மரணத்தைப் போல ஒரு வசீகரமான விஷயம் இருக்குமான்னு தெரியலை. அந்த வசீகரத்தின் முக்கிய காரணம் அதன் பின்னால் இருக்கும் மர்மம். மர்மமான விஷயங்கள் வசீகரித்தை உண்டாக்குவது தானே இயற்கை? மரணம் வாழ்வுக்கு எதிரான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது, ஆனால் சாவு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியே. கவிஞர் வைரமுத்து தவம் என்றொரு கவிதையில் எழுதியிருப்பார் “எனக்குத் தெரியாமல் என் பிறப்பு நேர்ந்தது போல், எனக்குத் தெரியாமல் என் இறப்பும் நேர வேண்டும்”. எவ்வளவு அர்த்தமுள்ள தவம்!
சமீபத்தில் நேர்ந்த அம்மாவின் மரணம் இப்படி ஒரு ஏக்கத்தை தான் ஏற்படுத்தியது. அப்பேர்ப்பட்ட சாவு அது, விஜயதசமி அன்று மதிய நேரம், கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்தார். சிகிச்சைக்காக போன ஆஸ்பத்திரியின் உள்ளே நடந்தே தான் போனார், நாடி பிடித்துப் பார்த்த டாக்டர் பல்ஸ் ரொம்ப குறைந்து விட்டதாக சொல்லி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதற்குள் உயிரை விட்டு விட்டார்.
தன்னைத் தேடி வந்த மரணத்திடம் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் தன்னை ஒப்படைத்ததாகவே தோன்றியது எனக்கு. சாகும் கலை என்னும் தலைப்பில் ஓஷோ மணிக்கணக்கில் பேசியிருக்கிறார், நானும் கேட்டிருக்கிறேன். ’நீங்க எல்லாம் பேசுவீங்க, எழுதுவீங்க, படிப்பீங்க, ஆனா அது எனக்கு கை வந்த கலை’ன்னு பத்து நிமிஷத்தில் செய்து காட்டி விட்டார் அம்மா.
ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. – (திருமந்திரம் – 145)
திருமூலர் சொன்ன மாதிரி காலப்போக்கில் இறந்து போன அம்மாவை மறந்தாலும் ‘dead like me’ எனச் சொல்லாமல் சொன்ன செய்தியை மறக்க முடியாது.