தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென்றே அஞ்சலி அத்தனாய்
எண்ணி இறைஞ்சாதார்ககு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.  –  (திருமந்திரம் – 508)

விளக்கம்:
நாம் கொடுக்கும் தானம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், சிவபெருமானே நம் முன்னே நின்று ஈகின்றான் எனக் கை கூப்பி வணங்கிக் கொடுக்க வேண்டும். நிலத்தளவு தானம் செய்தாலும், மலையளவு தானம் செய்தாலும், ஈசனை நினையாமல் கொடுத்தால் தானம் கொடுத்தவரும் தானம் பெற்றவரும் மீள முடியாத நரகக் குழியிலே விழுவார்கள்.


தானம் செய்தால் நரகம் தவிர்க்கலாம்

ஆமாறு அறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும்
காமாதி விட்டோ ர்க்குந் தரல்தந்து கற்பிப்போன்
போமா நரகில் புகான்போதங் கற்கவே.  –  (திருமந்திரம் – 507)

விளக்கம்:
நல்லவர்க்குத் தானம் செய்வதன் பயனை அறியாதவர் பஞ்ச மாபாதகர் ஆவார்.  குற்றம் இல்லாத சிவனடியார்களுக்கும் , சிவஞானம் அளிக்கும் குருக்களுக்கும், காமம் முதலிய குற்றங்களை விட்ட சிவயோகியர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தானம் செய்வதைப் பற்றிச் சொல்லித்தர வேண்டும்.  அப்படித் தானம் செய்து பிறருக்கும் கற்பிப்பவர்கள் ஞானம் பெறுவார்கள். தானம் அறியாத பாதகர்கள் செல்லும் நரகத்திற்கு அவர்கள் செல்ல மாட்டார்கள்.


இயம நியமத்தில் இருப்பவர்க்கே தானம் செய்ய வேண்டும்

ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்க்களுக்கு
ஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே.  –  (திருமந்திரம் – 506)

விளக்கம்:
யோக நெறியில் சொல்லப்படும் இயம நியமங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கே தானம் செய்ய வேண்டும். இயம நியமங்களில் இருந்து விலகினால் ஏற்படும் தீமைகளைப் பற்றித் தெரிந்தும் அந்நெறியில் விரும்பித் தங்காதவர்களுக்குத் தானம் செய்யக்கூடாது. அது பெரும்பிழை ஆகும்.

இயமம் – தவிர்க்க வேண்டிய தீய விஷயங்கள். நியமம் – கடைபிடிக்க வேண்டிய நல்ல பழக்கங்கள்.


ஒழுக்கம் இல்லாதவர்க்குத் தானம் செய்ய வேண்டாம்

கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே.  –  (திருமந்திரம் – 505)

விளக்கம்:
ஒழுக்கமும் தவமும் இல்லாத வேடதாரிகளுக்குத் தானம் செய்வது, வறட்டுப் பசுவை வணங்கி  அதற்கு உணவளித்து அதன் பாலைக் கறந்து குடிப்பதைப் போல பயன் இல்லாத செயலாகும். காலம் கடந்து பயிர் செய்வது போன்ற அவ்விதத் தானத்தைத் தவிர்க்க வேண்டும்.

தகுதி இல்லாத வேடதாரிகளுக்கு தானம் செய்வது எந்தவிதப் பயனையும் தராது.