வெள்ளி கறுத்தால் சனி

வியாழக்கிழமைக்கும் வெள்ளிக்கிழமைக்கும் ஒரே சண்டை. இடையில் மாட்டிக் கொண்ட ஒரு ராகு காலம் மயிரிழையில் செத்துப்போனது. இருவருக்கும் இடையே சமரசம் பண்ண இறங்கி வந்த டிசம்பர் மாசம் வாங்கிக் கட்டிக்கொண்டது.

“ஒனக்கே ஒரு நெலையான எடம் கெடையாது. பாதி நாள் கார்த்திகைலயும் மீதி நாள் மார்கழிலயும் இருக்கே. நீ எங்களுக்கு நாட்டாமையா?” எப்பிடி மடக்கினேன் பாத்தியா என்று தொலைக்காட்சி விவாத்தில் கலந்து கொண்டவர் போல பெருமிதப்பட்டுக் கொண்டது வியாழன்.

“உங்களுக்குள்ள என்ன பிரச்சனை?” பஞ்சாயத்துக்காரரின் ஆர்வம் வெளிப்படையாகவே தெரிந்தது.

“ஏன்? பிரச்சனை இருந்தாத்தான் சண்டை போடணுமா?” இப்போ வெள்ளி ‘இது எப்படி’ என்பது போல் வியாழனைப் பார்த்தது. வெளியில் இருந்து ஒருவர் எட்டி எட்டிப்பார்த்தார், பார்க்க வெளிநாட்டுக்காரர் போல இருந்தது.

“என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.  முகநூல் என்ற பெயரில் அறியப்படுபவன் நான். என்னைத் தவிர்த்து இந்த உலகில் எந்த சச்சரவும் நடக்க முடியாது. இங்கே ஒரு வன்கொடுமை நடப்பதாக அவதானித்து உணர்ந்தேன். உங்கள் கருத்து மோதலை என் இடத்தில் வந்து நீங்கள் நிகழ்த்தலாம்”

“ஸார், நீங்க ஆங்கிலத்திலேயே பேசுவது தமிழுக்கு நல்லது” வியாழனும் வெள்ளியும் சேர்ந்து கொண்டன.

“ஓகே. வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?”

“இட் இஸ் அவர் ப்ராப்ளம்!”

சம்பந்தம் இல்லாமல் வந்தவர்களை விரட்டி விட்ட சந்தோஷத்தில் இரண்டு வயது முதிர்ந்தவர்களும் (இளமைக்கு எதிர்ப் பதம் கிழமை தானே) சிரித்துக் கொண்டார்கள். திடீரென வெள்ளி கறுப்பாக மாற ஆரம்பித்தார்.

“நீ ஒரிஜினல் தான்” வியாழன் சொன்னார். “கறுக்கிற வெள்ளி தான் ஒரிஜினலாமே!”


கவிக் கள்ளைக் குடித்து வெறி ஏறுதடா!

நூலகம் வலைப்பக்கத்தில் 1943ஆம் வருடத்து மும்மாத இதழ் ஒன்று படிக்க நேர்ந்தது. ’கலாநிதி’ என்பது அந்த இதழின் பெயர். அதன் உள்ளடக்கம் சுவாரசியமாக இருந்ததால் எடுத்துப் படித்தேன். சில இலக்கியக் கட்டுரைகளுடன் ஒரு மொழி ஆராய்ச்சிக் கட்டுரையும் உள்ளது, உபயோகமான தகவல்கள் நிறைந்தவை. அந்தக் கட்டுரையின் தொடர்ச்சியான அடுத்த பகுதிகள் கிடைக்குமா என்பது தெரியவில்லை, கிடைத்தால் மிகவும் பயன் உள்ளவையாக இருக்கும்.

அப்புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே வந்த போது “தமிழ்க்கவிப் பித்து” என்ற தலைப்பில் ஒரு பாடல், அதைப் படிக்கும் போது ரொம்பவே உணர்ச்சி வசப்பட வைத்தது. அந்தப் பாடலை இங்கே பகிர்கிறேன், இதை எழுதிய  ‘க.ச. ஆனந்தன்’ அவர்களுக்கு நமது கோடி வணக்கங்கள்.

தமிழ்க்கவிப் பித்து

பொன்னின் குவையெனக்கு வேண்டிய தில்லை – என்னைப்
போற்றும் புகழெனக்கு வேண்டிய தில்லை
மன்னன் முடியெனக்கு வேண்டிய தில்லை – அந்த
மார னழகெனக்கு வேண்டிய தில்லை.

கன்னித் தமிழெனக்கு வேணுமே யடா! – உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமே யடா!
தின்னத் தமிழெனக்கு வேணுமே யடா – தின்று
செத்துக் கிடக்கத்தமிழ் வேணுமே யடா!

உண்ண உணவெனக்கு வேண்டிய தில்லை – ஒரு
உற்றா ருறவனிரும் வேண்டிய தில்லை
மண்ணில் ஒருபிடியும் வேண்டிய தில்லை – இள
மாத ரிதழமுதும் வேண்டிய தில்லை.

பாட்டில் ஒருவரியைத் தின்று களிப்பேன் – உயிர்
பாயு மிடங்களிலே தன்னை மறப்பேன்
காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன்  – அங்குக்
காயுங் கிழங்குகளும் தின்று மகிழ்வேன்.

மாட மிதிலைநகர் வீதி வருவேன் – இள
மாதர் குறுநகையிற் காத லுறுவேன்
பாடி யவரணைக்கக் கூடி மகிழ்வேன் – இளம்
பச்சைக் கிளிகளுடன் பேசி மகிழ்வேன்.

கங்கை நதிக்கரையில் மூழ்கி யெழுவேன் – பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் – அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.

செம்பொற் சிலம்புடைத்த செய்தி யறிந்து – அங்குச்
சென்று கசிந்தழுது நொந்து விழுவேன்
அம்பொன் னுலகமிது கண்டனெ னடா! – என்ன
ஆனந்த மானந்தங் கண்டனெ னடா!

கால்கள் குதித்துநட மாடுதே யடா! – கவிக்
கள்ளைக் குடித்துவெறி யேறுதே யடா!
நூல்கள் கனித்தமிழில் அள்ள வேண்டும் – அதை
நோக்கித் தமிழ்பசியும் ஆற வேண்டும்.

தேவர்க் கரசுநிலை வேண்டிய தில்லை – அவர்
தின்னுஞ் சுவையமுது வேண்டிய தில்லை
சாவிற் றமிழ்படித்துச் சாக வேண்டும் – என்றன்
சாம்பல் தமிழ்மணந்து வேக வேண்டும்.


உங்கள் வருமானம் மோரா அல்லது நெய்யா?

பழமொழி நானூறு – சான்றோர் செய்கை

சிறியவர் எய்திய செல்வத்தின் நாணப்
பெரியவர் நல்குரவு நன்றே – தெரியின்
மதுமயங்கு பூங்கோதை மாணிழாய்! மோரின்
முதுநெய்தீ தாகலோ இல்.

பாலிலிருந்து கிடைக்கும் மோரின் அளவு அதிகமாகவும் நெய்யின் அளவு மிகச் சிறிதாகவும் இருந்தாலும், மோரை விட நெய் வெகு நாள் கெடாமலும் நன்மை தருவதாகவும் உள்ளது. அதுபோல தீய வழியில் சேர்க்கும் அதிக செல்வத்தை விட நியாயமான முறையில் சேர்க்கும் செல்வம், வறுமை என்று சொல்லக்கூடிய அளவுக்கு சிறிதாக இருந்தாலும் நன்மை தருவதாகும்.


வில்லி பாரதத்தில் இருந்து ஒரு பாடல்

பச்சென்றதிருநிறமுஞ்சேயிதழும் வெண்ணகையும் பார்வையென்னும்
நச்சம்புமமுதூற நவிற்றுகின்ற மடமொழியு நாணும்பூணும்
கச்சின்கணடங்காதகனதனமும் நுண்ணிடையுங்கண்டு சோர்ந்து
பிச்சன்போலாயினனப்பெண்கொடிமெய்ந் நலமுழுதும் பெறுவானின்றான்.

பாண்டியன் மகள் சித்திராங்கதையைக் கண்டு அர்ச்சுனன் இவ்வாறு ஏங்குகிறான்.

பசுமையான அழகிய நிறத்தையும், செந்நிறமான அதரத்ததையும், வெண்ணிறமான பற்களையும், கண்ணின்பார்வை யென்கிற விஷந்தீற்றிய அம்பையும், அமிருதம்போன்ற மிக்க இனிமையாய் பேசுகின்ற அழகிய பேச்சுக்களையும், நாணமென்னுங் குணத்தையும், தரிக்கிற கச்சுக்கு அடங்காத பருத்த தனங்களையும், நுண்ணியஇடையையும் பார்த்து மனந்தளர்ந்து பித்துக்கொண்டவன் போலாயினான்.