கருத்து ஊன்றி தியானம் செய்வோம்

காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையும்
காக்கலு மாகுங் கலைபதி னாறையும்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவும்
காக்கலு மாகுங் கருத்துற நில்லே – 713

விளக்கம்:
நாம் யோக வழியில் கருத்து ஊன்றி நிற்போம். கருத்துடன் தொடர்ந்து தியானம் செய்து வந்தால்,  அந்தக் கரணங்களான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியன உலக விஷயங்களில் செல்லாமல் அருள் வழியிலே நிற்கும்படியாக சிவன் அருள்வான். சித்தம் அருள் வழியில் நின்றால், பிராணாயாமத்தில் நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்று அருள் வெளியில் கலப்பதை உணரலாம். அந்நிலையிலே சந்திரகலைகள் பதினாறும் பரந்து நின்று நம்மைக் காக்கும்.


அன்பு ஒன்றே சிவனைக் காணும் வழி

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
காதல் வழிசெய்து காக்கலு மாமே – 712

விளக்கம்:
நம் அண்ணலான நெற்றிக்கண் கொண்ட சிவபெருமானைக் கண்டடையும் வழியை அப்பெருமானே நமக்கு வகுத்துக் கொடுத்துள்ளான். அன்பு என்பதே அவ்வழி! அனைத்தையும் நாம் அன்பெனும் கண்ணோட்டத்திலே காண்போம். அப்படி அன்பு வழியில் நின்று தொடர்ந்து தியானம் செய்து வந்தால், சிவ அருள் வெள்ளமெனப் பெருகி வரும். அவ்வருள் நம்மை என்றென்றும் காத்து நிற்கும்.


மூச்சைக் கட்ட வல்லவர்கள்

கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தாமாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
நட்டறி வார்க்கு நமனில்லை தானே – 711

விளக்கம்:
பிராணாயாமம் செய்து மூச்சைக் கட்ட வல்லவர்கள், மறைந்திருக்கும் அருள்வெளியைக் கண்டடைந்து அங்கே மனம் லயித்திருப்பார்கள். தாமரைப்பூவிலிருந்து அதன் மணத்தை பிரிக்க முடியாது, அது போல் தியானத்திலே நமது மனம் திரிவுபடாமல் சுழுமுனையில் நிலைத்திருக்க வேண்டும். அப்படி மனம் நிலைத்து நின்று தியானம் செய்தால் குண்டலினியாகிய சக்தி புருவ மத்தியில் குத்தி மேல் ஏறுவதையும், உச்சந்தலையில் பொறி கிளம்புவதையும் உணரலாம். இவ்வாறான அனுபவங்களைப் பெற்றவர்களுக்கு மரணம் பற்றிய சிந்தனையோ பயமோ இருக்காது.


மெய்யடியார்க்கு வழிகாட்டும் சிவன்

மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்
துதிசெய் பவர்அவர் தொல்வா னவர்கள்
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்
பதியது காட்டும் பரமன்நின் றானே – 710

விளக்கம்:
பிராணாயாமத்தில் இடைகலை, பிங்கலை வழியாக மூச்சுப்பயிற்சி செய்து சுழுமுனையில் மனம் குவிந்து ஆதாரச் சக்கரங்களில் வீற்றிருக்கும் பிரமன், திருமால் முதலான கடவுள்களைத் தியானித்து வழிபடுவோம். அப்படி முறைப்படி தொடர்ந்து யோகம் செய்கின்ற மெய்யடியார்களுக்கு, நம்முடைய சிவபெருமான் வீடுபேறு அடையும் வழியைக் காட்டி அருள்வான்.


ஆனந்த யோகம் பெறலாம்

ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தம்ஈ தானந்த யோகமே – 709

விளக்கம்:
மூலாதாரம் முதல் ஆக்கினை (புருவ மத்தி) வரை உள்ள ஆறு ஆதாரச் சக்கரங்களைக் கடந்து, அங்கே வீற்றிருக்கும் கடவுளர்களைத் தியானித்து, இன்னும் உயரே சென்று தியானித்தால் அங்கே சிவசக்தியரைக் காணலாம். அங்கே மேதை முதலான பன்னிரெண்டு சந்திரகலைகளைக் கடந்து மேல் ஏறினால், சிரசில் இருந்து பன்னிரெண்டு அங்குலத்துக்கு மேலே மனம் நிலைத்து, வாக்கும் மனமும் இறந்து ஆனந்த யோகம் பெறலாம்.


சிவசக்தியின் திருவடிகளைக் காணலாம்

மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே – 708

விளக்கம்:
மூலாதாரத்துக்கு மேல் உள்ள சுவாதிட்டானத்தில் பிரமனும், மணிப்பூரகத்தில் திருமாலும், அநாகதத்தில் உருத்திரனும் வீற்றிருக்கிரார்கள். மகேசுரனின் வழிகாட்டுதல்படி அநாகதத்துக்கு மேலே தலை உச்சி வரை சிவ ஒளியையும், சிவநாதத்தையும் உணரலாம். தொடர்ந்து இவ்வாறு தியானத்து வந்தால் சிவசக்தியரின் திருவடிகளைக் காணும் பேறு கிடைக்கும். அந்நிலையில் தனிப்பட்ட அருள் ஒளியைக் காணலாம், அருள் ஒலியைக் கேட்கலாம்.


சிவபெருமானை வெளியே தேட வேண்டாம்

ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகரறி வாரே – 707

விளக்கம்:
நமது அண்ணலான சிவபெருமானைக் காண்பது மிக எளிது. ஆனால் நாம் பாதங்கள் வலிக்கும் அளவுக்கு அங்கேயும் இங்கேயுமாக பயணம் செய்து எங்கெங்கொ சென்று சிவபெருமானைத் தேடுகிறோம். அண்ணல் மேல் கொண்ட அன்பினால், பக்தியினால் நாம் யோக வழியில் தொடர்ந்து நின்று தியானித்தால், நமக்குள்ளேயே குடியிருக்கும் சிவபெருமானைக் காணலாம்.

ஓதம் ஒலிக்கும் உலகு – கடல் சூழ்ந்த உலகம்.


யோகம் செய்பர்களின் பத்து இயல்புகள்

அணங்கற்ற மாதல் அருஞ்சனம் நீவல்
வணங்குற்ற கல்விமா ஞான மிகுதல்
சிணுங்குற்ற வாயர்தம் சித்தி தாம்கேட்டல்
நுணங்கற் றிருத்தல்கால் வேகத்து நுந்தலே – 705

மரணஞ் சரைவிடல் வண்பர காயம்
இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்
அரனன் திருவுரு வாதல்மூ வேழாங்
கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே – 706

விளக்கம்:
பிராணாயாமத்தின் கணக்கறிந்து தொடர்ந்து அப்பயிற்சி செய்பவர்கள் இவ்வாறான பத்து இயல்புகளைப் பெறுவார்கள்.

1. பெண்ணாசையைத் துறப்பார்கள்.
2. சுற்றத்தினரின் உலக விஷயப் பேச்சுக்களில் இருந்து விலகி இருப்பார்கள்.
3. சிவவழிபாடு பற்றிய நூல்களைப் படித்து ஞானம் பெறுவார்கள்.
4. சதா சிவமந்திரத்தை முணுமுணுக்கும் சித்தர்களின் பெருமைகளைக் கேட்டு அறிவார்கள்.
5. எந்தச் சூழ்நிலையிலும் மனம் துவளாது இருப்பார்கள்.
6. பிராணாயாமத்தை எளிதாகச் செய்யும் அளவிற்கு பயிற்சி பெற்று இருப்பார்கள்.
7. மூப்பு, இறப்பு ஆகியவற்றைக் கடந்து எப்போதும் இளமையாக உணர்வார்கள்.
8. சிவ அருள் வெளியில் கலந்து இருப்பார்கள்.
9. தமது நல்ல செய்கைகளால் முன்னோர்களை நற்கதி பெறச் செய்வார்கள்.
10. சிவனது திருவுருவைத் தான் பெறுவார்கள்.


சிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்

சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவில்
சந்திரன் தானும் தலைப்படும் தன்மையைச்
சந்தியிலே கண்டு தான்ஆம் சகமுகத்து
உந்திச் சமாதி உடையொளி யோகியே. – (திருமந்திரம் – 704)

விளக்கம்:
பிராணாயாமத்தின் போது இடங்கலை, பிங்கலை ஆகிய மூச்சுக்காற்றில் பரம்பொருளும் கலந்து நிற்கிறது. இதனால் தூணைப் போல நிலையாக இருக்கும் சுழுமுனையின் உச்சியிலே, சிவபெருமானின் திருமுடியில் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம். அட்டாங்க யோகத்தில் நிற்பதால், நமது உடலில் உயிர் உள்ளபோதே சமாதி நிலையை அடைந்து யோகி ஆகலாம்.


ஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்

ஆறுஅது கால்கொண்டு இரதம் விளைத்திடும்
ஏழுஅது கால்கொண்டு இரட்டி இறக்கிட
எட்டுஅது கால்கொண்டு இடவகை ஒத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே. – (திருமந்திரம் – 703)

விளக்கம்:
மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களுக்கும் மேல் உள்ள ஏழாவது ஆதாரமான சகசிரதளத்தில், நமது மூச்சுக்காற்றை ஏற்றி இறக்கி பிராணாயாமம் செய்யும் போது, ஆறு ஆதாரங்களிலும் அமிர்தம் ஊறும். எட்டாவது ஆதாரமாகச் சொல்லப்படும் உச்சந்தலையில் இருந்து பன்னிரெண்டு அங்குலம் உயரத்தில் மனம் நிறுத்தி பிராணாயாமம் செய்யும் போது, சுழுமுனையும் சுழுமுனை தவிர்த்த மற்ற ஒன்பது நாடிகளும் ஒரே அளவில் பிராண வாயு பெற்று வளம் பெறும்.

தசநாடிகள் எனச் சொல்லப்படும் பத்து நாடிகள் இவை – பிங்கலை, இடங்கலை, சுழுமுனை, சிகுவை, காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை, சங்கினி, குரு என்பதாகும்.