ஈசனின் திருவடியைப் பொருந்தி இருக்கும் நிலை சமாதி

மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.  –  (திருமந்திரம் – 623)

விளக்கம்:
தியான நிலையில் பஞ்ச பூதங்களின் எல்லைகளான ஐந்து மண்டலங்கள், பன்னிரண்டு பிரணவ கலைகள், ஆறு ஆதாரச் சக்கரங்களில் உள்ள அட்சரங்களை இடமாகக் கொண்ட நாற்பத்தெட்டு தேவதைகள் ஆகியவற்றைக் காணலாம். இவை எல்லாவற்றிலும் பரந்து நிற்கும் அந்த ஈசனின் திருவடிகளில் பொருந்தி இருந்து சமாதி நிலை அடையலாம்.


சகசிரதளத்தில் அகண்ட பெருவெளியைக் காணலாம்

மூல நாடி முகட்டல குச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்டபின்
காலன் வார்த்தை கனவிலும் இல்லையே.  –  (திருமந்திரம் – 622)

விளக்கம்:
தியானத்தின் போது நாம் கண், காது, மூக்கு, நாக்கு ஆகிய நான்கு வாசல்களின் நடுவில் பொருந்தி இருக்கிறோம். அத்தியானத்தில் சிவனை நாடி இருந்து தலை உச்சியுள் உள்ள சகசிரதளத்தில் மனம் பொருந்தியிருக்குமாறு செய்வோம் . அப்போது சகசிரதளத்தின் மேலே அகண்டவெளி ஒன்றைக் காணலாம். அவ்வெளியைக் கண்டு விட்டால் பிறகு காலன் என்ற சொல் கனவிலும் கிடையாது.

சகசிரதளத்தில் மனம் செலுத்தி தியானித்திருந்தால் அங்கே அகண்ட பெருவெளியைக் காணலாம், சமாதி நிலையை அடையலாம்.

மூலம் – சிவன்,  முகட்டலகு – சகசிர தளம்


சிரசில் உணர்வு பெற்றால் மனம் அடங்கும்

விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே.  –  (திருமந்திரம் – 621)

விளக்கம்:
தியானத்தின் போது நம்முடைய மனம் சிரசின் மேல் நிலைத்திருந்தால், அங்கே ஆகாய நீர் ஊற்றெடுப்பதை உணரலாம். மேலும் அங்கே விந்தமலையைக் கண்டு களிக்கலாம். சிரசில் தோன்றும் அந்த மலைப்பிரதேசத்தில் மனமெனும் குதிரையைப் பழக்கிச் செல்லக் கூடிய வீதி ஒன்றைக் காணலாம். அந்த வீதியில் நம்முடைய மனம் பயணம் செய்தால், அந்த மனம் கடிவாளம் இடப்பட்ட குதிரை போல் அடங்கி நிற்கும்.

கடப்பதற்கு மிகவும் கடினமான விந்தமலையை அகத்தியர் கடந்ததாக ஒரு செய்தி உண்டு. சிரசின் மேல் மனம் செலுத்தி தியானம் செய்தால் ஆன்மிகத்தில் அது போன்ற கடினப்பாதையைக் கடந்து செல்லலாம். மேலும் மனம் கடிவாளம் இடப்பட்ட குதிரை போல அடங்கி நிற்கும்.

விண்டு – ஆகாயம்,   கூபம் – நீர் ஊற்று,   விஞ்சத்தடவி – விந்தமலை,   செண்டு – குதிரையை பழக்கும் வீதி,  செழுங்கிரி – செழுமையான மலை,  குசை – கடிவாளம்


மனம் அடங்கும் நிலை சமாதி

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே.  –  (திருமந்திரம் – 620)

விளக்கம்:
மனம் எங்கே நிலைபெறுகிறதோ அங்கே பிராணவாயுவின் இயக்கம் சமாதி நிலைக்கு இட்டுச் செல்லும். மனம் தியானத்தில் நிலைபெறாமல் வெளியே ஓடினால் அங்கே சமாதி நிலை சாத்தியம் இல்லை. மனம் தியானத்தில் நிலைத்திருந்து அந்த நிலையில் மகிழ்ந்திருப்போர்க்கு மனத்தில் எண்ணங்கள் அழிந்து போகும்.

மனத்தில் எண்ணங்கள் அழியும் நிலை சமாதியாகும்.


சமாதி நிலையில் பேரொளியைக் காணலாம்

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.  –  (திருமந்திரம் – 619)

விளக்கம்:
தியானத்தின் போது ஒளியும் நாதமும் தலை உச்சியில் மிகுந்து விளங்கினால், ஆன்மாவும் இறைவனும் ஒன்றி நிற்கும் நிலையான சமாதி கைகூடும். முடிவில்லாத ஞான வடிவான சிவனை அழகான பேரொளியாய்க் காணலாம்.

விந்து – ஒளி,  சந்தி – கூடுகை,  அந்தம் – முடிவு


சமாதி என்னும் பூரண நிலை

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.  –  (திருமந்திரம் – 618)

விளக்கம்:
இயமம், நியமம் முதலியவற்றைக் கடைப்பிடிப்பவர்களால் சமாதி வரை செல்ல இயலும். இயமம், நியமத்தில் ஆரம்பித்து சமாதி வரை சென்றவர்கள் அட்டமாசித்திகளை அடைவார்கள். இயமம் முதல் சமாதி வரையிலான அட்டாங்க யோகத்தில் நிலைத்து நிற்பவர்களே யோகத்தின் பூரண நிலையை அடைய முடியும்.

சமாதி என்பது நம் உயிர் இறைவனோடு ஒன்றி நிற்கும் நிலை.


தியானத்தினால் சிவனருள் பெற்று மாயையை சிதைக்கலாம்

அறிவாய சத்தென்னு மாறா றகன்று
செறிவான மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.  –  (திருமந்திரம் – 617)

விளக்கம்:
நம்முடைய மனம் தியானத்தில் நிலைக்கப் பெற்றால், நிலையில்லாததாகிய முப்பத்தாறு தத்துவங்கள் நீங்குவதை உணரலாம். நம் முன்னே மிகுதியாக இருக்கும் மாயை சிவனருளாலே சிதையும். அந்த சிவபெருமானை விட்டு என்றும் பிரியாதிருக்கும் பேரருளைப் பெற்றிடலாம். தியான வழியில் செல்பவர்கள் எல்லாம் இந்த நிலையை உணர்ந்திடலாம்.

அசத்து – நிலையில்லாதது,   ஆறாறு – முப்பத்தாறு,   செறிவு – மிகுதி,    நெறி – வழி


தியானத்தில் கடல் போன்ற ஆன்மாவை உணரலாம்

நடலித்த நாபிக்கு நால்விரன் மேலே
மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே
கடலித் திருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.  –  (திருமந்திரம் – 616)

விளக்கம்:
நடுவில் உள்ள கொப்பூழுக்கு நான்கு விரல் அளவு மேலேயும், குரல் தோன்றும் இடமான தொண்டைக்கு இரண்டு விரல் அளவு கீழேயும் உள்ளது அநாகதச் சக்கரம். அங்கே கடல் பொங்கும் ஒலியை உணர்ந்து தியானிக்க வல்லவர்கள், இந்த உடலுக்கு தலைவனான ஆன்மாவை அறிந்தவர் ஆவார்கள்.

அநாகதச் சக்கரமாகிய இருதயப் பகுதியில் மனத்தை நிறுத்தி தியானம் செய்தால், உள்ளே கடல் போன்ற ஆன்மாவின் இயல்பை உணரலாம்.

மடலித்த – இதழ் பொருந்திய,  வாணி – குரல் தோன்றும் இடம்,  கடலித்து – கடலின் தன்மையாய்,   சடலம் – உடல்


தினமும் ஒரு நாழிகை பிராணாயாமம்

முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலமிடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயர்நிலை வானவர் கோனே.  –  (திருமந்திரம் – 615)

விளக்கம்:
மூன்று குணங்களான தாமத, இராச, சாத்துவிகம் ஆகியவற்றால் ஏற்பட்ட இருள் நீங்க, உயிர்ப்பை மூலத்திடத்து சிக்கெனெப் பிடித்து முறைப்படி மூச்சுப் பயிற்சி செய்வோம். இதை தினமும் காலையில் ஒரு நாழிகை பயின்று வந்தால், சிவபெருமான் நம் உயிரை நல்ல முறையில் நிலை நிறுத்தி வைப்பான்.

வானவர் கோன் – தேவர்களின் தலைவனான சிவபெருமான்


தியானத்தினால் மன இருள் நீங்கும்

இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசந் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே.  –  (திருமந்திரம் – 614)

விளக்கம்:
அறியாமையினால் நமது நெஞ்சம் இளைத்து இருட்டறையாகிறது. அந்த இருள் நீங்க, தியானத்தின் போது தோன்றும் மூன்று மண்டலங்களிலும் பொருந்தி இருந்து, அன்புடன் முதுகுத்தண்டு வழியாக குண்டலினியை மேலே ஏற்றி குற்றம் நீங்கப் பெறுவோம். அப்படிச் செய்தால் சோர்வு நீங்கப் பெற்று மனத்தின் இருள் நீங்கி ஏற்றம் பெறலாம்.

மண்டலம் மூன்று – சூரியன், சந்திரன், அக்கினி,     பாசம் – அன்பு,    துரு – குற்றம்,    மார்கழி – மா கழிதல், இருள் கழிதல்