வில்லி பாரதத்தில் இருந்து ஒரு பாடல்

பச்சென்றதிருநிறமுஞ்சேயிதழும் வெண்ணகையும் பார்வையென்னும்
நச்சம்புமமுதூற நவிற்றுகின்ற மடமொழியு நாணும்பூணும்
கச்சின்கணடங்காதகனதனமும் நுண்ணிடையுங்கண்டு சோர்ந்து
பிச்சன்போலாயினனப்பெண்கொடிமெய்ந் நலமுழுதும் பெறுவானின்றான்.

பாண்டியன் மகள் சித்திராங்கதையைக் கண்டு அர்ச்சுனன் இவ்வாறு ஏங்குகிறான்.

பசுமையான அழகிய நிறத்தையும், செந்நிறமான அதரத்ததையும், வெண்ணிறமான பற்களையும், கண்ணின்பார்வை யென்கிற விஷந்தீற்றிய அம்பையும், அமிருதம்போன்ற மிக்க இனிமையாய் பேசுகின்ற அழகிய பேச்சுக்களையும், நாணமென்னுங் குணத்தையும், தரிக்கிற கச்சுக்கு அடங்காத பருத்த தனங்களையும், நுண்ணியஇடையையும் பார்த்து மனந்தளர்ந்து பித்துக்கொண்டவன் போலாயினான்.


கடலில் வாழும் மீன் தாகத்தில் தவிப்பதில்லை!

கடலில் வாழும் மீன் தாகத்தில் தவிப்பதில்லை – ஆனால் மனிதன்? மனிதன் இறையுள் வாழ்கிறான், ஆனால் அதைப் பற்றிய உணர்வு இல்லாமல். மனிதன் இறையினுள் பிறக்கிறான், இறையை சுவாசிக்கிறான், ஒரு நாள் இறையினுள் கலந்து விடுவான்.

கடலில் வாழும் மீன் தாகத்தில் தவிப்பதில்லை – ஆனால் மனிதன்? இறை தான் நம்மை சூழ்ந்துள்ள கடல், அது நமக்கு உள்ளேயும் வெளியேயும் பரவியுள்ளது. கடவுள் என்பது ஒரு நபர் அல்ல, நம்மை சுற்றி நிரம்பி வழியும் தெய்வீக இருப்பு.

இறை வழிபட வேண்டிய விஷயம் அல்ல. அது வாழ்ந்து உணர வேண்டும். அதற்காக எங்கும் போக வேண்டியதில்லை, நாம் இறையின் உள்ளேயே வாழ்கிறோம்.

இறையினை உணர நமக்கு மதம் எதுவும் தேவையில்லை, இந்த நொடி நம் மேல் இறை பொழிகிறது. ஆனால் நம்மை நாமே பூட்டிக் கொண்டிள்ளோம். நம் கதவு யுக யுகமாக தட்டப்படுகிறது, நாம் அதை கேட்க விரும்பவில்லை.

பழைய விவிலிய கதை ஒன்று உண்டு. ஆடம் தனக்கிடப்பட்ட கட்டளையை மீறிய போது கடவுள் அவனை தேடி வந்தார். அப்போது ஆடம் ஒரு புதரின் பின்னால் ஒளிந்து கொண்டான். அவனுக்கு கடவுளை நேராக பார்க்கும் தைரியம் இல்லை. கடவுள் அந்த ஏதேன் தோட்டத்தில் “ஆடம்! நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்கிறார். ஆடம் அதற்கு பதில் சொல்லவில்லை. இது கதை இல்லை, நம்முடைய நிலை இது தான். நாம் கடவுளிடமிருந்து ஒளிந்து கொண்டிருக்கிறோம்.

From Osho’s discourse on ‘Talks on Kabir’


இந்திய வரலாற்றிலிருந்து சில குறிப்புகள் – பகுதி இரண்டு

– முதலில் பெர்சியர்கள் சிந்து நதியோரம் வசிப்பவர்களை ஹிந்து என்று குறிப்பிட்டாலும், ஹிந்து என்ற சொல் அராபியர்கள் மற்றும் துருக்கியர்கள் வருகைக்கு பிறகு பரவலான உபயோகத்திற்கு வந்தது. முதலில் அவர்கள் இந்தியர்கள் அனைவரையும் ஹிந்துக்கள் என்றே நினைத்தனர். பின்னர் இந்திய மக்களின் வாழ்வு முறையை புரிந்து கொண்ட பிறகு தான் அவர்களால் ஹிந்துக்களை மற்ற மதத்தினவர்களிடம் (புத்தம் மற்றும் ஜைனம்) இருந்து வேறுபடுத்தி அறிய முடிந்தது.

– வரலாற்றின் பிற்காலங்களில் தான் ஹிந்துக்கள் தங்களை ஹிந்து என்று சொல்லிக் கொள்ள ஆரம்பித்தார்கள். முன்னர் அவர்கள் தங்கள் ஜாதி அல்லது வகுப்பு பெயர்களை வைத்து அடையாளப்படுத்தி கொண்டார்கள். ஹிந்துக்களிடையே ஜாதியினால் பெரிய அளவில் பிரிவினைகள் எப்போதுமே இருந்துள்ளது. சமய வழிபாட்டு முறை மற்றும் மத உரைகள் அவர்களிடையே ஒரு உள்ளார்ந்த ஒற்றுமை இருந்து வர காரணமாய் இருந்து வந்துள்ளது.

– ஐரோப்பியர்களுக்கு வெகு காலம் முன்பே இந்தியர்கள் தாங்கள் கற்றவைகளை எழுத்து வடிவில் பதிவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பழங்கால இந்தியர்கள் படைத்த காவியங்கள் இலக்கணத்திற்கு உட்பட்டவை, நுட்பமான பொருள்கள் நிறைந்த அமரத்துவம் பெற்றவை. அவை இன்றும் உலக அளவில் நமக்கு பெருமை தேடித் தருபவை. மேலும் தலை சிறந்த கணித மேதைகளும் வானியலாளர்களும் செய்த பங்களிப்புகள் பின்னர் முக்கிய ஆய்வுகளுக்கு பயன்பட்டன. இந்தியர்கள் இல்லாமல் இப்போது நடைமுறையில் உள்ள நவீன விஞ்ஞானத்தின் அடிப்படையாய் உள்ள எண் முறை சாத்தியமாகியிருக்காது.

-தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா நாகரிக காலத்திய நகைகளையும் குழந்தைகளுக்கான பொம்மைகளையும் கண்டெடுத்துள்ளார்கள். அவற்றின் அழகிய வேலைப்பாடுகள் அந்நாளைய பண்பட்ட வாழ்க்கை முறையை பறைசாற்றுபவையாக உள்ளன. இந்தியர்களின் வெண்கலம் மற்றும் செம்பினால் ஆன கைவினைப் பொருட்களுக்கு அகில உலகில் எப்போதுமே கிராக்கி இருந்து வருகிறது.

-மேலும் நமக்கு பெருமை சேர்ப்பவை பழங்கால துணி வேலைப்பாடுகள், கோவில்கள், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியர்களின் 8200 வருட கால அமைதியான ஒழுக்கமான சமூக வாழ்க்கை முறை.

– இவ்வளவு பெருமைகள் இருந்தாலும் சில விஷயங்களில் பழங்கால இந்தியா மற்ற நாகரிகங்களான மெசபட்டோமியா, எகிப்து, சீனா போன்ற நாடுகளிடமிருந்து பின்தங்கியே இருந்திருக்கிறது. இந்தியர்கள் தங்கள் நாட்டின் முக்கிய நிகழ்வுகளை சரியான முறையில் பதிவு செய்யவில்லை. சீனர்களும் ரோமானியர்களும் தங்கள் நாட்டு வரலாற்றை தெளிவாக பதிவு செய்துள்ளனர்.

– பழங்கால இந்தியர்கள் தங்கள் சமூகத்தில் உள்ள சமத்துவமின்மை மற்றும் அதனால் உருவாகும் வறுமையை போக்குவதற்க்கு பெரிய அக்கறை எதுவும் கொள்ளவில்லை. மேலும் இந்தியாவின் மீது படிந்துள்ள பெரும் கறை அதன் ஜாதி அமைப்பு.

(தொடரும்…)

Excerpts taken from ‘India The Ancient Past A History of the Indian Sub-Continent from C. 7000 BC to Ad 1200’BY BURJOR AVARI


இந்திய வரலாற்றிலிருந்து சில குறிப்புகள் – பகுதி ஒன்று

 – இந்தியாவின் முதன்மையான புனித நூல் ரிக் வேதம். இன்றைய பஞ்சாப் பகுதி ரிக் வேதத்தில் சப்த சிந்தவா (ஏழு நதிகளை கொண்ட நிலம்) என்று அழைக்கப்படுகிறது. இப்போது அங்கே ஐந்து நதிகள் மட்டுமே ஓடுகின்றன – சிந்து, ஜீலம், சேனாப், ரவி, சட்லஜ் / பீஸ். 4000 வருடங்களுக்கு முன் சரஸ்வதி மற்றும் த்ரஸ்வதி என்னும் இரண்டு நதிகள் இருந்தனவாக நம்பப்படுகிறது. பின்னாளில் அவை வற்றிப் போயிருக்கலாம்.

– 8000 வருடங்களுக்கு முன் பெர்சியர்கள் இந்தியாவில் ஊடுருவ ஆரம்பித்த போது, அவர்கள் மேற்கே இருந்த சிந்து நதியை தொடர்புபடுத்தி அங்கே வசித்தவர்களை ‘ஹினாபு’ என்று அவர்கள் மொழியில் அழைத்தார்கள். பிறகு சுமார் 2000 வருடங்களுக்கு பிறகு மாசிடோனியர்கள் அலக்ஸாண்டரின் தலைமையில் அங்கே படையெடுத்தார்கள். அவர்கள் சிந்து நதியை ‘இந்தோஸ்’ என்றும் அதை சார்ந்த நிலப் பகுதியை ‘இந்தியா’ என்றும் கிரேக்க மொழியில் அழைத்தார்கள். ஆனால் நம் மக்கள் சில சமஸ்கிருத பெயர்களைத் தான் உபயோகித்துள்ளார்கள் – பாரத், மத்தியதேஷா மற்றும் ஜம்புத்விபா (இந்திய வரை படம் ஜம்பு மர வடிவில்  இருப்பதால்) என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

– கி.மு. 7000 வாக்கில் பலூசிஸ்தான் பகுதியில் முதன் முதலாக விவசாயம் செய்யும் வழக்கம் தோன்றியுள்ளது.

-கி.பி.1200க்கு முன்பு நமது நாடு பலமுறை வெளிநாட்டினரால் தாக்கப்பட்டிருந்தாலும் (பெர்சியர்கள், கிரேக்கர்கள், மத்திய ஆசியாவை சேர்ந்த குஷானர்கள், அராபியர்கள் மற்றும் துருக்கியர்கள்) அப்போதிருந்த இந்திய பேரரசர்களும் சிற்றரசர்களும் தங்கள் நிலப்பகுதிகளை காப்பாற்றி தக்க வைத்துக் கொண்டார்கள்.

-கி.பி.1200க்கு பிறகு ஆப்கன் மற்றும் மொகலாயர்கள் படையெடுப்புக்கு பிறகு இந்திய மன்னர்கள் தங்கள் சுய ஆட்சி உரிமையை சிறிது சிறிதாக விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை வந்தது.

(தொடரும்…)

Excerpts taken from ‘India The Ancient Past A History of the Indian Sub-Continent from C. 7000 BC to Ad 1200’BY BURJOR AVARI


வெக்கை!

னியினால் அமையப் பெற்ற கோட்டை –
தனிமையில் நான் மட்டும் கூட்டமாக!
புரியாத குளிர் தாங்க முடியாமல்
எரித்து விட்டேன் அணிந்திருந்த உடைகளை!

வெறுமை!

மொத்த உலகும் என் அன்புப் பிடியில்
இருந்த அந்த கண நேர விநோத
நிலையில் தோன்றியதிது –

அறியாமையும் அவலமும்
தவிர்த்து பார்த்தால்,
புவியில் செய்யப்படும்
ஒவ்வொரு தீவினையும்
முன்னால் நிறைந்து நிற்கும் வெறுமையை
நிரப்பும் முயற்சி அது.
அதன் பின்னால் காத்துக் கிடக்கும்
மரணத்தை மறுக்கும் செயல் அது என்பது.

இப்போது புரிகிறது –
உலகின் ஒவ்வொருவரையும்
நான் வெறுக்க முடியுமென்பது!


இந்த கவிதைக்கு பெயர் இல்லை!

பெயர் வைத்தே பழகினோம்
எல்லாவற்றிற்கும்!
பெயரில்லா உயர்திணை இல்லை உலகினில்!
பெயரில்லா அஃறிணையும் இல்லை!

அணுவின் கருவிற்கும் பெயரிட்டோம்!
எல்லை இல்லா இப் படைப்பை
இயற்கை என்னும் சொல்லில் அடக்கி விட்டோம்!

பிரபஞ்ச இயக்கத்தின் சூட்சமத்திற்கும்
பெயர் வைத்தோம் மேதாவிகளாய்!

பெயர்களை கொண்டாடுகிறோம்.
பெயர்களை கண்டிக்கிறோம்.
பெயரை பிடித்தே தொங்குகிறோம் நாம்!

பெயர் இல்லாமலிருந்தால் ஒரு வேளை
அந்த சூட்சமத்தை உணர்ந்திருக்கலாம் நாம்!