மின்னிடையாளும் மின்னாளனும்!

மின்னிடை யாளும்மின் னாளனுங் கூட்டத்துப்
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லாரேல்
மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே – 841

விளக்கம்:
பரியங்கயோகத்தில் நின்று, மின்னிடையாளான பராசக்தியையும் மின்னாளனான சிவபெருமானையும் துவாதசாந்த வெளியில் கூடச் செய்வோம். அந்நிலையில் நம் மனத்தை சிரசின் மேலேயுள்ள துவாதசாந்த வெளியில் நிலையாக நிறுத்தி தொடர்ந்து தியானம் செய்தால் இந்த உலகத்தில் நாம் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழலாம்.

மின்னிடையாள் – பராசக்தி, மின்னாளன் – சிவபெருமான், பொன்னிடை வட்டம் – துவாதசாந்தம்


மின்னிடையாள்!

மேலாந் தலத்தில் விரிந்தவர் ஆரென்னில்
மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலாம் நிலத்தின் நடுவான அப்பொருள்
மேலா வுரைத்தனர் மின்னிடை யாளுக்கே – 840

விளக்கம்:
பரியங்கயோகத்தில் நின்று, மேலாந்தலமான துவாதசாந்தம் என்னும் வெளியை அறிவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்கு முன்பு இந்நிலையை அறிந்தவர் யாரெல்லாம் என்று பார்த்தால் – திருமால், பிரமன், நந்திதேவர் ஆகியோர் ஆவர். இதிலிருந்தே நாம் பரியங்கயோகத்தின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம். யோகத்தின் உயர்நிலையான துரியநிலையின் நடு நாயகரான சிவபெருமான் நம்முடைய பரியங்கயோக சிரத்தையை உணர்வார், தம்முடன் சேரும் மின்னிடையாளான பராசக்தியிடம் நம்முடைய யோகப்பயிற்சியின் மேன்மையை எடுத்துச் சொல்வார். இதனால் நமக்கு சிவபெருமான் அருளுடன், பராசக்தியின் அருளும் கிடைக்கும்.

மேலாந்தலம் – சிரசின் உச்சியில் விளங்கும் துவாதசாந்தம், மால் – திருமால், திசைமுகன் – பிரமன், நாலாம் நிலம் – துரியம், மின்னிடையாள் – பராசக்தி


வெளியின் ஓளி!

வெளியை அறிந்து வெளியின் நடுவே
ஒளியை அறிவின் உளிமுறி யாமே
தெளிவை அறிந்து செழுநந்தி யாலே
வெளியை அறிந்தனன் மேலறி யேனே – 839

விளக்கம்:
முந்தையப் பாடலில், தொடர்ந்த யோகப்பயிற்சியால், துவாதசாந்தம் என்னும் வெளியை அறியலாம் என்பதைப் பார்த்தோம். பரியங்கயோகத்தின் போது, சிரசின் மேலே சிவசக்தியர் ஒன்று கூடும் போது அங்கே துவாதசாந்த வெளியில் ஒளியைக் காணலாம். வெளியில் ஒளியைக் கண்டவர், குறைவில்லாத அறிவுக்கூர்மை பெற்றுத் தெளிவை அடைவார். மேன்மை மிகுந்த நந்தி அருளாலே, பரியங்கயோகத்தில் நின்று, வெளியின் ஒளியைக் காண்பதை விட சிறந்த பேறு வேறு எதுவும் இல்லை.

அறிவின் உளி – அறிவின் கூர்மை, செழுநந்தி – மேன்மை மிகுந்த நந்தி


தொடர்ந்த யோகப்பயிற்சி அவசியம்!

எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்றிட்டால்
மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே
உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே – 838

விளக்கம்:
யோகப்பயிற்சியின் போது மூலாதாரத்தில் இருந்து எழுகின்ற குண்டலினி எனும் தீயை, சிரசின் மேலே கொண்டு செல்வோம். அப்படிக் கொண்டு செல்லும் பயிற்சி நன்கு கைவரப் பெற்றால், நம்முடைய உடல் மெழுகு போல் உருகி மெலிவு பெறும். உடல் மெலிவுறும் போது, யோகப்பயிற்சி இன்னும் எளிதாகும், உடல் வருந்தாது. மேலும் நாம் நம்முடைய சிரசின் மேலே உள்ள துவாதசாந்தம் என்னும் வெளியை அறியலாம். அவ்வொளியை அறிந்த பின், நம்முடைய உடல் களைப்பு என்பதே காணாது.

எழுகின்ற தீ – குண்டலினி, உழுகின்ற தில்லை – வருந்துவதில்லை, வெளி – துவாதசாந்தம்


பரியங்கயோகத்தின் கருத்தழகு

திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்
கருத்தழ காலே கலந்தங் கிருக்கில்
வருத்தமு மில்லையா மங்கை பங்கற்குந்
துருத்தியுள் வெள்ளியஞ் சோரா தெழுமே – 837

விளக்கம்:
பரியங்கயோகம் என்பது நம்முள் இருக்கும் குண்டலினி சக்தியை மேலே உள்ள சகசிரதளத்திற்கு ஏற்றி அங்கிருக்கும் சிவத்துடன் சேர்ப்பதாகும்,  அந்தச் சேர்க்கையில் கிடைக்கும் இன்பத்தின் தன்மையை நாம் உணர்ந்து கொள்வதற்காக, திருமூலர் அப்பயிற்சியை ஆண் பெண் கலவியுடன் ஒப்பிடுகிறார். இவ்வழகிய கருத்தை உள்வாங்கி, நாம் நமது புத்தி திருந்தப் பெற்று மேன்மை பெறுவோம். பரியங்கயோகத்தின் கருத்தை உணர்ந்து, மனம் ஒன்றி யோகப்பயிற்சி செய்யும் போது, நம்முள் இருக்கும் சிவசக்தியர் வருத்தம் நீங்கி இன்பம் பெறுவர். நம்முடைய மூச்சுப்பயிற்சியில் விளையும் உயிர்சக்தி வீணாகாமல், மேல் எழுந்து சகசிரதளத்தில் சேரும். உயிர்சக்தி சரியாக சகசிரதளத்தை அடையும் போது, நமக்குச் சோர்வு என்பதே ஏற்படாது.

புதன் – புத்தி, திருத்தல் – மேன்மை பெற்று, மங்கை பங்கன் – சிவபெருமான், துருத்தி – மூச்சுப்பயிற்சி


குண்டலினியாகிய அழகிய நங்கை

வெங்கதி ருக்கும் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கு ஓரானந்தம்
தங்களில் பொன்இடை வெள்ளிதா ழாமுனம்
திங்களில் செவ்வாய் புதைந்திருந் தாரே – 836

விளக்கம்:
மூச்சுப் பயிற்சியின் போது, வெண்மையான ஒளி மிகுந்த சகசிரதளத்திற்கும், சனி போன்ற இருள் மிகுந்த மூலாதாரத்திற்கும் இடையே நகர்பவள் குண்டலினியாகிய நங்கை. அந்நங்கையை யோகப்பயிற்சியால் உச்சந்தலைக்கு மேல் இருக்கும் சகசிரதளத்திற்கு மேலே எழச் செய்வோம். அங்கே சக்தியின் திங்கள் போன்ற அழகிய முகத்தில், தமது சிவந்த வாயைப் புதைத்துப் புணரும் சிவத்துக்குக் கிடைக்கும் ஆனந்தம் பேரானந்தம். அந்நிலையில் நம்முடைய உயிர்சக்தி சகசிரதளத்தில் இருக்கும் நாதத்துடன் கலந்து நாம் சிவ இன்பம் பெறலாம்.

யோகப்பயிற்சியில் கிடைக்கும் இன்பத்தை நாம் உணர்ந்து கொள்வதற்காக, திருமூலர் அப்பயிற்சியை ஆண் பெண் கலவியுடன் ஒப்பிடுகிறார்.

வெங்கதிர் – வெண்மையான ஒளி மிகுந்த சகசிரதளம், சனி – இருள் மிகுந்த மூலாதாரம், புல்லிய – புணர்ந்த


கரியை விலக்கி அக்கினியைக் காண்போம்

வெள்ளி யுருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
வள்ளியுண் ணாவில் அடக்கிவைத் தாரே – 834

விளக்கம்:
விந்து எனும் நம் உயிர்சக்தி சகசிரதளத்தில் இருக்கும் நாதத்துடன் கலக்க விடாமல், உலக விஷயங்கள் என்னும் கரியைக் கொண்டு மூடி வைத்துள்ளார் நம்முடைய சிவபெருமான். அதாவது புறக்கலவியிலேயே நம்முடைய நாட்டம் எல்லாம் செல்கிறது.

பரியங்க யோகம் பயிலும் யோகியர், புறக்கலவியை விட்டு அகக்கலவியைக் காண, மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியாகிய அக்கினியை சுழுமுனை வழியாக மேலே ஏறச் செய்து, வலிமை உடையவராய், உள்நாக்கில் அடக்கி வைத்து சகசிரதளத்தில் இருக்கும் நாதத்துடன் சேரச் செய்வர்.

வெள்ளி – வெண்ணிற விந்து, பொன் – பொன் நிறமாகிய நாதம், கள்ளத் தட்டானார் – மறைந்திருக்கும் சிவபெருமான், கொள்ளி – குண்டலினியாகிய அக்கினி, பறிய – முன்னே செல்ல, குழல் – சுழுமுனை, உண்ணா – உள் நாக்கு, வள்ளி – வண்மை உடைய


எண்ணி எண்ணி மகிழலாம்!

ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில்
விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்தே – 832

விளக்கம்:
பரியங்கயோகத்தில் நிற்பது எல்லோரும் செய்யக்கூடிய பயிற்சி அல்ல, அது கடுமையான பயிற்சி. ஆகாய கங்கையை தலையில் வைத்திருக்கும் சிவபெருமானைப் போல, உச்சந்தலையில் அமுதம் ஊறப்பெற்ற சிவயோகிகளுக்கு மட்டுமே பரியங்கயோகம் சாத்தியமாகும். சிவயோகிகள் ஐந்து நாழிகை நேரம் பரியங்கயோகத்தில் இருந்து, தனது உச்சந்தலையில், நீர்நிலையில் தேக்கப்படும் தண்ணீரைப் போல, அமுதம் ஊறப் பெறுவார்கள்.

சிவயோகிகள் பரியங்கயோகத்தில், சிவசக்தியரை எண்ண மாட்டாமல் எண்ணி எண்ணி மகிழ்வார்கள்.

ஒண்ணாத – இயலாத/எளிதில் செய்ய முடியாத, உற்றவர் – நட்பு கொண்டவர்/யோகம் கைவரப் பெற்றவர், பண் – நீர்நிலை


செய்வதற்கு அரிய பரியங்கயோகம்!

பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே – 831

விளக்கம்:
முன் கையில் சரிகின்ற வளையலை அணிந்திருப்பவளும், மார்பில் சந்தனம் பூசப்பெற்று வாசனை மிகுந்தவளாகவும் இருப்பவள் குண்டலினியாகிய சக்தி. அந்த குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் இருத்தாமல், மேலே எழச்செய்து, சகசிரதளத்தில் இருக்கும் சிவனைத் தொட்டுத் தழுவி இன்பம் பெறச் செய்வோம். ஐந்து நாழிகை நேரம் பரியங்கயோகத்தில் நிற்கும் யோகிகளால் மட்டுமே சிவசக்தியரை கூடச் செய்வது சாத்தியம்.

செய்வதற்கு அரியதாகிய, ஐந்து நாழிகை நேர பரியங்கயோகம் செய்யும் யோகிகள் மட்டுமே சிவசக்தியரை ஒன்று சேரக் காண்பார்கள்.

பஞ்ச கடிகை – ஐந்து நாழிகை நேரம், சரிவளை முன்கைச்சி – முன் கையில் சரிகின்ற வளையலை அணிந்திருப்பவள்.


மனம் நிறையச் செய்யும் யோகம்

அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே – 830

விளக்கம்:
சிவசக்தி சேர்ந்திருக்கும் பரியங்கயோகத்தில் ஐந்து நாழிகைகள் தொடர்ந்து நின்று ஆறாவது நாழிகையிலும் தொடர்ந்தால், மனம் நிறைந்த இன்பம் பெருகும். அந்த இன்பத்தைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் காணாது.

ஐந்து நாழிகை நேரம் குண்டலினி சக்தியும், சகசிரதள சிவனும் சேர்ந்து இருக்கும்படி யோகம் செய்வது, பரியங்கயோகம் ஆகும்.

கடிகை – நாழிகை (24 நிமிடங்கள்), வாய் கொளாது – சொல்ல வார்த்தைகள் காணாது