ஒலியும் ஒளியும் சேர்ந்தது போல!

அவன்இவ னாகும் பரிசறி வாரில்லை
அவன்இவ னாகும் பரிசது கேள்நீ
அவன்இவன் ஓசை ஒளியினுள் ஒன்றிடும்
அவன்இவன் வட்டம தாகிநின் றானே – 767

விளக்கம்:
சிவனருள் பெற்று தாமே சிவம் ஆகும் தன்மையை, யாரும் இங்கே அறிவதில்லை. அத்தன்மை பெறுவதால் கிடைக்கும் பரிசு என்ன என்பது தெரிந்தால், நாமும் சிவத்தன்மை பெறும் முயற்சியில் ஈடுபடுவோம். நாம் காணும் காட்சிகளில் ஒளியும், ஒலியும் பிரிக்க முடியாதபடி சேர்ந்திருப்பதைப் போல, சிவத்தன்மை பெற்றவர்கள் சிவனுடன் ஒன்றியிருப்பார்கள். சீவனும், சிவனும் முதலும் முடிவும் இல்லாத வட்டமாகிய பிரணவம் ஆகி என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.


அவன் இவன் ஆவான்

அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்
கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன்இவன் ஆகுமே – 766

விளக்கம்:
அண்ணலாகிய சிவபெருமான் நம் சீவனுடன் கலந்திருக்கும் தன்மையை நாம் அறிந்திருக்கவில்லை. சிவபெருமானை தன்னுள்ளே கண்டு கொண்டவர்களிடம் அந்த சிவன் நீங்காது இருந்து அருள்புரிவான். அப்படி சிவனருள் பெற்றவர் தாமே சிவம் ஆவார்.


யோகத்தில் பயிற்சி முக்கியம்

கூறும் பொருளி தகார வுகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
கூறும் மகாரங் குழல்வழி யோடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே – 765

விளக்கம்:
என்னதான் நாம் யோகம் செய்யும் வழிமுறை பற்றிக் கேட்டு அறிந்தாலும், யோக அனுபவமே நமக்கு அந்த உபதேசங்களின் பொருளை உணர்த்தும். யோகப்பயிற்சியில் அகாரமாகிய சிவத்தையும், உகாரமாகிய சக்தியையும் உணர்ந்து, மனம் ஒன்றி நிற்போம். தொடர்ந்து பயிற்சியில் நின்றிட, சுழுமுனையில் மகாரத்தை உணரலாம். நம் அண்ணலாகிய சிவபெருமான், ஆறு ஆதாரங்களிலும் வந்து நிறைவாய் அமர்வான்.

அகாரம், உகாரம், மகாரம் ஆகியவற்றின் சேர்க்கையே ‘ஓம்’ என்னும் மந்திரமாகும்.


யோக வழியை நாடியவர்களுக்குத் துன்பம் இல்லை

நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்கட்குக் கூறலு மாமே – 764

விளக்கம்:
யோகவழியை நாட வல்லவர்களுக்கு, காலச்சக்கரம் பற்றிய கவலை இல்லை. காலம் அவர்களைப் பாதிக்காது, அதனால் அவர்களுக்குத் துன்பம் எதுவும் நேராது. அவர்கள் மக்களை வழி நடத்தும் தலைவராக விளங்குவார்கள். இவையெல்லாம் யோகத்தில் நிற்பவர்களுக்குத் தெரிந்த உண்மை ஆகும். நாமும் இதுபற்றி நம்முடைய நண்பர்களுக்கு எடுத்துச் சொல்வோம்.


நந்தியம்பெருமானாக நம்மை வழி நடத்துவான்

கண்ணன் பிறப்பிலி காண்நந்தி யாய்உள்ளே
எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடும்
திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாய்நிற்கும்
நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே – 763

விளக்கம்:
சிவபெருமான் நெற்றிக்கண்ணை உடையவன், பிறப்பில்லாதவன். மனத்தை உள்முகமாகத் திருப்பிப் பார்த்தால் உள்ளே நந்தியம்பெருமானாக, நம்மை வழி நடத்தும் குருவாகப் பார்க்கலாம். சிவபெருமான் தனிப் பெரும் ஜோதியானவன், அதன் வெம்மை எல்லாத் திசைகளிலும், எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறது. அவனை நாடி தொடர்ந்த தியானத்தினால் நெருங்க வல்லவர்களுக்கு, அந்த சிவபெருமான் உறுதியான துணையாய் நிற்பான்.


என்றும் நிலைத்து நிற்கும் மெய்ப்பொருள்

கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
கழிகின்ற அப்பொருள் காணலுமாகும்
கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்
கழியாத அப்பொருள் காணலு மாமே – 762

விளக்கம்:
உயர்ந்த ஒரு இடத்தில் இருந்து கீழே பார்க்கும் போது, காணும் காட்சி எல்லாம் சிறிதாக, சாதாரணமாகத் தோன்றும். அதுபோல யோகநிலையில், உயர்ந்த ஒரு இடத்திற்குப் போகும் போது, கால வெள்ளத்தில் எந்தப் பொருளும், எந்த விஷயமும் தங்குவதில்லை என்பதை உணரலாம். எல்லாமே கணப்பொழுதில் கடந்து விடுகிறது, ஆனால் அவற்றில் நமது மனம் சிக்கித் தவிக்கிறது. மனத்தை உள்முகமாகத் திருப்பி, கருத்து ஊன்றி தொடர்ந்து தியானித்து வந்தால், நமது மனத்தைக் கால வெள்ளத்தில் சிக்காமல் காக்கலாம். என்றும் நிலைத்து நிற்கும் மெய்ப்பொருளான சிவபெருமானைக் காணலாம்.


இறை அனுபவத்தை பயிற்சியால் மட்டுமே பெற முடியும்

காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
நாணகி லார்நயம் பேசி விடுவர்கள்
காணகி லாதார் கழிந்த பொருளெலாம்
காணகி லாமற் கழிகின்ற வாறே – 761

விளக்கம்:
முந்தைய பாடல்களில் சொல்லப்பட்டவாறு, தொடர்ந்து யோகப்பயிற்சி செய்பவர்கள் சிவசக்தியரைக் காண்பார்கள். யோகத்தில் நாட்டம் இல்லாதவர்கள் காலச்சக்கரத்தின் சுழற்சியில் சிக்கி அழிவார்கள். யோகத்தை அனுபவத்தில் உணராத வெட்கம் கெட்டவர்கள், சாத்திரத்தைப் பற்றி நயமாகப் பேசிக் காலத்தை வீணாக்குகிறார்கள். இறை அனுபவத்தை யோகப்பயிற்சியினால் மட்டுமே உணர முடியும். நாம் அந்த அனுபவத்தைப் பெறாமல் காலத்தை வீணாகக் கழிக்கிறோம்.


சிவயோகியரால் இந்த உலகம் நன்மை பெறுகிறது

உயருறு வார்உல கத்தொடுங் கூடிப்
பயனுறு வார்பலர் தாமறி யாமற்
செயலுறு வார்சிலர் சிந்தையி லாமல்
கயலுறு கண்ணியைக் காணகி லாரே – 760

விளக்கம்:
மனம் ஒன்றி, அறிவு கூர்ந்து, பல ஆண்டுகள் தொடர்ந்து யோகப்பயிற்சி செய்பவர்கள் உயர்வு அடைவார்கள். இது போன்ற யோகிகள் இந்த உலகத்தில் வாழ்வதால், இந்த உலகம் நன்மை பெறுகிறது. சிவயோகிகளால் நன்மை பெறுகிறோம் என்பதை உலகத்தார் ஆகிய நாம் உணர்வதில்லை. சிவயோகியரால் கிடைக்கும் நன்மை பற்றிய சிந்தை இல்லாமல், நாம் தான் எல்லாவற்றையும் சாதிக்கிறோம் என நினைப்பவர்கள், கயற்கண்ணியாகிய பராசக்தியைக் காண மாட்டார்கள்.


மனம் இல்லாத நிலை

உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று
அகங்கோடி கண்டுள் அயலறக் காண்பர்கள்
சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்கு
உகங்கோடி கண்டங்குஉயருறு வாரே – 759

விளக்கம்:
தொடர்ந்த யோகப்பயிற்சியில் பல ஆண்டு காலம் வாழ்பவர்கள், தளர்வு ஏதும் இல்லாமல் மனத்தில் எண்ணம் இல்லாத நிலையை அடைவார்கள். எண்ணங்கள் அகன்று, மனம் இல்லாத நிலையில் சிவம் நமக்கு அந்நியமாகத் தெரியாது. சிவனுடன் கலந்து தாமே சிவமாக உணர்ந்து, காலச்சக்கரத்தைக் கடந்து பல யுகங்கள் உயர்வுடன் வாழ்வார்கள்.


கோடி யுகம் வாழலாம்

சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துஉடல் ஆயிரங் கட்டுஉறக் காண்பர்கள்
சேர்த்துஉடல் ஆயிரஞ் சேர இருந்தவர்
மூத்துடன் கோடி யுகமது வாமே – 758

விளக்கம்:
தொடர்ந்து தலை உச்சியில் கூத்தனாகிய சிவபெருமானை உணர்ந்தவர்கள் நூறு ஆண்டு காலம் குறைவின்றி வாழ்வார்கள். நூறு ஆண்டுகள் தொடர்ந்து யோகப்பயிற்சி செய்பவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது எளிதான விஷயம் ஆகும். ஆயிரம் ஆண்டுகள் இந்த உடலில் வாழ்ந்தவர், காலத்தை வென்று கோடி யுகம் வாழ்வார்.