தியானத்தினால் சிவனருள் பெற்று மாயையை சிதைக்கலாம்

அறிவாய சத்தென்னு மாறா றகன்று
செறிவான மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.  –  (திருமந்திரம் – 617)

விளக்கம்:
நம்முடைய மனம் தியானத்தில் நிலைக்கப் பெற்றால், நிலையில்லாததாகிய முப்பத்தாறு தத்துவங்கள் நீங்குவதை உணரலாம். நம் முன்னே மிகுதியாக இருக்கும் மாயை சிவனருளாலே சிதையும். அந்த சிவபெருமானை விட்டு என்றும் பிரியாதிருக்கும் பேரருளைப் பெற்றிடலாம். தியான வழியில் செல்பவர்கள் எல்லாம் இந்த நிலையை உணர்ந்திடலாம்.

அசத்து – நிலையில்லாதது,   ஆறாறு – முப்பத்தாறு,   செறிவு – மிகுதி,    நெறி – வழி


தியானத்தில் கடல் போன்ற ஆன்மாவை உணரலாம்

நடலித்த நாபிக்கு நால்விரன் மேலே
மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே
கடலித் திருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.  –  (திருமந்திரம் – 616)

விளக்கம்:
நடுவில் உள்ள கொப்பூழுக்கு நான்கு விரல் அளவு மேலேயும், குரல் தோன்றும் இடமான தொண்டைக்கு இரண்டு விரல் அளவு கீழேயும் உள்ளது அநாகதச் சக்கரம். அங்கே கடல் பொங்கும் ஒலியை உணர்ந்து தியானிக்க வல்லவர்கள், இந்த உடலுக்கு தலைவனான ஆன்மாவை அறிந்தவர் ஆவார்கள்.

அநாகதச் சக்கரமாகிய இருதயப் பகுதியில் மனத்தை நிறுத்தி தியானம் செய்தால், உள்ளே கடல் போன்ற ஆன்மாவின் இயல்பை உணரலாம்.

மடலித்த – இதழ் பொருந்திய,  வாணி – குரல் தோன்றும் இடம்,  கடலித்து – கடலின் தன்மையாய்,   சடலம் – உடல்


தினமும் ஒரு நாழிகை பிராணாயாமம்

முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலமிடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயர்நிலை வானவர் கோனே.  –  (திருமந்திரம் – 615)

விளக்கம்:
மூன்று குணங்களான தாமத, இராச, சாத்துவிகம் ஆகியவற்றால் ஏற்பட்ட இருள் நீங்க, உயிர்ப்பை மூலத்திடத்து சிக்கெனெப் பிடித்து முறைப்படி மூச்சுப் பயிற்சி செய்வோம். இதை தினமும் காலையில் ஒரு நாழிகை பயின்று வந்தால், சிவபெருமான் நம் உயிரை நல்ல முறையில் நிலை நிறுத்தி வைப்பான்.

வானவர் கோன் – தேவர்களின் தலைவனான சிவபெருமான்


தியானத்தினால் மன இருள் நீங்கும்

இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசந் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே.  –  (திருமந்திரம் – 614)

விளக்கம்:
அறியாமையினால் நமது நெஞ்சம் இளைத்து இருட்டறையாகிறது. அந்த இருள் நீங்க, தியானத்தின் போது தோன்றும் மூன்று மண்டலங்களிலும் பொருந்தி இருந்து, அன்புடன் முதுகுத்தண்டு வழியாக குண்டலினியை மேலே ஏற்றி குற்றம் நீங்கப் பெறுவோம். அப்படிச் செய்தால் சோர்வு நீங்கப் பெற்று மனத்தின் இருள் நீங்கி ஏற்றம் பெறலாம்.

மண்டலம் மூன்று – சூரியன், சந்திரன், அக்கினி,     பாசம் – அன்பு,    துரு – குற்றம்,    மார்கழி – மா கழிதல், இருள் கழிதல்


தியானத்தில் மூன்று மண்டலங்களைக் காணலாம்

அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு
அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே.  –  (திருமந்திரம் – 613)

விளக்கம்:
சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று மண்டலங்களில், ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு தன்மை உண்டு. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு தேவர் உண்டு. அத்தேவர்கள் அவரவர் மண்டலத்தில் இருந்தவாறு ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள்.

தியானம் செய்பவர்கள் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று மண்டலங்களிலும் பொருந்தி இருப்பார்கள்.


தியானித்தினால் நெடுங்காலம் வாழலாம்

கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டல மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே.  –  (திருமந்திரம் – 612)

விளக்கம்:
யோகியர் தாங்கள் எடுத்துக் கொண்ட விரதம் குறையாமல் தியானத்தில் ஒன்றியபடி, முதுகுத்தண்டு வழியாக குண்டலினியை மேலே ஏற்றுவர். அவர்கள் சந்திரன், சூரியன், அக்கினி ஆகிய மூன்று மண்டலங்களிலும் ஒரு சேர வளர்வார்கள். அவர்களின் உடல் உயிரை விட்டு  பிரியாது நெடுங்காலம் நிலைத்து இருக்கும்.

ஒக்க – ஒரு சேர,  பிண்டம் – உடல்,   ஊழி – நெடுங்காலம்


தியானம் மரண பயத்தை நீக்கும்

பள்ளி அறையிற் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்
ஒள்ளி தறியிலோ ரோசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே.  –  (திருமந்திரம் – 611)

விளக்கம்:
தியானம் செய்பவர்க்கு பள்ளியறையாகிய உள்ளம் ஒளிமயமாக இருக்கும், அங்கே இருள் கிடையாது. அவர்களுக்கு கொள்ளியறையாகிய சுடுகாட்டின் சூட்டைப் பற்றிய கவலை  இராது. இந்த நுண்ணறிவைப் பெற்ற யோகியர், தாங்கள் காணும் உள்ளொளி நாலு காத தூரம் நீண்டிருப்பதைக் காணலாம். அந்த ஒளிமயமான வெள்ளி அறையிலே அச்சத்திற்கு இடமே கிடையாது.

ஒள்ளி – ஒண்மை, நுண்ணறிவு,   ஓசனை – நாலு காத தூரம்,   விடிவு – அச்சம்


தியானம் – ஆறு ஆதார நிலைகளில் ஐந்து வகை ஒளியைக் காணலாம்.

உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.  –  (திருமந்திரம் – 610)

விளக்கம்:
தியானத்தின் போது ஆறு ஆதாரங்களில் தோன்றும் ஐந்து வகை அக்கினியின் ஒளியினால், அக இருள் நீங்கும். ஐந்து தன்மாத்திரைகளில் சிறந்ததாகிய சத்தம் ஒடுங்குமாறு தியானம் செய்தால், நமக்கெல்லாம் புகலிடமாகிய  ஈசன் திருவடியை அடையலாம்.

ஆறு ஆதார நிலைகள் – மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவநடு. உள்ளங்கி (உள்ளொளி) ஐந்து – மூலாக்கினி, வடவாக்கினி, மின்னல் அக்கினி, கதிரவன் அக்கினி, திங்கள் அக்கினி. தன்மாத்திரைகள் ஐந்து – சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்.

அதிக்கின்ற – சிறக்கின்ற


தியானத்தில் பராசக்தியைக் காணலாம்

நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.  –  (திருமந்திரம் – 609)

விளக்கம்:
தியானத்தின் போது உணரக் கூடிய  நுட்பமான பத்து ஓசைகள் – மணி, கடல், யானை, புல்லாங்குழல், மேகம், வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் ஆகியயவை ஆகும். இவற்றையும் கடந்து செல்வதை தியானத்தின் நோக்கமாகக் கொள்வோம். அவ்வோசைகளின் முடிவிலே இருப்பவள் அன்னை பராசக்தி. நல்ல யோகம் இருக்கும் இடம் அதுவே. அங்கே நீலகண்டப் பெருமானைக் காணலாம்.


தியானம் செய்பவர்கள் கடவுளை வாசனையாக உணர்வார்கள்

ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துய ராய்நிற்கும்
ஓசை யதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே.  –  (திருமந்திரம் – 608)

விளக்கம்:
தியானத்தின் மூலம் ஈசனை உணர வல்லவர்கள், அந்த ஈசனின் இயல்பைப் பெறுவார்கள். அவர்களுக்கு தேவர்களின் நட்பு கிடைக்கும், அன்பின் இயக்கத்தையும் உயிராய் நிற்கும் நாதத்தையும் உணர்வார்கள்.  பூவிலிருந்து வெளிப்படும் நறுமணம் போல, ஈசனை அந்த நாதத்தில் உணரலாம்.