அட்டாங்க யோகத்தின் குரு நந்திதேவருக்கு வணக்கம்

உரைத்தன வற்கரி ஒன்று முடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டும் முன்பேசிய நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.  – (திருமந்திரம் – 549)

விளக்கம்:
கடிவாளம் இடப்பட்ட நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரெண்டு அங்குல நீளத்திற்கு இயங்கும் வழியை, நம் குருநாதரான நந்திதேவர் நமக்கு உரைத்தார். அட்டாங்க யோகத்தின் அடிப்படையான இயமங்களையும், நியமங்களையும் நாம் கடைபிடிக்கும்படி அருள் செய்தார்.

சிறு வயதில் நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரெண்டு அங்குல நீள அளவில் இயங்கும். வயது ஏற ஏற சுவாசிப்பின் நீளம் குறைகிறது. யோகப்பயிற்சியின் நோக்கம் சுவாசிப்பின் நீளத்தை மறுபடியும் பன்னிரெண்டு அங்குல நீளத்திற்கு கொண்டு வருவதாகும். இயமம் என்பது தீமையான செயல்களை நீக்குதல். நியமம் என்பது நல்ல பழக்க வழக்கங்களை அனுசரித்து, அதைத் தொடர்ந்து கடைபிடிப்பது.


செல்வம் வேண்டாம், செல்வன் போதும்.

அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவ மன்றே.  – (திருமந்திரம் – 168)

விளக்கம்:
மக்களுக்குத் தேவையானதை அருளக்கூடிய அரசபதவி, யானைப்படை, தேர்ப்படை மற்றும் அளவில்லாத பொன் பொருள், இவை யாவுமே நிலையானவை கிடையாது. இவை எல்லாவற்றையும் ஒருநாள் பகைவன் வந்து அபகரித்துக் கொள்ளும் அபாயம் உண்டு. நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே, நிலையான செல்வத்தை உடைய ஈசன் அடியைச் சேர்ந்து இருந்தால் தெளிவான அறிவைப் பெறலாம். நம் துன்பமெல்லாம் மறைந்து போகும். ஈசன் திருவடியைச் சேர்ந்திருப்பதே சிறந்த தவமாகும்.

பொருட்செல்வத்தை விட அருட்செல்வமே நிலையானது. அச்செல்வத்தை நமக்கு அருளும் செல்வன் ஈசன் ஆவான்.

தெருள் – தெளிவான அறிவு