காலச்சக்கரம் – 747

விதித்த இருபத்தெட் டொடுமூன்று அறையாகத்
தொகுத்துறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்துஅறி பத்தெட்டும்பார் ஆதிகள்நால்
உதித்துஅறி மூன்றுஇரண்டு ஒன்றின் முறையே – 747

விளக்கம்:
இந்தப் பாடலின் பொருள் மறைபொருளாக இருப்பதால், இதன் விளக்கத்தை பின்பு ஒருநாள் பார்ப்போம்.


யோகம் பயில வேண்டிய நாட்கணக்கு

ஆறும் இருபதுக்கு ஐயைஞ்சு மூன்றுக்குந்
தேறும் இரண்டு இருபத்தொடு ஆறு இவை
கூறும் மதிஒன் றினுக்கு இருபத்தேழு
வேறு பதிஅங்கண் நாள்விதித் தானே – 746

விளக்கம்:
ஒரு ஆண்டுக்கு மொத்தம் பன்னிரெண்டு மாதங்கள். அவற்றில் ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இருபது நாட்கள் யோகம் பயில வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இருபத்து ஐந்து நாட்கள் யோகம் பயில வேண்டும். இரண்டு மாதங்களுக்கு மாதம் இருபத்து ஆறு நாட்களும், மீதம் இருக்கும் ஒரு மாதத்தில் இருபத்து ஏழு நாட்களும் யோகம் பயில வேண்டும். இவ்வாறு நம் சிவபெருமான் யோகம் பயிலும் நாட்களை விதித்து வைத்திருக்கிறான்.


ஆலம் கடந்த சிவபெருமானை நினைப்போம்

நாலும் கடந்தது நால்வரும் நால்அஞ்சு
பாலம் கடந்தது பத்துப்பதின் அஞ்சு
கோலம் கடந்த குணத்துஆண்டு மூவிரண்டு
ஆலம் கடந்தது ஒன்றுஆர் ஆரறிவாரே – 745

விளக்கம்:
இதுவும் காலச்சக்கரம் பற்றிய பாடல். காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது, நாம் அதை உணர்ந்து யோக வழியில் செல்லாமல், இன்னும் நிறைய காலம் மீதம் இருப்பதாக நினைத்து காலம் கடத்துகிறோம்.

நான்கு வயதைக் கடந்தோம், அதைச் சிறு வயது என்று விட்டு விடலாம். பாலன் எனச் சொல்லப்படும் பத்துப் பதினைந்து வயதைக் கடந்தோம், அப்போதும் நாம் யோகத்தைத் தொடங்கவில்லை. அழகிய கோலம் கொண்ட இளமைக் காலத்தையும் கடந்து விட்டோம், இன்னும் நாம் ஆலம் கடந்த அந்த சிவபெருமானை உணர்ந்து அறியவில்லை.


நாள் தவறாமல் யோகம் செய்வோம்

மனைபுகு வீரும் அகத்திடை நாடி
என இருபத்தஞ்சும் ஈராறு அதனால்
தனை அறிந்து ஏறட்டு தற்குறி ஆறு
வினைஅறி ஆறும் விளங்கிய நாலே – 744

விளக்கம்:
நம் மனம் புற உலகில் அலைவதை நிறுத்தி, அகத்தை நாடி, மனத்தை உள்ளே செலுத்தி யோகப்பயிற்சி செய்வோம். வருடத்தின் பன்னிரெண்டு மாதங்களும், மாதத்தின் 30 நாட்களும், அதாவது நாள் தவறாமல் யோகப்பயிற்சி செய்து வந்தால், தன்னை அறியலாம். தன்னை அறிவதால் ஆறு ஆதாரங்களிலும் யோகநிலையில் பொருந்தி இருந்து சிவம், சக்தி, நாதம், விந்து ஆகியவற்றைப் பற்றி விளங்கிக் கொள்ளலாம்.

இருபத்தஞ்சு – இரு + பத்தஞ்சு (முப்பது நாட்கள் – 1 மாதம்),  ஈராறு – ஈர் + ஆறு (பன்னிரெண்டு மாதங்கள்), ஏற அட்டுதல் – கூடச் சேர்த்தல், தற்குறி ஆறு – ஆறு ஆதாரங்கள்