தேவர்களை விட மிகுந்த பேரின்பம் பெறலாம்

பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே. – (திருமந்திரம் –298)

விளக்கம்:
ஏதாவது ஒன்றை பற்றிக்கொள்ள வேண்டுமென்றால் நாம் அந்த பரமனைப் பற்றிக்கொள்வோம். அந்தப் பற்று முழுமையாக இருந்தால் முதல்வனாம் சிவமெருமானின் அருளைப் பெறலாம். சாமர்த்தியம் மிகுந்த தேவர்களை விட கல்வியின் மூலம் இறைவனை உணர்ந்தவர்கள் மிகுந்த பேரின்பம் பெறுகிறார்கள்.


வழித்துணையாய் வரும் கல்வி

வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே. – (திருமந்திரம் –297)

விளக்கம்:
கல்வி கற்றவர்களின் சிந்தனை நமக்கெல்லாம் வழித்துணையாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் விளங்குகிறது. கல்வி இல்லாதவர்களின் சிந்தனை இறைவனைப் பற்றிய எண்ணங்களை நீக்கி அறியாமையை விளைவிக்கும். அவற்றை நாம் தவிர்க்க வேண்டும். கல்வி கற்றவர்களுக்கு, அந்த தேவலோகம் முதலிய ஏழு உலகங்களுக்கும் வழித்துணையாய் விளங்கும் அந்த சிவபெருமான்  பெருந்தன்மையுடன் அருள் புரிவான்.


நூல் ஏணி

ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே. – (திருமந்திரம் –296)

விளக்கம்:
சூரியனின் ஒளி எல்லாப் பக்கங்களிலும் பரவி இருந்தாலும், சூரியகாந்தக் கல்லால் மட்டுமே சூரிய ஒளியை உள்வாங்கி நெருப்பை வெளியே சிதற விட முடியும். அது போல இறைவன் எங்கும் பரவி இருக்கிறான் என்றாலும், கல்வி கற்றவர்களாலேயே அந்த இறைவனை உணர முடியும். இளஞ்சந்திரனை தன் நெற்றியில் அணிந்துள்ள சிவபெருமானை அடைய வல்லவர்களுக்கு சிறந்த நூல்களை ஏணியாகப் பற்றிக்கொள்ளக் கூடிய மனம் வாய்க்கும்.


கல்வியினால் மயக்கம் தெளியும்

நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயங்கெடும்
கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்க்களே. – (திருமந்திரம் –295)

விளக்கம்:
சாஸ்திரங்களைக் கற்று அறிவு நுன்மை அடையப் பெறாதவர்கள், காமத்தைப் பற்றிக் கொண்டு, தம்மிடம் உள்ள மற்ற நல்ல பண்பினால் கிடைக்கக் கூடிய பயன்களையும் கெடுத்துக்கொள்கிறார்கள். கம்பு ஒன்றைக் கையில் எடுத்தாலே கூடியிருக்கும் பறவைகள் தன்னாலே ஓடி விடுவதை போல, சாஸ்திரங்களைக் கற்றுத் தெளிந்து ஞானம் அடைந்தால் காமம் போன்ற மயக்கங்கள் தன்னாலே ஓடி விடும். ஆனாலும் மக்கள் ஆசையை பற்றிக் கொண்டு மனம் மயங்குகிறார்களே!


நல்வாழ்விற்கு வழித்துணையாய் வருபவை

துணையது வாய்வரும் தூயநற் சோதி
துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வரும் தூயநற் கந்தம்
துணையது வாய்வரும் தூயநற் கல்வியே. – (திருமந்திரம் – 294)

விளக்கம்:
நல்வாழ்விற்கு வழித் துணையாய் வரும் விஷயங்கள் இவை.

  • தூய நற்சோதி (சோதி வடிவான சிவபெருமான்).
  • தூய நல் சொற்கள் (இனிய சொற்களை மட்டும் பேசுதல்).
  • தூய நல் சுக்கிலம் (சுக்கிலம் கெடாமல் காத்தல்).
  • தூய நல் கல்வியினால் மேல் சொன்ன மூன்று துணைகளையும் பெறலாம்.

(கந்தம் – சுக்கிலம்)


கல்வியின் வேரைக் காண்போம்

கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பாம்பரிந்து உண்கின்றார்
எல்லியும் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே. – (திருமந்திரம் – 293)

விளக்கம்:
கல்வி கற்றவர்கள் கூட எல்லாருமே இறை வழிபாட்டில் ஆர்வம் கொள்வதில்லை. கல்வியின் வேரைக் கண்டவர்கள் தான் இறை வழிபாட்டின் அவசியத்தை உணர்கிறார்கள். அவர்கள் பாம்பு போல நீளும் குண்டலினியைப் பற்றி, அதன் ஆற்றலை மேம்படுத்துகிறார்கள். நாம் இரவும் பகலும் நம் இறைவனை நினைத்து வழிபடுவோம். அவ்வாறு வழிபட்டால் அந்த இறைவனின் சக்தி வலிமையாக உள்நின்று நம் உடலினைக் காக்கும்.

(பல்லி – வேர்,  எல்லி – இரவு,  வல்லி – வலிமை,  காயம் – உடல்)


கல்வியால் பாவம் தொலையும்

நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன்று இலாத மணிவிளக் காமே. – (திருமந்திரம் – 292)

விளக்கம்:
நிலைத்து நிற்கும் பரம்பொருளான சிவபெருமானின் திருவடிச் சிறப்பைச் சொல்லும் கல்வியை இளமையிலேயே கற்போம். அக்கல்வியால் நம் பாவங்கள் தொலைந்து போகும். சொல் குற்றம் இல்லாது அந்த இறைவனை தொழுவோம், ஒப்பீடு செய்ய முடியாத மணிவிளக்காய் அந்த இறைவன் தோன்றி அருள்வான்.

(செய்மின் – செய்யுங்கள், கழிந்தறும் – கழிந்து போகும்)


கற்றறிவாளர் சொல்வதைக் கேட்போம்

கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே. – (திருமந்திரம் – 291)

விளக்கம்:
உண்மையான கல்வி கற்ற அறிவாளர்கள் சொல்லும் கருத்தை நாம் எண்ணிப் பார்த்தால், அந்தக் கருத்தினில் ஞானம் இருக்கும். கற்றறிந்த அறிவாளர்கள் நமக்காகத் தரும் உரைகளை நாம் கற்று அறிவோம். அந்த உரைகள் நம் அறிவுக் கண்ணைத் திறக்கும்.


கற்க வேண்டிய உண்மையான கல்வி!

குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந்துஉள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே. – (திருமந்திரம் – 290)

விளக்கம்:
மனம் ஒருமைப் படும் விதம் அறிந்தேன்.  இணைந்திருக்கும் உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவை அறிந்தேன். உள்ளத்தினுள் புகுந்த தேவர்பிரான் சிவபெருமானை மறுக்காமல் ஏற்க கற்றேன். உவர்ப்பு ஏற்படுத்தாத இந்த வகையான கல்வியை நிறைய கற்றேன்.

மனத்தை ஒருமைப் படுத்தலும்  உடல், உயிருக்கு இடையேயான உறவை அறிந்து கொள்ளுதலும், கற்க வேண்டிய முக்கிய  கல்வியாகும்.

(குறிப்பு – மன ஒருமை, செறிப்பு – உறவு, கறிப்பு – உவர்ப்பு)


பொருள் கொடுத்து இருள் வாங்கலாமா?

பழமொழி நானூறு பற்றிய என்னுடைய பதிவுகளின் நோக்கம் பழம்பெருமை பேசுவதல்ல, இலக்கியம் பற்றி பேசுவதும் அல்ல. நான் இந்த நூலை சுய முன்னேற்றப் புத்தக வரிசையில், ஒரு சிறந்த நூலாகப் பார்க்கிறேன். நிறைய சுய முன்னேற்ற நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன, எவ்வளவு சிறப்பான நூலாக இருந்தாலும் அவற்றில் ஒரு அன்னியத் தன்மையை உணர முடியும். ஆனால் இவை நமது மொழியிலேயே எழுதப்பட்டவை, ஆயிரக்கணக்கான வருடங்களாக நமது மக்களின் பேச்சு வழக்கில் இருந்த பழமொழிகள் இவை.

பழமொழி நானூற்றில் உள்ள பொருட் செறிவைப் பற்றி ஆராயும் பொறுப்பை உங்களிடமே விடுகிறேன். பாடலுக்கு நான் எழுதியிருக்கும் விளக்கங்கள் ஒரு சின்ன வழிகாட்டி, அவ்வளவு தான். விளக்கத்தைப் படித்த பின் மறுபடியும் பாடலைப் படித்துப் பாருங்கள், உங்கள் வாழ்க்கை அனுபவத்திற்கு ஏற்ப இன்னும் பல நுணுக்கமான பொருள்கள் விளங்கும். இந்த நூலில் உள்ள நானூறு செய்யுள்களும், நம் முன்னோர்களின் பல ஆயிரம் வருட வாழ்க்கை அனுபவங்களின் சாரம், அதனால் இதன் பொருள் புரியும் போது பாடல்கள் எல்லாம் மனதிற்கு நெருக்கமாகி விடும். கொஞ்சம் மெனக்கெட வேண்டும், அவ்வளவு தான். பலாப்பழத்தை வெட்டி சுளை எடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் சுளையின் ருசி?

இந்தக் கட்டுரையில், பழமொழி நானூற்றில் கல்வி என்னும் தலைப்பில் உள்ள பத்து பாடல்களைப் பற்றி பார்க்கிறோம். ‘Empty your cup’ என்று ஒரு ஜென் மொழி உண்டு. கிட்டத்தட்ட அதே பொருளில் ஒரு பழமொழியும் உண்டு – ‘கற்றொறுந்தான் கல்லாத வாறு’. கற்றலின் போது ஏன் அப்படி தமக்கு எல்லாம் தெரியும் என்கிற மனநிலையை விலக்க வேண்டும் என்பதற்கும் பாடலில் விளக்கம் உண்டு. பாடல்களைப் பார்ப்போம் இப்போது.

ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.

1. ‘சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லை.’ 2. ‘மரம் போக்கிக் கூலி கொண்டார் இல்லை.’ – இவை இந்தப் பாட்டில் வந்த பழமொழிகள். இளமையில் கல்வி கல்லாதவன் முதுமையில் கற்பது கடினம்! சுங்கச் சாவடியில் வரும் வண்டிகளை போக விட்ட பிறகு வரி வசூல் செய்ய முடியுமா? ஆற்றைக் கடக்க உதவும் ஓடக்காரன், ஆற்றைக் கடந்த பின் பயணிகளிடம் காசு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால் காசு வந்து சேருமா? இளமை இருக்கும் போதே முடிந்த அளவு கல்வி கற்று விட வேண்டும்.

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித் துழன்றொன் றறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு.

கற்றறிந்த ஆசிரியர் முன்பு, கல்வி கற்கும் மாணவர்கள் நமக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலையை தவிர்க்க வேண்டும். தன்னுடைய பாடத்தில் கவனத்தைக் குவித்துப் பொருள் அறிந்து கற்க வேண்டும். ‘கற்றொறுந்தான் கல்லாத வாறு’ என்பது பழமொழி. நிறைய விஷயங்கள் தெரிந்த மாதிரி பெரியவர்களிடம் நாம் பேசினால், அவர்களும் நம்மிடம் அது பற்றி விரிவாக பேசுவார்கள். அப்போது எங்கே ஏதாவது ஏடாகூடமாக பதில் சொல்லி மாட்டிக் கொள்வோமோ என்ற பயமே நமக்கு சோர்வைக் கொடுக்கும். அந்த மனநிலையை தவிர்த்தால் பாடத்தில் கவனமும் குவியும்.

விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கமின் றென்றனைத்தும் தூக்கி விளக்கு
மருள்படுவ தாயின் மலைநாட என்னை
பொருள்கொடுத்துக் கொள்ளா ரிருள்.

விளக்கிற்கு வேண்டிய நெய் முதலியவற்றை விலை கொடுத்து வாங்குவது, அந்த விளக்கு இருள் நீக்கி தெளிவான காட்சி காட்ட வேண்டும் என்பதற்காக. நாம் கற்கும் கல்வி, அறிவு வெளிச்சத்தைத் தருவதாக இருக்க வேண்டும். ‘பொருள் கொடுத்து கொள்ளார் இருள்’ என்பது பழமொழி.  கற்கும் கல்வி நேர்மையான நல்ல விஷயத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும். யாராவது காசு கொடுத்து இருட்டை வாங்குவார்களா? எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், சாஃப்ட்வேர் எழுதுபவர்கள் புரோகிராமும் எழுதலாம், வைரஸும் எழுதலாம். படித்த படிப்பெல்லாம் வைரஸ் எழுதத்தானா?

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.

நன்கு கற்ற அறிவுடையவர்கள், உலகில் எந்த நாட்டிற்குச் சென்றாலும், அவர்களின் கல்வி அறிவுக்கு அங்கு நல்ல வரவேற்பிருக்கும். அவர்களுக்கு அங்கு உணவு பற்றிய கவலை தேவையில்லை. கற்றாருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. ‘ஆற்று உணா வேண்டுவது இல்’ என்பது பழமொழி. நிறைந்த கல்வி கற்றவர்கள் பல நாடுகளுக்குச் சென்று வருவார்கள், அவர்களுக்கு அது வேறு நாடு என்ற தயக்கமெல்லாம் இருக்காது. தம் திறமையினால் நிறைய சம்பாதிக்கவும் செய்வார்கள், அதனால் அவர்களுக்கு உணவு பற்றிய கவலையெல்லாம் கிடையாது.

உணற்கினிய இன்னீர் பிறிதுழிஇல் லென்னும்
கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா தினிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று.

கிணற்றில் வாழும் தேரை, இந்தக் கிணறு தவிர வேறு எங்கும் நல்ல நீர் கிடைக்காது என்று நினைக்கும். கல்வி கற்கும் மாணவர்கள், அது போல் இல்லாது, தாம் கற்கும் நூல்களைத் தவிர பிற நூல்களைப் பற்றியும் கேட்டு அறிவதே நல்லது. ‘கற்றலிற் கேட்டலே நன்று’ என்பது பழமொழி. புத்தகங்களை  படிப்பதோடு நின்று விடாமல், விஷயம் தெரிந்தவர்களுடன் உரையாடுவதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வது நல்லது.

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.

‘சிறுவனான இவனுக்கு வழக்கு முடிவு சொல்லத் தெரியாது’ என நினைத்தவர்களுக்கு மத்தியில் நரைமுடியுடன் வயதான வேடத்தில் வந்து வழக்கு தீர்த்தவன் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன். ‘குலவிச்சை கல்லாமல் பாகம் படும்’ என்பது பழமொழி. ஒருவன் கற்கும் கல்வி, தன் குடும்பத்தினரின் தொழில் சம்பந்தப்பட்டதாக இருந்தால் அந்தக் கல்வி மிகவும் எளிதாக இருக்கும்.

புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புன லூர பொதுமக்கட் காகாதே.
பாம்பறியும் பாம்பின கால்.

சிறந்த கல்வி அறிவுடையவரின் திறனை, பிற அறிஞர்கள் எளிதாக  அடையாளம் கண்டு உணர்வார்கள். ‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்பது பழமொழி. கல்வியறிவு இல்லாதவர்களுக்கு கற்றவர்களுடைய அறிவின் தன்மை விளங்காது.

நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்பமற் றென்றும்
அயிலாலே போழ்ப அயில்.

ஒரு இரும்பை இன்னொரு கூர்மையான இரும்பைக் கொண்டுதான் பிளக்க முடியும். அது போல நன்கு கற்ற ஒருவரின் கண்ணோட்டத்தை, அவரை விட நன்கு கற்றவராலேயே உணர முடியும்.  ‘அயிலாலே போழ்ப அயில்’ என்பது பழமொழி. நல்லார் என்பதற்கு கற்றார் என்பது இங்கே பொருள். நலம் என்பதற்கு கண்ணோட்டம் என்றும் பொருள் உண்டு.

கற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பர் - தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
நிறைகுடம் நீர்தளும்பல் இல்.

முழுமையான கல்வி கற்றவர்கள், தம்மைத் தாமே புகழ்ந்து கொள்ள மாட்டார்கள், அடக்கமாக இருப்பார்கள். முழுமையாகக் கற்காதவர்கள் தான் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வார்கள். ‘நிறைகுடம் நீர் தளும்பல் இல்’ என்பது பழமொழி. கற்றவவர்களின் அடக்கத்தின் பின்னால் இருக்கும் திறமைகள், அரைகுறைகளுக்குப் புரியாது.

விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை யில்லார்
கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப்
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்துப் பட்ட மறு.

தரம் குறைந்த நூல்களை நாடாமல், நல்ல நெறிகளைப் படித்து உணர்ந்து அதன்படி நடப்பவர்கள் அதிகாரத்துடன் வாழ்வார்கள். அவர்கள் கொஞ்சம் கீழ்த்தரமாக நடந்தால் கூட நிலாவில் உள்ள கறை போலப் பெரிதாகத் தெரியும். ‘மதிப்புறத்துப் பட்ட மறு’ என்பது பழமொழி.