தலையில் ஊறும் அமிர்தம்

ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிரம் முந்நூற் றொடைஞ்சுள
ஆறது வாயிர மாகும் அருவழி
ஆறது வாக வளர்ப்ப திரண்டே. – (திருமந்திரம் – 695)

விளக்கம்:
யோகத்தினால் நம் தலையில் அமிர்தம் ஊறி ஆறு போலப் பெருகும். ஆறு போலப் பெருகும அவ்வமுதம் ஆயிரத்து முந்நூற்று ஐந்து நரம்புகள் வழியாகப் பாய்கின்றன. ஆயிரம் இதழ் கொண்ட தாமரையான சகசிரதளம் மலர்ந்து நிற்க இந்த அமிர்த ஊறலே சிறந்த வழியாகும். சிவசக்திகள் நமது உயிருடன் ஒன்றி நிற்கவும் இந்த அமிர்த ஊற்று உறுதுணையாக இருக்கிறது.


காற்று உயிரில் கலக்கும் வகை!

காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது அக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்நூற் றொருபத்து மூன்றையுங்
காலது வேண்டிக் கொண்டஇவ் வாறே. – (திருமந்திரம் – 694)

விளக்கம்:
நமது உடலில் ஐந்நூற்றுப் பதிமூன்று நாடிகளிலும் நாடிகளின் நாயகியாகிய பராசக்தி கலந்து இருக்கிறாள். பிராணயாமத்தின் போது நமது மூச்சுக்காற்று பராசக்தியுடன் கலப்பதைக் காணலாம். மூச்சுக்காற்று எப்படி நம் உயிரில் கலந்து நின்று நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம். அட்டமாசித்தி அடைந்தவர்களுக்கு மட்டுமே இவற்றை எல்லாம் உணர்வது சாத்தியம்.


பேரொளியை மூச்சுக்காற்றிலே உணரலாம்

பேரொளி யாகிய பெரியஅவ் வெட்டையும்
பாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே. – (திருமந்திரம் – 693)

விளக்கம்:
உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் அந்தப் பேரொளியை, அந்த சிவ ஒளியை, அட்டமாசித்தி பெற்ற யோகியர் தமது பிராணாயாமத்தின் மூச்சுக்காற்றிலே உணர்வார்கள். சக்தி வாய்ந்த அவ்வொளியை நடுக்கம் இல்லாமல் காணும் பக்குவம் யோகிகளுக்கு மட்டுமே உண்டு.