சோம்பலை விட்டு கேசரியோகம் செய்வோம்

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சோர்வும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்க்கட்கு
இறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே – 801

விளக்கம்:
கேசரியோக நிலையில் இடப்பக்க நாடி, வலப்பக்க நாடி ஆகிய இரண்டையும் சுழுமுனையில் நிறுத்த வல்லவர்களுக்கு சோர்வு என்பதே கிடையாது. நாம் நமது சோம்பலை விட்டு விட்டு, கேசரியோகம் பயிற்சி செய்வோம். அப்படித் தொடர்ந்து கேசரியோகம் பயின்றால் மரணபயம் இல்லாமல் வாழலாம்.

இடக்கை – இடது பக்க நாடி, வலக்கை – வலது பக்க நாடி, துதிக்கை – நடுநாடியாகிய சுழுமுனை, உறக்கம் – சோம்பல்


சித்தம் சுத்தம் பெற கேசரி யோகம் செய்வோம்

வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பிட்டு
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே – 800

விளக்கம்:
நம் சித்தத்தை சுத்தம் செய்யும் பொருட்டு நாம் செய்யும் கேசரி யோகத்தை, வண்ணான் அழுக்குத்துணிகளை பலகையின் மேல் அடித்துத் துவப்பதை உவமையாகச் சொல்கிறார் திருமூலர். யோகத்தில் நாம் கவனம் செலுத்தும் நெற்றிப்பகுதியை, வண்ணான் உபயோகிக்கும் சதுரப் பலகையாக உவமை செய்கிறார்.

அழுக்குத்துணிகளை வண்ணான் பலகையில் அடித்துத் துவைப்பதைப் போல, நம் கவனத்தை நெற்றியிலே நிறுத்த வேண்டும். கேசரி யோகப்பயிற்சியின் போது, நம் தலை உச்சியில் அமிர்தம் ஊறும். அவ்வமிர்தத்தை நெற்றிப்பகுதியில் குமிழி விழாமல் தேக்கி வைக்க வேண்டும். இவ்வாறான நிலையில் நம் கவனம் அண்ணாந்தவாறே இருந்தால் சித்தம் அழுக்கு நீங்கி சுத்தம் பெறும்.

மோழை – குமிழி, கண்ணாறு – கண்ணின் கவனத்தை நெற்றியில் நிறுத்தி ஊறும் அமுதத்தை கரை கட்டி நிறுத்துதல், விண்ணாறு – உச்சந்தலையில் ஊறும் அமிர்தம்


கேசரி யோகம்

கட்டக் கழன்று கீழ்நான்று விழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்ட மிருக்க நமனில்லை தானே – 799

விளக்கம்:
இப்பாடல் கேசரி யோகத்தின் முதல் பாடலாகும். கேசரி என்றால் சிங்கம் என்று பொருள். சிங்காதன நிலையில் இருந்து செய்யும் யோக முறைகளைப் பற்றி இந்த அத்தியாயம் பேசுகிறது.

முழந்தாளிட்ட நிலையில் அமர்ந்து, உடலைத் தளர்ந்து விடாமல் நேராக நிறுத்தி வைக்க வேண்டும். பின்னங்கால்களால் குதத்தின் வாயிலை அடைத்து நிமிர்ந்து அமர்ந்தால் மூலாதரம் என்னும் அடுப்பை அணை கட்டலாம். இவ்வாறு உடலை நிலைநிறுத்தி யோகம் செய்பவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள், அவர்களுக்கு மரணம் துன்பம் தருவதாக இருக்காது.

அட்டம் – முழங்கால், அடுப்பு – மூலாதாரம்