இந்த விமானம் போகும் இடம் மறந்து விட்டது எனக்கு. அதனால் என்ன கெட்டு விட்டது? நான் தான் பாதி வழியில் இறங்கிவிடுவேனே! இன்று அவளை தேடிப்பிடித்தே ஆக வேண்டும். இந்த உலகின் பரப்பு மிகப் பெரியதாய் இருப்பதால் இப்படி விமானத்தில் அமர்ந்து தேடுவது சுலபம் என்பது என் திட்டம். அந்த இரவிலும் ஜன்னல் வழி வெளியே பார்த்துக் கொண்டே வந்தேன். இந்த பயணத்தில் அவளை கண்டுபிடித்து விட வேண்டும் என்பதில் தீர்மானமாயிருந்தேன்.
“ஸார்” விமானப் பணிப்பெண்ணின் குரல் கேட்டு திரும்பினேன்.
“உடல் நலம் இல்லாதவர் போல் தோன்றுகிறீர்கள். ஏதேனும் உதவி தேவையா” என்று கேட்டாள்.
“உன் சிரிப்பு மிகவும் செயற்கையாய் உள்ளது. என்னவளிடம் உள்ளது போல் இயல்பானதாய் இல்லை” சொன்னேன். சிரித்தபடி போய் விட்டாள்.
தனது குழந்தையை அதட்டிக் கொண்டிருந்த பின் இருக்கை பெண்ணிடம் கெஞ்சினேன் “என்னவள் யாரையும் கடிந்து பேசி நான் பார்த்ததேயில்லை”. குழந்தைக்கு ஒரு அடி விழுந்தது.
“ஸார். அவங்க ரொம்ப அழகா?” பக்கத்திலிருந்த இளைஞன் கேட்டான்.
ஜன்னல் வழியே வெளியே காண்பித்தேன் “அந்த இருட்டை எடுத்து நெய்தது போல் அவள் கூந்தல்”.
“கண்கள்?”
“தாமரை”
“எப்படி?”
“நான் சொல்கிற தாமரை பூ இல்லை. தாவுகின்ற மான்”
“ஓஹோ. நிறம்?”
“காலைச் சூரியன் சிவப்பதே அவள் மேல் பட்டு எதிரொளிப்பதால்”
“அப்புறம்..” இழுத்தான்.
“கச்சின்கண் அடங்காத கன தனம்” என்றேன்.
அதோடு அவன் நிறுத்திக்கொண்டான். நாங்கள் பேசிக் கொண்டது அந்த புதிதாய் திருமணமாயிருந்தவர்களுக்கு கேட்டிருக்க வேண்டும். திரும்பிப் பார்த்து சினேகமாச் சிரித்தார்கள்.
“உங்கள் நெருக்கம் போதாது. பார்ப்பவர் மூச்சு திணற வேண்டும்” என்றேன்.
அலை பாய்ந்த மனம் கொஞ்சம் ஒருமைப்பட ஆரம்பித்தது. அவள் இருக்குமிடத்தை நெருங்குகிறேன் போலும். அவள் அருகாமையை உணர ஆரம்பித்தேன். வெளியே இருளினுள் அவள் உருவம் கலங்கலாய் தெரிந்தது. இன்னும் அப்படியேதான் இருக்கிறாள். குழந்தை முகம், ஆனால் தனிமையில் வேறு முகம் காட்டுவாள். கூர்மையான சிறு கத்தியினால் என் உடலெங்கும் கோடு போடுவாள். கைதேர்ந்தவள். எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது தெரிந்தவள். இன்னும் கொஞ்சம் அழுத்தினால் கீறல் விழும் என்னும் அளவில் இருக்கும் அது.
அவளை நெருங்கி விட்டேன். அவள் மடி கிடைத்தால் போதும், நெருப்பினுள் கூடவாழ்வேன். இப்போது அவள் தெளிவாய் தெரிந்தாள். ஏதோ சொன்னாள். என் காதுக்குள் ‘வந்து விடு’ என்று கிசு கிசுப்பாய் கேட்டது. இருக்கையை விட்டு எழுந்தேன். விமானத்தின் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். சக பயணிகளும், பணிப்பெண்களும் பதறினார்கள். தடுக்க முயன்றார்கள். அவர்களை நோக்கி சிரித்தேன்.
“என் காதலி வெளியே காத்திருக்கிறாள். எனை தடுக்க முன்றால் இந்த விமானத்தை தகர்க்க எனக்குத் தெரியும்”.
அடுத்த கணம் வெட்ட வெளியினில் பறந்து கொண்டிருந்தேன். யாருக்கு கிடைக்கும் இந்த அனுபவம்! அவளின் நெருக்கத்தில் தான் இப்படி காற்றில் பறப்பது போல் இருக்கும். அப்படி என்றால் அவள் இப்போது பக்கத்தில் இருக்கிறாள் என்று தானே அர்த்தம்? “கத்தி கொண்டு வந்திருக்கிறாயா” கேட்டேன். பாதத்தில் கத்தியை உணர்ந்தேன், மேல் நோக்கி கோடு வரைய அரம்பித்தாள். தொடைகளில் கத்தி லாவகமாய் விளையாடிற்று. இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டியது. நெஞ்சினில் உணர்ந்த போது போதை தலைக்கேறிற்று.
இந்த முறை கழுத்திலும் லாவகமாய் விளையாட்டு காட்டினாள். இது வரை அவள் கத்தி படாத இடம். அவள் பார்வையில் உலகின் மொத்த அன்பும் தெரிந்தது. கண்ணால் ஜாடை செய்தேன். கத்தியை அழுத்தி விட்டாள்.