வேதத்தின் சிறப்பு

வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. – (திருமந்திரம் – 51)

விளக்கம்:
வேதத்தில் கூறப்படாமல் விடுபட்ட அறம் எதுவும் இல்லை. படித்து உணர வேண்டிய அறம் எல்லாமே வேதத்தில் உள்ளன. அறிஞர்கள் வீண் வாக்குவாதத்தை விட்டு பொருள் வளம் மிகுந்த வேதத்தை ஓதி முக்தி பெற்றார்கள்.

No Dharma is left in the Vedas.
All the necessary Dharmas have been described in Vedas.
The wise people don't argue but learn
the Vedas and attain Mukthi.

சத்தாதி நான்கிலும் இளையராஜா

உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே. – (திருமந்திரம் – 1593)

விளக்கம்:
குண்டலினி சிரசினில் பொருந்தியிருக்கும் நிலை சமாதியாகும். அதுவே திருவடிப் பேறுமாகும். நாம் அந்நிலை அனுபவிக்கும் போது பேச்சு அற்று போகும், உணர்வு அழிந்து நான் என்ற நிலை மறந்து போகும். அலையில்லாத தெளிந்த நீரைப் போன்ற சிவத்தன்மை அனுபவமாகும். நான்கு வகை ஓசைகளான செவியோசை, மிடற்றோசை, நினைவோசை, நுண்ணோசை ஆகியவற்றைக் கடந்து விடலாம். அந்த சிவபெருமான் நம்மை நம்முடைய உண்மையான சொரூபத்தில் இருத்தினான், அதனால் பேச்சற்றுப் போனோமே.

சமாதி நிலையில் சிரசினில் இறைவன் திருவடியை மட்டுமே உணர்ந்திருப்போம். மற்ற எல்லா உணர்வுகளும் அற்றுப் போகும்.

சத்தாதி என்பது நான்கு வகை ஓசைகளைக் குறிக்கும். இது பற்றி எளிதாகப் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், இளையராஜா ரசிகர்களை வைத்து உதாரணம் சொல்லலாம். முதலில் செவியோசை, நம் காதில் விழும் சுற்றுப்புற ஒசை. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு ராஜாவின் இசை தவிர மற்ற இசை கேட்டால் காது சிவந்து ஒவ்வாமை ஏற்படுகிறது. அடுத்து மிடற்றோசை, நம் தொண்டையிலிருந்து வந்து நமக்கே கேட்கும் ஓசை. ராஜாவின் பாடல்களைக் கேட்டு ஹம் செய்வோமே, அதேதான். மூன்றாவது நினைவோசை, அந்த தென்றல் வந்து பாட்டு மண்டைக்குள்ளயே சுத்திகிட்டு இருக்குன்னு சொல்வாங்களே, அதேதான். ஒரு முறை கேட்ட பாட்டு திரும்பத் திரும்ப நினைவில் சுற்றி வரும் ஓசை அது. கடைசியாக நுண்ணோசை, இது அவ்வளவு எளிதாகக் கேட்க முடியாதது. நம் உடலினுள் ரத்தம் பாய்வது, மூச்சு உள்ளே சென்று வருவது போன்ற கேட்க முடியாத நிறைய ஓசைகள் உண்டாம். ஒரு பூ மலர்ந்து விரியும் போது அங்கே ஒரு நுண்ணோசை நிகழுமாம். ராஜா ரசிகர்களைக் கேட்டுப் பாருங்கள், மனம் நெகிழும் ஓசையை நிறைய முறை கேட்டிருப்பதாகச் சொல்வார்கள்.

In the state of Samadhi, we'll be speechless,
There will be no other feelings. Our egotism will be dissolved.
We'll be unite with Lord Siva. We'll not hear any sound surround us.
The Lord will keep us in our natural state .

தியானத்தால் பிறவிப் பெருங்கடல் நீந்தலாம்

நரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத்து ஒருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடநது எய்த லாமே. – (திருமந்திரம் – 49)

விளக்கம்:
நம்முடைய ஆன்மா மற்றும் ஆன்மாவை கட்டியிருக்கும் தளை ஆகியவற்றின் தலைவனான சிவபெருமானை நினைத்திருப்போம். மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவை ஒருங்கே இருக்கச் செய்ய வல்லவர் அலைகள் நிறைந்த பாவக்கடலை நீந்தி முக்தி எனும் கரையை அடையலாம்.

மனம், உடல், ஆன்மா ஆகியவை ஒருங்கிணைந்து இருக்கும் நிலை தியானமாகும். தியானப் பயிற்சியினால் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்கலாம்.

(நரை – பழமை,  பசு – ஆன்மா, பாசம் – தளை, உள்ளி – நினைத்து,  திரை – அலை)

Let us think of our Lord, who is the master of this body and soul.
Those who can make their mind, body and soul be concentrated together,
are able to swim this ocean of sin
and reach the shore of Mukthi.

வேயன தோளிக்கு வேந்தன்

போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே. – (திருமந்திரம் – 42)

விளக்கம்:
சிவபெருமானை விரும்பிச் சென்று புகழ்வார் பெறுவது, நான் என்னும் அகங்காரம் அழிந்து சிவபோதம் அடையும் வரமாகும். மாயைகளில் சிக்கி தன்னிடம் வராதவர்களுக்கும், மூங்கில் போன்ற தோள் உடைய உமையின் கணவனான சிவபெருமான் வந்து அருள்வான்.

Those who seek the Lord will get their
egotism destroyed and will be in Grace of Siva.
Some may be caught in maya and forget the Lord,
For them too, the Lord, husband of Sakthi, come closer.

சிவன் பார்வையிலிருந்து ஓடி ஒளிய வேண்டாம்

குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்
மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே. – (திருமந்திரம் – 40)

விளக்கம்:
சிவபெருமானைத் தாழ்மையுடன் வணங்கி அவன் திருவடியை நாடி இருப்போம். சிவன் திருவடி செம்பொன்னின் ஒளியைப் போன்று பிரகாசமாய் இருக்கும். நாம் அவனிடம் இருந்து ஓடி ஒளிய நினைக்காமல் வணங்கியிருந்தால், அந்த ஈசன் நம்மை புறக்கணிக்காமல் நம்முள் புகுந்து நிற்பான்.

Humble and meek, let us seek the Lord's feet,
Which can be compared to the shine of purest gold.
Don't try to hide yourself from the Lord.
For those who praise Him, He won't neglect them. He'll enter their heart.

என் வழி – தனி வழி

ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே. – (திருமந்திரம் – 35)

விளக்கம்:
சிவபெருமான் தனக்கென தனி வழி உடையவன். அப்பெருமானைப் போற்றுவோம், போற்றிப் புகழ்வோம். அவ்வாறு புகழ்ந்தால் அந்த ஈசன் மேலுலகத்தையும், நிலவுலகில் உள்ள எட்டுத் திசைகளையும் நமக்கு அருள்வான். அவற்றை நம் விருப்பப்படி ஆளலாம்.

The Lord has His own way.
Let us praise and sing over Him.
If we praise him, He'll grant us all the eight directions
and the Celestial World, we can rule over them.

கண்ணகத்தே நின்று காதலித்தேனே!

மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே. – (திருமந்திரம் – 31)

விளக்கம்:
சிவபெருமான் அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு வெளிப்பட்டு அருள்வான். மண்ணுலகில் வாழும் மனிதர்களுக்கு மனித வடிவிலும், வானுலகில் உள்ள தேவர்களுக்கு தேவ வடிவிலும், முக்தி அடைந்தவர்களுக்கு வீடு பேறு தருபவனாகவும், சித்திகளை விரும்பியவர்களுக்கு சித்தனாகவும் விளங்குகிறான். அவன் இனிய பாடல்களின் இன்னிசையாகவும் விளங்குகிறான். அப்பெருமானின் அருள் பெற்று அன்பினில் நின்றேனே!

(வேதகம் – சித்து, கண் – அருள்)

The Lord shows Himself in different forms
according to every one's nature.
For human as human, for Devas as Deva, For Sidhas as sidha.
He is the music of divine song. Let us be in love of His Grace.

வணங்கி நின்றார்க்கு வழித்துணை அவனே

இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. – (திருமந்திரம் – 28)

விளக்கம்:
எல்லா உயிர்களுக்கும் இணக்கமாய் இருக்கிறான் சிவபெருமான். அவன் இல்லாத இடம் என்று எதுவும் இல்லை. உலகின் அனைத்துப் பொருள்களிலும் பின்னியவாறு விரவி உள்ளான். இறந்தகாலம், எதிர்காலம் எல்லாம் அவனே.  தேவர் உலகின் தலைவனான அவன் தனக்கென்று எந்த செயலும் இல்லாமல் இருக்கிறான். அவன் தன்னை வணங்கி வழிபடுபவர்க்கு வழித்துணையாக வருவான்.

(பிணங்கி – பின்னியவாறு, உணங்கி – செயலற்று)

He comply with every one, He exists every where.
He intertwined with every thing in this world.
He is the past and future. He is the Lord of Amaravati.
He'll be a guide for those who worship Him.

படர்ந்து நின்றான் பாரகம் எங்கும்

தொடர்ந்துனின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றாம்கம லம்மலர் மேலே
உடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே. – (திருமந்திரம் – 26)

விளக்கம்:
நம்மைத் தொடர்ந்து நிற்கும் சிவபெருமானை வணங்குவோம். அவன் உலகின் அனைத்திலும் பரவி உள்ளான். இந்த உலகைக் கடந்தும் அவன் இருக்கிறான். நமது சகசிரதள ஆயிரம் இதழ் தாமரை மலரிலே வாசம் செய்கிறான். அந்த சிவபெருமானை வணங்கி இருந்தால், அவனது திருவடியை அடையும் பேறு பெறலாம்.

The Lord is continuously following us.
He spread over every thing in this world,
He exists beyond this world too, He resides in our Sahasrara.
If we worship Him, we can reach His Holy feet.

அல்லும் பகலும் அருளுகின்றான்

வல்லவன் வன்னிககு இறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே.  –  (திருமந்திரம் – 23)

விளக்கம்:
எல்லாம் வல்ல ஆற்றல் உடையவன் நம் சிவபெருமான். கடலின் நடுவே அக்கினியை நிறுத்தி, கடல் நீரை எல்லை மீறாமல் நிறுத்தி வைப்பவன் அவன். அப்படிப்பட்ட நம் இறைவனை இல்லை என்று சொல்லி மறுக்காதீர்கள், அவன் இரவும் பகலும் எல்லா உயிர்களுக்கும் அருள் செய்தவாறு இருக்கிறான்.

Lord Siva, He is the God with capability.
He set fire amidst the ocean to prevent it crossing the limit.
Do not say He does not exist.
He is the one, who bless with grace for all the beings, day and night.