திருவழுவூர்

முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரியர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே. – (திருமந்திரம் – 344)

விளக்கம்:
முனிவர்கள் சிலர் வேள்வித்தீயை எழுப்பி மந்திரங்களை முழங்கிய போது, அந்த வேள்வியுள் யானை உருவில், கயாசுரன் என்னும் அசுரன் தோன்றினான். சிவபெருமான் அந்த யானை வடிவிலான அசுரனை அழித்து, அந்த யானைத் தோலை உரித்து தன் மேல் போர்த்திக் கொண்டான். சிவபெருமானின் இந்த வீரச்செயலைக் கண்டு உமையம்மையும் மற்ற தேவர்களும் நடுங்கினார்கள். இந்த வீரச்செயல் நடந்த இடம் திருவழுவூர்.

தியானத்தில், நம் உள்ளே முன்று வகையான அக்னியை எழுப்பி நாதம் வெளிப்படச் செய்தால், யானை போன்ற கரிய இருளான நம் மன இருளை சிவபெருமான் கிழித்து ஒளி தோன்றச்செய்வான்.


முப்புரம் அழித்த இடம் – திருவதிகை

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே. – (திருமந்திரம் – 343)

விளக்கம்:
செம்மை நிறம் கொண்ட தனது சடையில் கங்கை நீரை அணிந்துள்ள  சிவபெருமான் மிகப் பழமையான முதல் கடவுள் ஆவான். அவன் முப்புரமான மூன்று ஊர்களை அழித்தான் என்று சொல்பவர்கள் மூடர்கள். முப்புரம் என்பது மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவை ஆகும்.  சிவபெருமான் அழித்தது அந்த மும்மலங்களை என்பதை யார் அறிவார்?

அப்பணி – அப்பு + அணி,   புராதனன் – பழமையானவன்


திருவிற்குடி

எங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபாற்
பொங்கும் சலந்தரன் போர்ச்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித் தாழிசெய் தானே. – (திருமந்திரம் – 342)

விளக்கம்:
எங்கும் கலந்திருக்கும் சிவபெருமான் நம் உள்ளத்திலும் எழுந்து அருள்கிறான். ஆறு அங்கங்களைக் கொண்ட அருமறைகளைத் தந்த நம் பெருமான், சினம் கொண்ட சலந்தரன் என்னும் அசுரனை, தன்னுடைய கால் விரலால் நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறி அதை அந்த அசுரனையே எடுக்க வைத்தான். அந்தச் சக்கரத்தை எடுத்த அசுரன் அழிந்து போனான். இந்த வீரச்செயல் நடந்த இடம் திருவிற்குடி.

யோகப் பயிற்சியின் போது, நீரை முகமாகக் கொண்ட சலந்தரன் என்னும் அசுரன், குண்டலினியை கீழ் நோக்கு முகமாக இறங்கச் செய்வான். அப்போது நாம் சிவபெருமானைத் தியானம் செய்தால், பெருமான் அந்த அசுரனை போர் செய்து அழித்து, குண்டலினியை மேல்நோக்கிச் செல்லுமாறு செய்வான்.