சிவத்தன்மை பெறலாம்

நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி
நடுவுநின் றார்ச்சிலர் ஞானிகள் ஆவோர்
நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.  – (திருமந்திரம் – 321)

விளக்கம்:
கரிய நிறம் கொண்ட அந்தத் திருமாலும் நடுவு நிலையில் நிற்கிறான். நான்கு வேதங்களை ஓதும் அந்த பிரமனும் நடுவு நிலையில் நிற்கிறான். நடுவு நிலையில் நிற்பவர்களில் சிலர் சிவஞானிகள் ஆவர். நாமும் நடுவு நிலையில் நின்றால், சிவத்தன்மை பெறலாம்.


நடுவு நிலையில் நிற்போம்

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.  – (திருமந்திரம் – 320)

விளக்கம்:
நடுவு நிலையில் நிற்பவர்க்கே ஞானம் கிடைக்கும். நடுவு நிலையில் நிற்பவர்க்கு நரகம் கிடையாது. நடுவு நிலையில் நிற்பவர் சொர்க்கத்தை அடைந்து அங்கே தேவர் ஆவார்.

“நானும் அவ்வழி நின்றேனே!” என்கிறார் திருமூலர்.


நம்முள்ளே சுடர் விடும் சோதி

ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்தும் தொடர்வறி யாரே. –  (திருமந்திரம் – 319)

விளக்கம்:
ஆதிக் கடவுளான நம் சிவபெருமான் தேவர்களுக்கு எல்லாம் மேலான ஒளியாகத் திகழ்பவன். அந்த சோதியே, அடியார்களாகிய நாம் தொடர வேண்டிய பெருந்தெய்வம் ஆகும். அந்த சோதியை நாம் வெளியே எங்கேயும் தேட வேண்டியதில்லை. நமக்குள்ளேயே அந்த சோதி சுடர் விட்டு விளங்குகின்றது. தம் உள்ளே இருக்கும் அந்த சோதியை வழிபட்டு உணரக்கூடிய கல்வி இல்லாதவர்கள், தமக்கும் அந்த மேலான சோதிக்கும் உள்ள தொடர்பை அறியாதவர்கள்.


கல்வி என்பது வீண் வாதத்திற்காக அல்ல!

கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.  –  (திருமந்திரம் – 318)

விளக்கம்:
சிலர்  ஞானம் பெறுவதற்கல்லாமல், தர்க்கம் செய்வதற்காகவே ஆன்மிக நூல்களைக் கற்பார்கள். அவர்கள் தீய குணம் உடையவர்கள், தங்கள் சுற்றமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை விடமாட்டார்கள்.  தன் குற்றங்களை நீக்கிக் கொள்ளாத அந்த மூடர்கள் எந்த விஷயத்தையும் பல கோணங்களில் ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். ஞானக் கல்வி பெற்று அன்பில் நிற்பவர்கள், வாழும் முறை அறிந்தவர் ஆவார்கள்.

கல்லாதவர்களை விட வீண் தர்க்கத்திற்காகவே கற்பவர்களால் ஏற்படும் தீமை அதிகம்.

(கலதி – தீயவர்,  வீடார் – விட மாட்டார்,   துரிசு – குற்றம்)


மூடரின் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே. – (திருமந்திரம் – 317)

விளக்கம்:
கல்லாத மூடரைப் பார்ப்பதே துன்பம். அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. கல்லாத மூடர்களுக்கு, தன்னைப் போன்ற கல்லாதவர் எல்லாம் நல்லவராகவே தெரிவார்கள். கல்லாத மூடர்க்கு எந்த விஷயத்திலும் உள்ள கருத்தை அறிந்து கொள்ளும் திறன் கிடையாது.


கணக்கு அறிந்தவர்!

கணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது
கணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சி
கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே. – (திருமந்திரம் – 316)

விளக்கம்:
நன்கு கல்வி கற்றவர்களே இறைவனைக் காணும் வழி தெரிந்தவர் ஆவார்கள். அவ்வாறு வழி தெரிந்தவர்களால், இறைவனின் தன்மையை உணர முடியும். அவர்களுக்கு இறைவனின் காட்சி கிடைக்கும். இந்த உலகம் முழுவதும் உள்ள எல்லாவற்றிலும், அந்த இறைவன் பரவியிருக்கும் தன்மையை அவர்கள் உணர்வார்கள்.


நோக்கம் உயர்ந்து இருக்க வேண்டும்

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே. – (திருமந்திரம் – 315)

விளக்கம்:
வானளவு உயர்ந்திருக்கும் மரத்தில் விளைந்திருக்கும் விளாம்பழத்தை உண்ண விரும்பினால், நம்முடைய கண் பார்வை மேல் நோக்கி இருக்க வேண்டும். அப்போது தான் உயர்ந்த கிளைகளில் இருக்கும் விளாம்பழம், பறிப்பதற்கு வசதியாக, நம் கண்களுக்குத் தெரியும். அதை விட்டு விட்டு நாம் மரத்தின் கீழே உதிர்ந்து கிடக்கின்ற பிஞ்சுக்காய்களை எடுத்துக் கொண்டு, அதையே கிடைப்பதற்கு அரிய விஷயமாக நினைக்கக் கூடாது. சிலர் அப்படித்தான். உலக விஷயங்களைப் பெரிதாக நினைத்து அவற்றைப் பற்றி எழுதி வீணாகப் போகிறார்கள்.

கல்வியினால் நமது நோக்கங்கள் உயர்ந்ததாக இருக்க வேண்டும். அற்ப விஷயங்களில் மனம் மயங்கக் கூடாது.


கல்வி கற்ற வல்லவர்கள்!

நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.  – (திருமந்திரம் – 314)

விளக்கம்:
கற்று அறிந்த வல்லவர்கள், இந்த உடலில் உயிர் நிலையாக நில்லாது என்பதைப் புரிந்து கொள்வார்கள். நிலையாமையைப் பற்றிப் புரிந்திருப்பதால் அவர்கள் தான தர்மத்திலும், தவத்திலும் தங்கள் காலத்தைக் கழிப்பார்கள். இறை பற்றிய கல்வி இல்லாதவர்கள் கீழானவர் ஆவார்கள். அவர்கள் இந்த உலகத்தில் கொடிய வினைகளால் விளையும் துயரங்களை அனுபவிப்பார்கள்.


எனக்குத் தெரிந்த கல்வி

கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்
கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்
கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே.  – (திருமந்திரம் – 313)

விளக்கம்:
சிவநெறியைக் கல்லாதவர்களுக்கு என்னைப் பார்த்தால் கல்வி கற்காதவனாகத் தோன்றுகிறது. என்னை அயலானாகப் பார்க்கிறார்கள். அவர்கள் துயர் தரும் உலக விஷயங்களையே செய்ய வேண்டியக் கடமைகளாக நினைக்கிறார்கள். அவற்றை செய்யும் ஆற்றல் இல்லாதவனாக இருந்து விட்டுப் போகிறேன். உலகாய வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை பிறருக்கு வழங்கும் வல்லமை எனக்கு இல்லை. காரணம் அவற்றைச் சம்பாதிக்கும் கல்வியைப் பற்றி என் மனம் நினைக்கவில்லை. எனக்குத் தெரிந்த கல்வி எல்லாம் எதிலும் பற்றில்லாமல், விலகி நின்று ஆனந்தம் கொள்வதே!


நிலையாமையைப் பற்றிய கல்வி அவசியம்

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.  – (திருமந்திரம் – 312)

விளக்கம்:
நமது மனம் நிலை இல்லாதவற்றை எல்லாம் நிலையானதாக நினைத்தே பழகி விட்டது. அதனால் தான் மனம் இந்த  உடலையும் நிலையானதாக உணர்கிறது.  ஈசன் எல்லா உயிருக்கும் இறைவன் தான், ஆனாலும் கல்வி இல்லாத நெஞ்சத்தால் அவனை உணர முடியாது.

நிலையாமையைப் பற்றிய தெளிவு தரும் கல்வி நமக்கு அவசியம்.

(குரம்பை – உடல்)