ஆக்னட்டிக் கதிர்கள் – விஞ்ஞானத்தின் அற்புதம்

Electro Ognatics –  இது சமீபத்திய விஞ்ஞானத்தின் புதிய பிரிவு. இதன் வருங்கால சாத்தியங்கள் நினைத்துப் பார்க்க பிரமிப்பானவை. மிண்ணனுவியலில் ஒரு நூறாண்டு காலத்தை ஒரே பாய்ச்சலாக கடந்து விட்டோம் என்றே சொல்லலாம். இந்த புதிய விஞ்ஞானம் பல துறைகளில் செயல்படப் போகிறது என்றாலும், மனிதனின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. விபத்தினால் சாவு என்பதே இனி இராது, 108 ஆம்புலன்ஸ்களை வேறு எத்ற்கு பயன்படுத்தலாம் என்று ஒரு குழு யோசித்து வருகிறது. மனிதன் தன் சக மனிதனைக் கொலை செய்வது அசாத்தியமாகிறது. கடலினால் சூழப்பட்ட இந்த உலகில் இனி இயற்கை மரணம் மட்டுமே நிகழும்.

மனித வாழ்வின் முக்கிய அங்கமாய் இருக்கப் போகும் ஆக்னட்டிக் கதிர்கள் செயல்படும் விதம் பற்றி எனக்கு முழுதாக தெரியும் என்றாலும், அதெல்லாம் சொன்னால் உங்களுக்கு புரியாது என்பதால் சுருக்கமாக சொல்கிறேன். நம் உடலை சுற்றி சுமார் ஆறு அங்குல அடர்த்தியில் ஆக்னட்டிக் கதிர்களை உருவாக்கி விடுவார்கள். இது நமது உடலுக்கு ஒரு கவசமாய் செயல்படும். ஆக்னட்டிக் கதிர் உடையவனை அரிவாளால் வெட்ட முடியாது, துப்பாக்கியால் சுட முடியாது, நெருப்பினால் சுட முடியாது, பனியினால் உறைய வைக்க முடியாது. கீதையில் பகவான் கிருஷ்ணர் இதை பற்றி அப்போதே சொல்லியிருக்கிறார். இந்தக் கதிர் செயல்பாட்டில் இருக்கும் போது துரதிர்ஷ்டவிதமாக ஏதாவது விபத்து நடந்து விட்டால் கூட, ஒரு சின்ன சிராய்ப்பு கூட இல்லாமல் எழுந்து வந்து விடலாம்.

இந்த ஆக்னட்டிக் கதிர்களை அணிந்து கொள்வது மிகவும் சுலபம். சிம் கார்டு போன்ற சிப் ஒன்றில் உள்ளடக்கி விடக்கூடிய கதிர்கள் இவை. இனி வரப் போகும் மொபைல்கள் இந்த சிப்பை பொருத்திக் கொள்ளக் கூடிய வசதிகளுடன் வடிவமைக்கப்படுகின்றன. ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட் பெய்ட் முறையில் இந்த கதிர்களை மொபைல் மூலமாகவே ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்தக் கதிர்கள் கண்ணுக்கு புலப்படாதவை, எடை இல்லாதவை, தேவை இல்லாத நேரத்தில் ஆஃப் செய்து கொள்ளலாம்.

விருதுநகர் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய ஊரில் இது பற்றிய ஆராய்ச்சிகள் முழு வீச்சில் நடைபெற்று, இப்போது முழுமையடையும் நிலையில் உள்ளது. தலைமை விஞ்ஞானியிடம் பேசிய போது, இது தாமதமான முயற்சி என்றும், முன்பே செய்திருந்தால் நாம் காந்தியை இழந்திருக்க மாட்டோம் என்றும் சொல்லி வருத்தப்பட்டார். இந்த ஆக்னட்டிக் கதிர் வீச்சு முறை நெருப்பு, நீர், ஆயுதப் பிரயோகம், கார் விபத்து, லாரி விபத்து, விமான விபத்து ஆகிய எல்லாவற்றிலும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு விட்டது. சிறிய அளவில் கூட அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

அப்புறம் ஒரு முக்கிய விஷயம். இந்த ஆக்னட்டிக் கதிர்கள் அணுக் கதிர் வீச்சுக்களையும் தாங்க வல்லவை. இன்னும் ஒரு சில வாரங்களில் ‘ஆக்னோ’ என்ற பெயரில் இந்த பொருள் விற்பனைக்கு வருகிறது, மாதம் எண்ணூறு ரூபாய் என்ற அளவில் அதன் விலை இருக்கும் என தெரிகிறது. புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு இருவருக்கான ஒருங்கிணைந்த கதிர் வீச்சு வடிவமைத்து தரப்படும், கொஞ்சம் விலை அதிகமாய் இருக்கும். கடைசியாய் ஒரே ஒரு விஷயம் – இந்தக் கட்டுரையை நம்பி உங்கள் ஹெல்மெட்டை நீங்கள் தூர எறிந்து விட்டால், அதற்கெல்லாம் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.


எல்லாம் விதிப்படியே!

விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே. – (திருமந்திரம் – 45)

விளக்கம்:
கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் இறைவன் விதித்தபடி அல்லாமல் வேறு எப்படி இயங்க முடியும்? விதியின் வழியில் வந்த இன்பம் குற்றமில்லாதது. நாள்தோறும் அந்த சோதி வடிவான சிவனை துதிப்போம். அவன் வீடு பேறு அடையும் வழி காட்டும் சூரியன் ஆவான்.

ஆன்மிக இன்பம் மட்டுமே இயற்கையானது, விதி வழியானது, குற்றமில்லாதது.

(வேலை – கடல்,  விருத்தம் – குற்றம்,   நித்தலும் – எந்நாளும்,   பதி – வீடு)

This sea surrounded world is happening only by His fate.
There is no fault in enjoyment happening through fate.
Let we praise our Lord daily, He is our eternal light.
He guide us towards the divine path.