மேன்மை பெற்ற குருநாதர்கள்

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. – (திருமந்திரம் – 70)

நந்தி பெருமானின் அருள் பெற்ற குருநாதர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும் நான்கு திசைகளுக்கு ஒருவராக சென்று தாம் பெற்ற அனுபவங்களை எல்லாம் மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். தம்முடைய ஆன்மிக அனுபவங்களை பிறர்க்கு பகிர்ந்ததால் மேன்மையானவர் ஆனார்கள்.


திருமூலரிடம் உபதேசம் பெற்ற ஏழு பேர்

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே. – (திருமந்திரம் – 69)

திருமூலரிடம் திருமந்திரத்தை உபதேசமாகப் பெற்றவர்கள் ஏழு பேர். 1. மாலாங்கன், 2. இந்திரன், 3. சோமன், 4. பிரமன், 5. உருத்திரன், 6. காலாங்கி, 7. கஞ்சமலையன்.

(கந்துரு – கட்டுத்தறி. கட்டுத்தறி போல அசையாதிருந்து யோகம் செய்யும் காலாங்கி)


நந்தி அருள் பெற்ற எட்டு பேர்

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே. – (திருமந்திரம் – 67)

நந்தி பெருமான் அருள் பெற்ற குருநாதர்கள் யார் யாரெல்லாம் என்று பார்த்தால் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர். இவர்களுடன் சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய நால்வருடன் சேர்த்து மொத்தம் எட்டு பேருமாகும்.


பந்தங்களிலிருந்து விடுபடும் முறை

அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே. – (திருமந்திரம் – 66)

சிவபெருமான் பந்தங்களிலிருந்து பற்றை நீக்கும் முறையையும், இறைவனின் திருவடியில் பற்று வைக்கும் விதத்தையும் ஆகமங்களின் மூலமாக நமக்கு அருளினான். மேலும் அவ்வாகமங்கள் கண் இமைத்தல் ஒழித்து உயிர் போகின்ற முறையையும் சொல்லித் தருகின்றன. தமிழ் மொழி மற்றும் வடமொழி ஆகியவற்றில் உள்ள இந்த ஆகமங்கள் மூலமாக நாம் இறைவனை உணரலாம்.


ஊழிக்காலம்

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே. – (திருமந்திரம் – 65)

ஊழிக்காலத்தில் மழைக்காலம், கோடைக்காலம் எல்லாம் நின்று எங்கும் ஒரே பனி மயமாக இருந்தது. ஏரிகளில் எல்லாம் நீர் ஓடாமல் நின்று விட்டது. அந்த ஊழிக்காலத்தில் சிவபெருமான் ஆகமங்களை அன்னை பராசக்திக்கு சமஸ்கிருதத்திலும் தமிழிலும்  அருளினான்.


நந்தியம் பெருமான் சொன்ன ஒன்பது ஆகமங்கள்

பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்
துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே. – (திருமந்திரம் – 63)

இருபத்தெட்டு ஆகமங்களுள் ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவைகாக நந்தியம் பெருமானால் உரைக்கப்பட்டவை. அவை 1. காரணம்,  2. காமிகம்,  3. வீரம்,  4. சிந்தியம்,  5. வாதுளம்,  6. யாமளம்,  7. காலோத்தரம்,  8. சுப்பிரம்,  9 மகுடம்.


ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவை

சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே. – (திருமந்திரம் – 62)

இருபத்தெட்டு ஆகமங்களுள் ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவை. அவற்றை சிவமான பரம்பொருளிடம் இருந்து சத்தியும் சதாசிவமும், உள்ளத்துக்கு உகந்த மகேசர், உருத்திரர், தவம் செய்த திருமால், நான்முகன் ஆகியோர் பெற்றார்கள். இவர்களோடு நந்தியம்பெருமானும், அந்த ஒன்பது ஆகமங்களைத் தான் பெற்று நமக்கு உரைத்தான்.


ஆகமங்களில் அறிவாய் விளங்குபவன்

பரனாய் பராபரம் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. – (திருமந்திரம் – 61)

சிவபெருமான் ஆகமங்களின் மூலமாக பரம்பொருளை காட்டி அருளினான். அவனே இந்த உலகைத் தாங்கி நின்று சிவதர்மத்தை போதிக்கிறான். தேவர்கள் வணங்கி வழிபடும் அந்த நந்திபெருமான் ஆகமங்களில் அறிவாய் விளங்குகிறான்.


அனுபவம் அவசியம்!

அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே. – (திருமந்திரம் – 60)

சிவபெருமான் அருளிய தெய்விக ஆகமங்கள் விண்ணில் வாழும் தேவர்களும் புரிந்து கொள்ள அரிதான பொருள்கள் உடையவை. அவற்றை எண்ணிப் பார்த்தால் எழுபது கோடி நூறாயிரம் வரும். அப்பொருள்களை அறிந்து கொண்டாலும் அவை அனுபவத்தில் வரா விட்டால், அவையெல்லாம் நீர் மேல் எழுதப்பட்ட எழுத்து போல் பயன்படாமல் போகும்.


தியானத்தால் பிறவிப் பெருங்கடல் நீந்தலாம்

நரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத்து ஒருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடநது எய்த லாமே. – (திருமந்திரம் – 49)

விளக்கம்:
நம்முடைய ஆன்மா மற்றும் ஆன்மாவை கட்டியிருக்கும் தளை ஆகியவற்றின் தலைவனான சிவபெருமானை நினைத்திருப்போம். மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவை ஒருங்கே இருக்கச் செய்ய வல்லவர் அலைகள் நிறைந்த பாவக்கடலை நீந்தி முக்தி எனும் கரையை அடையலாம்.

மனம், உடல், ஆன்மா ஆகியவை ஒருங்கிணைந்து இருக்கும் நிலை தியானமாகும். தியானப் பயிற்சியினால் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்கலாம்.

(நரை – பழமை,  பசு – ஆன்மா, பாசம் – தளை, உள்ளி – நினைத்து,  திரை – அலை)

Let us think of our Lord, who is the master of this body and soul.
Those who can make their mind, body and soul be concentrated together,
are able to swim this ocean of sin
and reach the shore of Mukthi.