பராசக்தியின் துணையைப் பெறலாம்

செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசக்தி உத்தர பூருவ
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே.  –  (திருமந்திரம் – 550)

விளக்கம்:
சமாதி நிலை ஈடேற இயம நியம ஒழுக்கங்கள் அவசியம். இயம நியமங்களைச் சரியாகக் கடைபிடிக்கும் நிலையில் பராசக்தி நம் முன்னே தோன்றுவாள். மேலும் கவசமாகிய நியாசங்கள் (நெஞ்சு, தலை, கண், கை முதலிய உறுப்புக்களைச் சிவனது உடைமையாக நினைத்துத் தொடுதல்) செய்யும் முறையையும், முத்திரைகளையும் அறிந்து யோகத்தைச் செய்யலாம்.

அட்டாங்க யோகத்திற்கு இயமமும், நியமமும் அவசியம். அதாவது தீய பழக்கங்களை விட்டு விட்டு ஒழுக்க நெறியில் நிற்க வேண்டும்.

இயமம் – தீது அகற்றல், நியமம் – ஒழுக்க நெறியில் நிற்பது,  உத்தரம் – பின் நிகழ்வது,  பூருவம் – முன்பு


அட்டாங்க யோகத்தின் குரு நந்திதேவருக்கு வணக்கம்

உரைத்தன வற்கரி ஒன்று முடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டும் முன்பேசிய நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.  – (திருமந்திரம் – 549)

விளக்கம்:
கடிவாளம் இடப்பட்ட நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரெண்டு அங்குல நீளத்திற்கு இயங்கும் வழியை, நம் குருநாதரான நந்திதேவர் நமக்கு உரைத்தார். அட்டாங்க யோகத்தின் அடிப்படையான இயமங்களையும், நியமங்களையும் நாம் கடைபிடிக்கும்படி அருள் செய்தார்.

சிறு வயதில் நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரெண்டு அங்குல நீள அளவில் இயங்கும். வயது ஏற ஏற சுவாசிப்பின் நீளம் குறைகிறது. யோகப்பயிற்சியின் நோக்கம் சுவாசிப்பின் நீளத்தை மறுபடியும் பன்னிரெண்டு அங்குல நீளத்திற்கு கொண்டு வருவதாகும். இயமம் என்பது தீமையான செயல்களை நீக்குதல். நியமம் என்பது நல்ல பழக்க வழக்கங்களை அனுசரித்து, அதைத் தொடர்ந்து கடைபிடிப்பது.