ஆயுள் பரீட்சை

மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில்
எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற்
பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே – 776

விளக்கம்:
முந்தைய பாடல்களில், மூச்சுக்காற்றைக் கவனித்தால் ஆயுளை அறியலாம் என்பதைப் பார்த்தோம். நம்மிடம் இருந்து வெளியேறும் மூச்சுக்காற்று, பத்து விரற்கடை அளவு நீண்டால் ஆயுள் இருபத்து எட்டு ஆண்டுகளாம். பதினைந்து விரற்கடை அளவு நீண்டால், ஆயுள் இருபத்து ஐந்து ஆண்டுகளாம்.


ஆயுள் அறியும் வகை

இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அவ்வகை ஐம்பதே யென்ன அறியலாம்
செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின்
முவ்வகை யாமது முப்பத்து மூன்றே – 775

விளக்கம்:
முந்தைய பாடலில், மூச்சுக்காற்றைக் கவனித்தால் ஆயுளை அறியலாம் என்பதைப் பார்த்தோம். நம்மிடம் இருந்து வெளியேறும் மூச்சுக்காற்று, எட்டு விரற்கடை அளவு நீண்டால் ஆயுள் ஐம்பது ஆண்டுகள் என்பதை அறியலாம். ஒன்பது விரற்கடை அளவு நீண்டால் ஆயுள் முப்பத்து மூன்று ஆண்டுகளாம்.


மூச்சுக்காற்றை வைத்து ஆயுளைக் கணிக்கலாம்

ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும்
தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்
ஆறொரு பத்தாம் அமர்ந்த இரண்டையுந்
தேறியே நின்று தெளிஇவ் வகையே  – 774

விளக்கம்:
நம்மிடம் இருந்து வெளியேறும் மூச்சுக்காற்று, ஆறு விரற்கடை அளவு நீண்டால் நம்முடைய ஆயுள் எண்பது ஆண்டுகளாம். ஏழு விரற்கடை நீண்டால் ஆயுள் அறுபது ஆண்டுகளாம். நாம் உள்ளே இழுக்கும் மூச்சு, மற்றும் வெளியே விடும் மூச்சு ஆகிய இரண்டையும் கவனித்து ஆராய்ந்தால் நம்முடைய ஆயுளை கணிக்கலாம்.


நம் தலைவனாகிய சிவபெருமான்

தலைவன் இடம்வலஞ் சாதிப்பார் இல்லை
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவன் இடம்வலந் தன்வழி நூறே – 773

விளக்கம்:
நம் தலைவனாகிய சிவபெருமானை நினைத்து, இட நாடி, வல நாடி ஆகியவற்றில் கவனம் செலுத்தி நாம் யோகம் செய்வது இல்லை. இட நாடி, வல நாடி ஆகியவற்றை உற்று நோக்கி சிவபெருமானை நினைத்து, யோகம் செய்து வந்தால், பராசக்தியும் நமக்கு அருள் தருவாள். அப்படி யோகசாதனை செய்பவர்களுக்கு ஐம்புலன்களும் வசப்படும், சர்வ சாதாரணமாக நூறாண்டுகள் வாழ்வார்கள்.


பூ மேல் அமரும் காற்றைப் போல லேசாக உணர்வோம்

ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமே உறைகின்ற நன்மை அளித்திடும்
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடும்
தாமே உலகில் தலைவனு மாமே – 772

விளக்கம்:
நம்முடைய ஒவ்வொரு மூச்சுக்காற்றும், தாமே அழிந்து வெளியேறுகிறது. மூச்சுக்காற்றின் இயக்கத்தை உற்று நோக்கி தியானித்து வந்தால், அம்மூச்சுக்காற்றினில் நாமே உறைவதை உணரலாம். அதை உணரும் போது நாம் பூமேல் இருப்பதைப் போல லேசாக உணரலாம், அதற்கான பயிற்சி தானே கிடைக்கும். நம்மை நாமே லேசாக உணரும் போது, இந்த உலகமே நம் வசப்படும்.


நம் மனம் பழைய ரேடியோ போல இரைச்சல் மிகுந்தது

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை உணர்ந்த வுணர்வது வாமே – 771

விளக்கம்:
நாம் சும்மா இருந்தாலும், நம்முடைய மனம் சும்மா இருப்பதில்லை. நம் மனம் இரைச்சல் மிகுந்தது, அது இது என்று ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறது. யோகப்பயிற்சியின் நோக்கம், நம் மனம் சத்தம் இல்லாமல் அமைதி ஆகிவிட வேண்டும் என்பதாகும். பொதுவாக, நம்முடைய தியான நிலையில், மனத்தில் பலவித எண்ணங்களுடன் ஈசன் ஆங்காங்கே தென்படுவான். மனத்தில் எண்ணம் இல்லாமல் ஓசை அடங்கியவர் ஈசனைப் பெரிதாக நினைப்பார்கள். ஈசனும் அவர்களின் நெஞ்சில் நிலையாக அமர்வான். தொடர்ந்த பயிற்சியால் எண்ணமெல்லாம் ஈசனே ஆவான்.


ஆயுளை பரீட்சிக்கும் முறை

வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தமம் மிக்கிடில் ஓராறு திங்களாம்
அத்தம் மிகுத்திட் டிரட்டிய தாயிடில்
நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே – 770

விளக்கம்:
நம்முடைய ஆயுளுக்கு ஏதேனும் ஆபத்து இருக்கிறதா என்பதை நாமே ஒரு சிறிய சோதனை செய்து தெரிந்து கொள்ளலாம். அது பற்றி திருமூலர் இவ்வாறு கூறியிருக்கிறார் – நம்முடைய கையை எடுத்து நம் தலையின் மேல் வைத்து கவனித்துப் பார்க்க வேண்டும். கையில் கனமில்லாமல், வழக்கம் போல் சாதாரணமாக நாம் உணர்ந்தால், நம் ஆயுளுக்கு இப்போதைக்கு ஏதும் ஆபத்து இல்லை. கை கொஞ்சம் கனத்துத் தோன்றினால், நம்முடைய ஆயுள் இன்னும் ஆறு மாதங்களாகும். கை மிகவும் கனத்து மிகுந்த எடையுடன் தோன்றினால், ஆயுள் இன்னும் ஒரு மாதமாகும்.


சிவன் மலர்ந்திருப்பதைக் காணலாம்

காணலு மாகும் பிரமன் அரியென்று
காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்
காணலு மாகுஞ் சதாசிவ சத்தியும்
காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே – 769

விளக்கம்:
யோகத்தில் ஒன்றி இருப்பவர்களுக்கு, சிவபெருமான் ஏழு சக்கரங்களிலும் வந்து அமர்வான் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். மலர்ந்திருக்கும் அச்சக்கரங்களில், சிவபெருமானை பிரமனாக, அரியாக, உருத்திரனாக, சதாசிவ சக்தியாக கலந்திருப்பதைக் காணலாம்.


சிவன் கருப்பட்டி போல் இனிப்பான்

வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்
ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி இருப்பிடங் காணலு மாகுமே – 768

விளக்கம்:
சிட்டனாகிய சிவபெருமான் நம்முள்ளே வந்து அமரும் போது, ஆறு ஆதாரச் சக்கரங்களும், நம் தலையின் உச்சியில் உள்ள சகசிரதளச் சக்கரமும் மலர்ந்து, நமக்கு ஒரு சிறந்த ஆன்மிக அனுபவத்தைக் கொடுக்கும். யோகத்தில் ஒன்றி இருக்கும் உபாயத்தை அறிந்தவர்கள், சிவபெருமானைத் தம்முள்ளே, கருப்பட்டி போல் இனிப்பதை உணர்வார்கள்.


ஒலியும் ஒளியும் சேர்ந்தது போல!

அவன்இவ னாகும் பரிசறி வாரில்லை
அவன்இவ னாகும் பரிசது கேள்நீ
அவன்இவன் ஓசை ஒளியினுள் ஒன்றிடும்
அவன்இவன் வட்டம தாகிநின் றானே – 767

விளக்கம்:
சிவனருள் பெற்று தாமே சிவம் ஆகும் தன்மையை, யாரும் இங்கே அறிவதில்லை. அத்தன்மை பெறுவதால் கிடைக்கும் பரிசு என்ன என்பது தெரிந்தால், நாமும் சிவத்தன்மை பெறும் முயற்சியில் ஈடுபடுவோம். நாம் காணும் காட்சிகளில் ஒளியும், ஒலியும் பிரிக்க முடியாதபடி சேர்ந்திருப்பதைப் போல, சிவத்தன்மை பெற்றவர்கள் சிவனுடன் ஒன்றியிருப்பார்கள். சீவனும், சிவனும் முதலும் முடிவும் இல்லாத வட்டமாகிய பிரணவம் ஆகி என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.