தாய் வீடென என்னுள் புகுந்தான்

கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக
வாயில்கொண் டு ஈசனும் ஆளவந் தானே.  – (திருமந்திரம் – 1728)

விளக்கம்:
கருவில் நாம் உருவான அன்றே ஐம்பூதங்களும் நம்முள்ளே குடி வந்தன. ஐந்து பூதங்களும் தம் இடத்தில் வாசல் வைத்து வழி ஏற்படுத்தி அருளினர். நம் தலைவனான சிவபெருமான், தன் தாய் வீடென உரிமையுடன் உள்ளே புகுந்தான் அவ்வாசல்கள் வழியாக. அவன் வந்துள்ள நோக்கம் நம்மை தன் அருளினால் ஆள்வதற்காகவே.

ஐம்பூதங்களின் இயக்கமே நாம் உயிர் வாழக் காரணமாய் உள்ளது. அந்த பூதங்களின் இடத்தில் ஈசன் வந்து ஆட்சி செய்யும் போது நம் வாழ்க்கை பயணம் சிறப்பாகவே இருக்கும். நாம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

(தாயில் – தாய் + இல் – தாய் வீடு)

The five elements entered our body, once it formed in mother’s womb.
They made gates for their places and ruling us in their ways.
Lord Siva entered our body, as if His mother’s house,
through the gates, became the master of us.