவது முகம் அதோமுகமாகும். அதோமுகம் கீழ் நோக்கியதாக இருக்கும். இந்த உலகத்தையும் சுற்றி உள்ள எட்டுத்திசைகளையும் சிவபெருமானின் அதோமுகமே தாங்கி நிற்கிறது. சிவபெருமானின் கழுத்து கறுத்திருப்பதில் உள்ள கருத்தை யாரும் இங்கே தெரிந்து கொள்ளவில்லை. விஷம் குடித்தார், அதனால் கழுத்து கறுத்தது என மேம்போக்காக புரிந்து கொள்பவர் உணர்வில்லாதவர். கறுத்த அக்கழுத்தில் வெண்மையான மாலையாக இறந்தவர்களின் கபாலங்கள் விளங்குகின்றன.


சூரபதுமனை அழிக்க ஆறுமுகனை அனுப்பிய சிவபெருமான்

எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவள மேனி அறுமுகன் போயவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.   – (திருமந்திரம் – 520)

விளக்கம்:
ஒருமுறை சூரபதுமன் எனும் அசுரன், தனது வலிமையைத் தவறாக உபயோகித்து, தேவர்களை எல்லாம் துன்புறுத்தினான். எப்போதும் மணம் வீசும் இயல்புடைய தேவர்கள், துன்பம் தாளாது சிவபெருமானிடம் சென்று  முறையிட்டார்கள். தற்பரனாக விளங்கும் சிவபெருமான் அழகிய பவழம் போன்ற மேனியைக் கொண்ட ஆறுமுகனை அழைத்து, தேவர்களுக்குப் பகையாக விளங்கும் சூரபதுமனை அழிக்க உத்தரவிட்டான்.