போடா டேய்!

சின்ன வயதில் பயணம் செய்வதென்றால், அது மிகவும் சந்தோஷமான அனுபவம். பேருந்தினுள் நூற்றென்பது பேரில் ஒருவனாக நின்று கொண்டே பயணம் செய்தது கூட அப்போதெல்லாம் அலுப்பு ஏற்படுத்தியதில்லை. நெரிசலுக்குள் உட்கார ஒரு சின்ன இடம் கிடைத்தால் கூட போதும், ஒரு பாக்கெட் நாவல் படித்து விட்டு தூங்கிவிடுவேன். கூட்டமில்லாத பேருந்தில், அதுவும் ஜன்னலோரம் இடம் கிடைத்து விட்டால் போதும் – சொர்க்கம் தான்.

சின்ன வயது சகிப்புத் தன்மை இப்போது குறைந்து வருவது எனக்கு மட்டும்தானா என்பது புரியவில்லை. இப்போதெல்லாம் வேறு வழியில்லை என்றால் தான் பேருந்து பயணம். நம் தோளை தனது தலையனையாய் உபயோகிக்கும் பக்கத்து இருக்கை அன்பர், தனது மோதிர தாளத்தில் இசை முயற்சி செய்யும் பின் இருக்கை நண்பர், சீன மொபைலில் நம்மை பாட்டு கேட்க வைக்கும் இசை ரசிகர், அதை கேட்டோ என்னவோ காறித் துப்பிக் கொண்டே வரும் பண்பர், இதனூடே பயணம் செய்வது கொஞ்சம் சிரமமாய்த் தான் உள்ளது.

ஒரு முறை தேனியிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். பேருந்து பயணம் தான், வேறு வழியில்லை. அன்று அலைந்து திரிந்திருந்த களைப்பினால் தூக்கமாய் வந்தது. ஆனால் தூங்க விடாமல் முதுகில் யாரோ மெத்தென்று மிதிப்பது போல் இருந்தது. பின்னால் திரும்பிப் பார்த்தேன். அந்த சிறுவனுக்கு மூன்று வயதுக்குள்தான் இருக்கும். கருப்பாய், களையாய், துறுதுறுப்பாய் இருந்தவன், தனது பாட்டியுடன் உட்கார்ந்திருந்து முன்னால் இருந்த இருக்கையை உதைத்துக் கொண்டிருந்தான். “சே! ஒரு சின்ன பையனோட சேட்டையை ரசிக்காட்டியும் பரவாயில்லை, கோபம் வந்தால் நாமெல்லாம் ஒரு மனுசனா?” இப்படி என்னை நானே திருத்திக் கொள்ள முயன்று முன்புறமாக சாய்ந்து கொண்டேன்.

உசிலம்பட்டியில் பேருந்து சிறிது நேரம் தேநீர்க்காக நின்றது. நிறைய பேர் கீழே இறங்கி விட்டார்கள். சிறுவனின் பாட்டியும் பேரனுக்கு தின்பண்டம் வாங்க கீழே இறங்கினார். ஆசுவாசமாக பின்னால் சாய்ந்த எனக்கு முதுகில் உதை பலமாக விழுந்தது. சிறுவனின் உதையில் வேகமும் அழுத்தமும் அதிகமாயிருந்தது. நான் அவனை நோக்கி திரும்பி “தம்பி! காலை கொஞ்சம் கீழே வச்சுக்கோயேன்”னு சொன்னேன். அவன் பதிலாய் ஒரே வார்த்தைதான் சொன்னான் “போடா!”. சுற்றிலும் பார்த்தேன், யாரும் கவனித்திருக்கவில்லை. எதிரே ஒரு இருக்கை காலியாயிருந்தது, அதிலே போய் உட்கார்ந்து கொண்டேன்.

பேருந்து கிளம்பிச் செல்லும் போது நான் முதலில் உட்கார்ந்திருந்த இருக்கையை கவனித்தேன். ஒரு கிராமத்து முதியவர் உட்கார்ந்திருந்தார். அப்போதும் அந்த சிறுவன் உதைத்துக் கொண்டுதான் இருந்தான். அந்த முதியவர் அதை உனர்ந்ததாகக் கூட தெரியவில்லை. காலை ஆட்டிக்கொண்டே அந்த சிறுவன் தனது பாட்டியிடம் கேட்டான் “இவங்கெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறாங்க?”. பாட்டிக்கு எதுவும் புரியலை.

2 thoughts on “போடா டேய்!

Comments are closed.