உடல் வெந்த பிறகு உயிரின் நிலை என்ன?

ஐந்து தலைப்பறி ஆறு சடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே.  – (திருமந்திரம் –159)

விளக்கம்:
நம் உடலில் மிகவும் முக்கியமானவை ஐம்பொறிகள். அவை கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவை. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியவை ஆறு ஆதார மையங்களாக உள்ளன. எலும்பின் இணைப்புகள் முப்பது, நுண்ணுடம்பு எட்டு, வாயுக்கள் பத்து, தசை நார்கள் ஒன்பது, எலும்புகளின் வரிசை பதினைந்து. இவை அனைத்தும் ஒரு நாள் சுடுகாட்டில் வெந்து சாம்பலாகும். அதற்குப் பிறகு இந்த உயிரின் நிலை என்னவாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.


சரித்திரச் சிறுகதை எழுதிப் பார்த்தல்

“ராணியின் மகனுக்கு உருட்டி விளையாட ஏதாவது  வேணுமாம். உன் தலையைத்தான் தருவதாக ராணி சொல்லியிருக்கிறாள்.”

“இந்த மாமனின் தலை ராஜகுமாரனுக்கு விளையாடக் கிடைப்பது எனக்கு சந்தோஷம் தான்.”

“அப்படி என்ன பகை உங்களுக்குள் தலை வாங்கும் அளவுக்கு?”

“எங்கள் குடும்பமே அப்படித்தான்.”

“என்னிடம் நீ உண்மையைச் சொல்லலாம். மன்னனுக்கு விஷம் வைத்து கொன்றது நீ தானா? நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்.”

“உங்களிடம் எனக்கு நம்பிக்கை உண்டு. ஒரு உண்மை சொல்கிறேன். இந்த விஷம் வைக்கும் யோசனை ஏன் எனக்கு இவ்வளவு நாள் தோன்றவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

“ஓஹோ! சிறையில் இதுதான் சதா சிந்தனை போலும்! என்னுடைய கவலை எல்லாம் உன் மேல் குற்றம் சுமத்தி விட்டு, உண்மையான கொலைகாரர்களை தேடாமல் விட்டு விடுகிறார்களே என்பது தான்.”

“கவலைப்படுவதில் உங்கள் பொழுதைப் போக்க வேண்டாம்! என் தங்கையைப் பற்றி எனக்குத் தெரியும். இந்நேரம் அந்த வேலையை அவளுடைய நம்பிக்கைக்குரிய படை ஒன்று செய்து கொண்டிருக்கும். கொலைகாரர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் வம்சம் இந்த பூமியில் வசித்த தடம் இல்லாமல் போகும். ஆனால் அதெல்லாம் அவைக்கு வராது. சட்டப்படி நான் கொலைகாரன், தண்டனை எனக்குத் தான்.”

“உன்னை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.”

“யாருடைய பரிதாபத்துக்கும் தகுதி இல்லாதவன் நான். ஒரு நாள் என் தங்கை எந்த கவலையும் இல்லாமல் மிகவும் சந்தோஷமாக  இருப்பாள். அவள் தன்னிலை மறந்திருக்கும் அந்நேரம் கொடுந்துன்பம் ஒன்று  வந்து தாக்கும் அவளை. ஏன் தான் இவனை சிறையில் வைத்தோமோ என்று கதறுவாள் அப்போது.”

“சரி. இவ்வளவு பகை ஏன்?”

“இது பகை இல்லை. அடுத்து நாட்டை ஆளப்போவது ராணி. ராணியை ஆளப்போவது மன்னனின் கை எனச் சொல்லப்படும் படைத்தலைவன். அதற்கு நான் இடைஞ்சலாக இருப்பேன், அதனால் தான் இவ்வளவும்.”

“என்னால் உனக்கு எதுவும் உதவ முடியுமா? இந்த மந்திரியை ராணிக்கு பிடிக்காவிட்டாலும், சில சமயம் என் ஆலோசனையை ஏற்பார்.”

“இந்த விஷயத்தில் அப்படி இல்லை. நடக்க வேண்டியவை தானாக நடக்கும். கவலை வேண்டாம், போய் வாருங்கள்.”

மறுநாள் மன்னனின் கை என்று அழைக்கப்பட்ட படைத்தலைவன் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தான். மந்திரி ராணியிடம் “இன்னும் சேதங்களைத் தவிர்க்க சிறையைத் திறப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று சொல்லி உத்தரவுக்காகக் காத்திருந்தார்.


குடம் உடைந்தாலும் பயன்படும் ஆனால் இந்த உடல்?

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.  – (திருமந்திரம் –158)

விளக்கம்:
வளம் மிகுந்த முற்றம் போன்றது இந்த உலகம். பிரமன் என்னும் ஒரு குயவன் தன் குளத்தின் மண்ணைக் கொண்டு வந்து இந்த முற்றம் முழுவதும் உயிர்களைப் படைக்கிறான். மனிதன் செய்யும் குடம் உடைந்தால் அதன் ஓடு வேறு எதற்காவது பயன்படும் என்று பாதுகாத்து வைப்போம். ஆனால் பிரமன் செய்யும் இந்த உடல் என்னும் குடம் உடைந்தால் அதை கொஞ்ச நேரம் கூட வைத்திருக்க மாட்டோம். சுடுகாட்டில் கொண்டு போய் வைத்து எரித்து விடுவோம்.


நிலையில்லாதது இந்த வாழ்க்கை

ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட்கு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே.  – (திருமந்திரம் –157)

விளக்கம்:
வாழ்க்கை சொல்லும் நீதி புரியாதவர்களே! இதைக் கேளுங்கள். ஒருவன் தன் விதி முடிந்து இறந்தவுடன், அவனுடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் எல்லாம் ஆரவாரத்துடன் அழுது புலம்புவார்கள். பிறகு அவர்கள் ஊருக்கு வெளியே உள்ளே நீர்த்துறைக்கு வந்து திரும்புவார்கள்.  இறந்தவனுடைய உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மரத்தின் வேரும் நுனியும் நீக்கப்பட்ட விறகினை அடுக்கித் தீ மூட்டுவார்கள். தகனம் முடிந்தவுடன் நீரில் மூழ்கி எழுவார்கள்.

நாம் வாழும் வாழ்க்கை நிலையில்லாதது.


மரணத்தை பார்த்தும் நாம் கற்பதில்லை

வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்
எச்சக லாநின் றிளைக்கின்ற வாறே.  – (திருமந்திரம் –156)

விளக்கம்:
முந்தைய பாடலில் சொன்னது போல, இறந்து போன ஒருவனைச் சுடுகாட்டில் கொண்டு போய் வைப்பதைப் பார்த்த பிறகும், நாம் நம் உயிரும் ஒருநாள் இப்படி அகன்று விடும் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. நாம் விரும்புகின்ற பொருளையே அரிய பொருளாக நினைத்து, அதன் பின்னாலேயே மயக்கத்தோடு திரிகிறோம். இப்படியே நிலையில்லாத பொருட்களின் பின்னால் அலைந்து திரிந்து, நம் மேன்மையை இழந்து சோர்வு அடைகின்றோம்.


யாரால் என்ன செய்ய முடியும்?

மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம் தேறிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே.  – (திருமந்திரம் –155)

விளக்கம்:
தேன் நிறைந்த பூக்களை தலையில் சூடிக்கொள்ளும் மனைவி, பாடுபட்டு சம்பாதித்த செல்வங்கள், வெகு நாட்களாக வசித்து வரும் வீடு, இவை அனைத்தையும்  விட்டு ஒரு நாள் நீங்க வேண்டியிருக்கும். நம் உயிர் பிரியும் நாள் தான் அது. உயிர் நம் உடலை விட்டு பிரிந்தவுடன், இந்த உடலை ஊருக்குப் பொதுவாக உள்ள சுடுகாட்டுக்குப் பாடையில் வைத்து எடுத்துப் போவார்கள். அங்கே உறவினர் எல்லாம் தம் உள்ளத்தில் அன்பு பெருக, உடலை மயானத்தில் வைத்து விட்டுச் செல்வார்கள்.


உடல் என்னும் கோயில்

முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிலுடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.  – (திருமந்திரம் –154)

விளக்கம்:
நம்முடைய இந்த உடல் செம்மையான கோட்டைச் சுவர் கொண்ட கோயிலாகும். இந்த கோயிலுக்குள் தொண்ணூற்றாறு தத்துவங்கள் வாழ்கின்றன. இந்தக் கோயில் சிதைவடையும் போது, அதாவது நம் உயிர் உடலை விட்டு நீங்கும் போது, அந்த தொண்ணூற்றாறு தத்துவங்களும் ஓட்டம் எடுத்து விடும்.


நாடாண்ட நம்பியும் ஒரு நாள் காட்டுப் பல்லக்கில் ஏற வேண்டும்!

நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.  – (திருமந்திரம் –153)

விளக்கம்:
நாடாளும் மன்னன் அவன், நம் ஊருக்கும் அவன் தான் தலைவனாக இருக்கிறான். அவன் தன் விதி முடிந்து இறந்த போது, அவன் ஏறும் பல்லக்கு என்பது, சுடுகாட்டுக்குக் கொண்டு போகும் பாடையாகும். அவன் இறுதி ஊர்வலத்தில் நாட்டு மக்களெல்லாம் பின்னே இறுதி அஞ்சலிக்காக தொடர்ந்து வர, முன்னால் பறை கொட்டிப் போனார்கள். எந்த நாடாண்ட நம்பிக்கும், அவன் வாழ்நாள் இறுதியில் இப்படித்தான் நடக்கும்.

நாட்டுக்குத் தலைவன் ஆனாலும் கடைசியில் ஒரு நாள் சுடுகாட்டுக்குச் செல்லும் பல்லக்கில் ஏறித்தான் ஆக வேண்டும்.


இந்த உடல் வெறும் பந்தல் தான்!

பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலந் துரிசுவர மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே.  – (திருமந்திரம் –152)

விளக்கம்:
நம் உயிர் தங்கியிருக்கும் இந்த உடல் ஒன்றும் உறுதியான கட்டடம் அல்ல, இது ஒரு தற்காலிகப் பந்தல், அவ்வளவு தான் என்கிறார் திருமூலர்.

இந்த உடல் என்னும் பந்தல் பிரிந்தது. உள்ளிருந்த உயிர் தன் கட்டு நீங்கப் பெற்றது. இந்த உடலின் ஒன்பது வாசல்களும் ஒரே நேரத்தில் அடைக்கப் பெற்றன. காலனும் அங்கே விரைந்து வந்தான். அந்த துன்பமான நேரத்தில் அன்பு கொண்டவர்கள் எல்லாம் வந்து அழுது விட்டுச் சென்றார்கள். அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?


விடைபெறும் நேரம் விடை பெறுவான்

கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.  – (திருமந்திரம் –151)

விளக்கம்:
நாடி பிடித்துப் பார்க்கும் மருத்துவரும், இனிமேல் இவரைக் காப்பாற்ற முடியாது எனக் கைவிட்டார்கள். எதையும் யோசித்துப் பார்க்கும் திறன் அழிந்தது, உயிர் அறுந்தது. நெய்விட்டு சுவையாக சோறு உண்ட உடல் என்னும் ஐம்பூதக் கூறுகளும் அழிந்தன. மை தீட்டிய கண்கள் கொண்ட தன் மனைவியும், தான் வாழ்நாளில் சம்பாதித்த செல்வங்களும் இங்கேயே இருக்க, அவன் உயிர் உடலை விட்டு விடைபெற்றது.