நாடு தாங்காதுடா டே!

“ஒரு ரெண்டு வருஷம் அப்பிடி இப்பிடி கஷ்டமாத்தான் இருக்கும். அப்புறம் அஞ்சு வருஷம்” கொஞ்சம் நிறுத்தி விட்டு சொன்னார் “நீ ரொம்ப கஷ்டப்படுவ” நூத்தியோரு ரூவா வாங்கிய அந்த கைரேகைக்காரர். கருமாரி அம்மன் கோயில் பக்கத்தில் இருப்பவர்.

“ஒம் மவன் ஜாதகம் தான் ஓன் கஷ்டத்துக்கெல்லாம் காரணம். அவன் பெறந்து ரெண்டு வருஷம் வரை அவன் மொகத்த நீ பாக்கக் கூடாதுன்றது தான் பரிகாரம். இப்ப ஒண்ணும் கெட்டு போகல, ஒரு சாந்தி ஹோமம் பண்ணனும். ஐயாயிரம் ஆகும்” இவர் ஒரு ஜாதக நிபுணர். இந்தா பிடி நூத்தியொண்ணு. ஆள விடு.

“நாப்பது வயசில நீ அரசியலுக்கு வருவ. அதுல பெரிய ஆளாயிடுவ.” நாடு தாங்காதுப்பா!

“அய்யர் பொண்ணு மாதிரி ஒரு பொண்ணு வருவா வீட்டுக்காரியா.” என்னத்த சொல்ல?

“பல தொழில் செஞ்சி பல வழில வருமானம் வரும்.” ஒரு தொழிலே ஒழுங்கா செய்ய முடியல.

இது வரை பார்த்ததிலே அந்த திருவண்ணாமலை கைரேகைக்காரர் வித்தியாசமாய் சொன்னார் “இந்த கைல பாக்குறதுக்கு என்ன இருக்கு! எல்லாமே நல்லா இருக்கு. நீ காசு குடுக்காட்டியும் பரவால்ல, போயிட்டு வா.” அஞ்சு ரூபா கொடுத்திட்டு நகர்ந்தேன்.

தெரிஞ்ச ஒரு அக்காவின் பொண்ணுக்கு ஒரு மாப்பிள்ளை சிபாரிசு செய்தேன் “ஏன்யா! ஜாதகம் பாத்த ஜோசியரு மாப்பிள வடகிழக்கு தெசைலருந்து வருவாருன்னு சொன்னாங்க. நீங்க சொல்றது தெற்கு பக்கமால்ல இருக்கு? வேணாம்யா.”

காய்ச்சலா இருக்குதுன்னு பக்கத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு போய் பூசாரிகிட்ட விபூதி கேட்டேன். “கோவிலுக்கு ஒரு மணி வாங்கி மாட்டு. எல்லாம் சரியாப்போவும்.” முனீஸ்வரா!

நண்பர் ஒருவர் சொல்வார் “எந்த நியூமராலஜிஸ்ட்டாவது ஒருத்தன் கிட்ட உன் பேர் சரியாயிருக்கு. ஒண்ணும் மாத்த வேண்டியதில்லைன்னு சொல்லியிருக்காரா? எனக்கு தெரிஞ்சி நிறைய பிரபலங்கள் நியூமராலஜி பார்த்து பேர் மாத்தின பிறகு அவங்க புகழ் குறைய ஆரம்பிச்சிருக்கு. பேரெல்லாம் சொல்ல மாட்டேன். நீயே யோசிச்சிக்கோ.” நமக்கு அந்த அளவு பொது அறிவெல்லாம் கெடையாதுங்க.

எங்க கல்யாணம் ராசி, பொருத்தம் எதுவும் பாக்காம நடந்தது. இப்போ கம்யூட்டர்ல ரெண்டு பேரு ஜாதக விவரம் கொடுத்து பொருத்தம் பார்த்தா, பொருந்தலையாம். Not advisableங்குது. வருஷம் பதினாலு ஆகிப்போச்சு கல்யாணம் பண்ணி.

கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு குறி சொல்ற பெண் வீட்டு வாசல்ல வந்து குடிக்க தண்ணி கேட்டுச்சு. வீட்டுக்காரி சொம்புல தண்ணி கொண்டு வந்து குடுத்தா. அந்த பெண் தண்ணி குடிச்சிட்டு “நீ நல்லா இருப்பம்மா. புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் பிரியாம ஒத்துமையா இருப்பிங்கம்மா”னுச்சு. வீட்டுக்காரி அவளை ஒரு விரட்டு விரட்டினாள் “ஏம்மா குடிக்க தண்ணி குடுத்தா சாபமா குடுக்குற? சொம்ப கீழ வச்சிட்டு எடத்த காலி பண்ணு.”

அந்த பெண்ணுக்கு வேர்த்து விட்டது. பயந்துகிட்டே யோசிச்சவளுக்கு குபுக்குனு சிரிப்பு வந்து, சிரிக்கலாமா கூடாதான்னு புரியாம திருதிருன்னு முழிச்சுகிட்டு சிரிப்பு அடக்க முடியாம ஓடியே போயிருச்சு.


காற்றில் கரைந்தவன்


இந்த விமானம் போகும் இடம் மறந்து விட்டது எனக்கு. அதனால் என்ன கெட்டு விட்டது? நான் தான் பாதி வழியில் இறங்கிவிடுவேனே! இன்று அவளை தேடிப்பிடித்தே ஆக வேண்டும். இந்த உலகின் பரப்பு மிகப் பெரியதாய் இருப்பதால் இப்படி விமானத்தில் அமர்ந்து தேடுவது சுலபம் என்பது என் திட்டம். அந்த இரவிலும் ஜன்னல் வழி வெளியே பார்த்துக் கொண்டே வந்தேன். இந்த பயணத்தில் அவளை கண்டுபிடித்து விட வேண்டும் என்பதில் தீர்மானமாயிருந்தேன்.

“ஸார்” விமானப் பணிப்பெண்ணின் குரல் கேட்டு திரும்பினேன்.

“உடல் நலம் இல்லாதவர் போல் தோன்றுகிறீர்கள். ஏதேனும் உதவி தேவையா” என்று கேட்டாள்.

“உன் சிரிப்பு மிகவும் செயற்கையாய் உள்ளது. என்னவளிடம் உள்ளது போல் இயல்பானதாய் இல்லை” சொன்னேன். சிரித்தபடி போய் விட்டாள்.

தனது குழந்தையை அதட்டிக் கொண்டிருந்த பின் இருக்கை பெண்ணிடம் கெஞ்சினேன் “என்னவள் யாரையும் கடிந்து பேசி நான் பார்த்ததேயில்லை”. குழந்தைக்கு ஒரு அடி விழுந்தது.

“ஸார். அவங்க ரொம்ப அழகா?” பக்கத்திலிருந்த இளைஞன் கேட்டான்.

ஜன்னல் வழியே வெளியே காண்பித்தேன் “அந்த இருட்டை எடுத்து நெய்தது போல் அவள் கூந்தல்”.

“கண்கள்?”

“தாமரை”

“எப்படி?”

“நான் சொல்கிற தாமரை பூ இல்லை. தாவுகின்ற மான்”

“ஓஹோ. நிறம்?”

“காலைச் சூரியன் சிவப்பதே அவள் மேல் பட்டு எதிரொளிப்பதால்”

“அப்புறம்..” இழுத்தான்.

“கச்சின்கண் அடங்காத கன தனம்” என்றேன்.

அதோடு அவன் நிறுத்திக்கொண்டான். நாங்கள் பேசிக் கொண்டது அந்த புதிதாய் திருமணமாயிருந்தவர்களுக்கு கேட்டிருக்க வேண்டும். திரும்பிப் பார்த்து சினேகமாச் சிரித்தார்கள்.

“உங்கள் நெருக்கம் போதாது. பார்ப்பவர் மூச்சு திணற வேண்டும்” என்றேன்.

அலை பாய்ந்த மனம் கொஞ்சம் ஒருமைப்பட ஆரம்பித்தது. அவள் இருக்குமிடத்தை நெருங்குகிறேன் போலும். அவள் அருகாமையை உணர ஆரம்பித்தேன். வெளியே இருளினுள் அவள் உருவம் கலங்கலாய் தெரிந்தது. இன்னும் அப்படியேதான் இருக்கிறாள். குழந்தை முகம், ஆனால் தனிமையில் வேறு முகம் காட்டுவாள். கூர்மையான சிறு கத்தியினால் என் உடலெங்கும் கோடு போடுவாள். கைதேர்ந்தவள். எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது தெரிந்தவள். இன்னும் கொஞ்சம் அழுத்தினால் கீறல் விழும் என்னும் அளவில் இருக்கும் அது.

அவளை நெருங்கி விட்டேன். அவள் மடி கிடைத்தால் போதும், நெருப்பினுள் கூடவாழ்வேன். இப்போது அவள் தெளிவாய் தெரிந்தாள். ஏதோ சொன்னாள். என் காதுக்குள் ‘வந்து விடு’ என்று கிசு கிசுப்பாய் கேட்டது. இருக்கையை விட்டு எழுந்தேன். விமானத்தின் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். சக பயணிகளும், பணிப்பெண்களும் பதறினார்கள். தடுக்க முயன்றார்கள். அவர்களை நோக்கி சிரித்தேன்.

“என் காதலி வெளியே காத்திருக்கிறாள். எனை தடுக்க முன்றால் இந்த விமானத்தை தகர்க்க எனக்குத் தெரியும்”.

அடுத்த கணம் வெட்ட வெளியினில் பறந்து கொண்டிருந்தேன். யாருக்கு கிடைக்கும் இந்த அனுபவம்! அவளின் நெருக்கத்தில் தான் இப்படி காற்றில் பறப்பது போல் இருக்கும். அப்படி என்றால் அவள் இப்போது பக்கத்தில் இருக்கிறாள் என்று தானே அர்த்தம்? “கத்தி கொண்டு வந்திருக்கிறாயா” கேட்டேன். பாதத்தில் கத்தியை உணர்ந்தேன், மேல் நோக்கி கோடு வரைய அரம்பித்தாள். தொடைகளில் கத்தி லாவகமாய் விளையாடிற்று. இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டியது. நெஞ்சினில் உணர்ந்த போது போதை தலைக்கேறிற்று.

இந்த முறை கழுத்திலும் லாவகமாய் விளையாட்டு காட்டினாள். இது வரை அவள் கத்தி படாத இடம். அவள் பார்வையில் உலகின் மொத்த அன்பும் தெரிந்தது. கண்ணால் ஜாடை செய்தேன். கத்தியை அழுத்தி விட்டாள்.