இறைவனுக்கேற்ற சிறந்த மலர் – கொல்லாமை

பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.  – (திருமந்திரம் – 197)

விளக்கம்:
பற்றுக்களில் இருந்து நாம் விடுபட நம் குருநாதனாகிய சிவபெருமானுக்கு பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜை செய்கிறோம். ஆனால் நம் சிவனுக்கு பிடித்த மலர், பிற உயிர்களைக் கொல்லாமை என்கிற விஷயமாகும். நம்முடைய நடுங்காத திட மனமே, நாம் அவனுக்கு ஏற்றும் சிறந்த தீபமாகும். நம் குருநாதனை வைத்து வழிபடச் சிறந்த இடம் நம்முடைய இருதயமே!


சிறிது உணவு தானம் செய்வோம்

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்ப்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுண்மின் தலைப்பட்ட போதே.  – (திருமந்திரம் – 196)

விளக்கம்:
நாம் வஞ்சனை பேசி தீயவழியில் செல்ல வேண்டாம். பேராசை கொண்டு அடுத்தவர் பொருளைக் கவர வேண்டாம். எல்லா வகையிலும் நல்ல பண்புகளைக் கொண்டவராக இருப்போம். சாப்பிடும்போது சிறிது உணவாவது பிறருக்கு கொடுத்து விட்டு சாப்பிடுவோம்.


முக்திக்கு மானிடப் பிறவியை விட சிறந்த வழி ஏது?

ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும் அதென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.  – (திருமந்திரம் – 195)

விளக்கம்:
இந்த உலக வாழ்வில் நாம் நலம் பெற புண்ணிய காரியங்களைச் செய்வோம். நம்முடைய இறப்பிற்குப் பிறகு முக்தி நிலையை அடைய, புனிதனான அந்த சிவபெருமானை நாடி வணங்குவோம். முக்தி அடைய நாம் ஒரு வழிமுறையைத் தேடினால், அதற்கு இந்த மானிடப் பிறவியை விட ஒரு சிறந்த வழி கிடையாது. மானிடராய் பிறப்பது எவ்வளவு அருமையான விஷயம் தெரியுமா? இதை உணர்ந்து நாம் அந்த சிவனை நாடி இருந்து, நம் வாழ்நாள் முடிந்தவுடன் முக்தி நிலையை அடைவோம்.


தேனைத் தேடும் வண்டு

இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளி
கண்புற நின்ற கருத்துள்நில் லானே.  – (திருமந்திரம் – 194)

விளக்கம்:
இன்பத்தை தேடும் வண்டு, தேன் மிகுந்த மலர்களைத் தேடிப்போய் வாசம் மிகுந்த தேனை உண்டு களிக்கும். அது போல உண்மையான இன்பத்தைத் தேடும் நாம் சூரியன், சந்திரன், தீ ஆகியவற்றில் காணக்கூடிய சிவனை நாடி வழிபட்டால், நாம் தேடும் இன்பம் கிடைக்கும். தன்னை நினைக்காத மனத்தில் அந்த சிவன் நிற்க மாட்டான்.


உடலுக்குள்ளே ஒரு சமையல் நடக்குது

துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.  – (திருமந்திரம் – 193)

விளக்கம்:
நாம் உணவு சமைக்க தேவையான பொருட்கள் – அரிசி, பானை, அகப்பை மற்றும் நெருப்பு. அது போலவே நம் உடல் இயக்கத்திலும் ஒரு சமையலே நடக்கிறது. நம் உயிரே அரிசி, உடல் பானை, நாம் விடும் மூச்சுக்காற்றே அகப்பை ஆகும். உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற் காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று என்னும் ஐந்தும் நெருப்புகள் உள்ளன. இவ்வாறு தொடர்ந்து நடக்கும் சமையலே நாம் உயிர் வாழ்வதாகும். நம்முடைய வாழ்நாள் வீணாக கழிந்து கொண்டிருக்கின்றன. சுடுகாட்டில் நம் உடல் எரிவதற்கு முன்பாக, நம் உயிர் என்னும் அரிசியை சமைக்கும் பொறுப்பை அந்த ஈசனிடம் ஒப்படைப்போம். அதாவது நாம் உயிருள்ள போதே அந்த ஈசனை சரணடைந்திருந்தால், நமக்கு மறுபிறவி என்பது கிடையாது.

துடுப்பு – அகப்பை


எல்லாமே கொஞ்ச நேரம்தான்

மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறும் கருமயிர் வெண்மயி ராவது
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.  – (திருமந்திரம் – 192)

விளக்கம்:
சிக்கல் நீக்கி பார்த்து பார்த்து நெய்யப்பட்ட பட்டாடை ஒரு நாள் கிழிந்து போகும். இந்த அழியும் தன்மையை நாம் அறிந்து கொள்வதில்லை. அதே போல் நாம் பெருமை பட்டுக் கொள்ளும் நம்முடைய கருமயிர் வெண்மயிராக மாறும் கால அளவும், நம்முடைய பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள கால அளவும் மிகவும் குறைவானதே. இதை நாம் உணர்வோம்.

நம் வாழ் நாள் மிகவும் குறைவானதே. அதனால் காலத்தை வீணாக்காமல் நாம் அந்த இறைவனின் திருவடியை நாடி இருப்போம்.

(பட்டிகை – பட்டாடை,  பீறும் – கிழிந்து விடும்,  ஈறு – இறப்பு)


எங்கும் எதிலும் பரவி இருக்கிறான்

சென்றுணர் வாந்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால் அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.  –  (திருமந்திரம் – 191)

விளக்கம்:
சூரியன் தனது ஒளியை பத்து திசைகளிலும் பரவவிட்டு, இந்த உலகில் உள்ள அனைத்தையும் உணர்கிறான். ஆனால் நம் தலைவனான சிவபெருமான், இந்த உலகில் சூரியன் படைக்கப்படுவதற்கு முன்பிருந்தே இந்த உலகில் உள்ள அனைத்தையும் தன்னுடைய உணர்வாலே அளக்கிறான். அவன் உணராத பொருள் இல்லை இவ்வுலகத்தில். இந்த உலகின் மனிதர்களாகிய நாம் இந்த உண்மையை உணர்வதில்லை. இந்த உடல் அழியக்கூடியது, நம்முடைய உயிர் நிலையானது இல்லை என்பதைப் புரிந்தவர்கள், அந்த ஈசனை உணர்ந்து, அந்த உணர்விலே கலந்திருப்பார்கள்.

பத்து திசைகள் – எட்டு திசைகள் + மேலே + கீழே

பொன்று – இறத்தல், நிலையாமை